வானவராயினும் - எங்கும் செல்லும் வல்லமையுடைய தேவர்களும் என்று உம்மை உயர்வு சிறப்பு. தனி துன்னரும் - வானவர்கள் கூட்டமாய் வருவதற்கு ஒரு காரணங் கற்பித்தவாறு. தேவக்கூட்டங்கள் கயிலைக்கு வழிபடச் சென்று நிற்கும் முறைமைபற்றித் திருமலைச்சிறப்பு (14 - 15 பாட்டுக்கள்) பார்க்க. வானவரும் துன்னரும் தனிச் (ஒப்பற்ற - பெரிய) சுரம் - என்று கூட்டியுரைப்பதுமாம். முன்னினார் - விரைவுடள் முன்னேறிச்சென்றனர். மன்னினார் - என்றபாடம் பிழை. இருளின் - இரவும் பகலும் விடாது செல்லும் (1619) நாயனாரது செலவில் இரவில் நிகழ்ந்தமை இப்பாட்டாற் கூறிப், பகலில் நிகழ்ந்தமை மேல்வரும் பாட்டாற் கூறும் அமைதி காண்க. பகலில் கற்சுரம் (1618) செல்லத் தொடங்கியவர்க்கு அடுத்து வருவது இரவேயாதலின் அதனை முற்கூறினார். இரவும் (1619) என்ற குறிப்புமது. பகலில் கற்சுரம் செல்லப் போந்த நாயனார் "சிற்றம்பலவர்க், கடலையுற் றாரி னெறிப்பொழிந் தாங்கருக் கன்சுருங்கிக், கடலையுற் றான்கடப் பாரில்லை யின்றிக் கடுஞ்சுரமே" (கோவை 218), "மீள்வது செல்வதன் றன்னையிவ் வெங்கடத்து" (மேற்படி 247) என்றபடி அக் கடுங் கற்சுரத்து இரவில் எங்கேனும் தங்கிச் செல்வரோ? என்று ஐயம் நிகழுமாதலின் அதனை ஒழிப்பார், அற்றன்று! ஏகினார் இரவும்! என்று கூறியவாறுமாம். ஏதம் பெரிது நோக்கி இரவினை முற்கூறியதுமாம். அன்பர் பாதம் - என்பதும் பாடம். 355 1621. (வி-ரை.) கடம் - கடுஞ்சுரம்; காடும். பாலை நிலம். வெய்யவன் - சூரியன். பாலைக்குத் தெய்வம் ஞாயிறு. (ஐயை என்பதும் வழக்கு.) கைபரந்து - கை - பக்கம். கை - கரம் - கதிர் என்றலுமாம். பரந்து - பரத்தலினால் எனக் காரணப்பொருளில் வந்த வினையெச்சம் பரந்து மிக்க பிளப்பு - பரந்ததனால் உண்டாகிய நிலப்பிளவுகள். நாகர்தம் எல்லை - நாகருலகத்தின் அளவும். உம்மை தொக்கது. நாகர் - கீழுலகத்தவர். கதிர் - எரிகின்றன - செங்கதிர்க்கனல் போலும் - என்று கூட்டுக. எரிகின்றன - எரிகின்றவை; பெயர். பொங்கு அழல் தெறு பாலை வெம் நிழல் புக்கசூழல் - நிலவெடிப்புக்கள் தீயை வீசி அழிக்கும் பாலையினது கொடியநிழல் புகுந்த இடம் போன்றுள்ளன என்பது கருத்து. வெந்நிழல் - பாலையின் நிழலும் வெப்பமுடையது என்பது. நிழல் புகும் கதிர்போலும் - நிலப்பிளப்புக்களில் கதிர் நுழையும் தோற்றம், பாலை சுடுகின்றதாதலின் அதன் நிழலிலேனும் புகுந்து ஒதுங்குவோமென்று கருதிப் புகுந்தது போன்றிருந்தது என்பதாம். இது தற்குறிப்பேற்ற அணி. நிழல் - பிளப்புக்களைப் பாலையின் வெந்நிழல் என்றது உருவம்பற்றி எழுந்த உவமம். புக்கு எரிகின்றன புகும்கதிர் போலும் - என்றது தொழில்பற்றி வந்த உவமம். இப்பாட்டினால் பாலையாகிய கடுஞ்சுரத்தின் கடும்பகல் வெம்மைமிகுதி உணர்த்தப்பட்டது. கடும்பகல் பாலைக்குரிய சிறுபொழுது. வெம்மை மிகுதியால் அங்கு முற்றும் நிலம் பிளந்த வெடிப்புக்கள் உள்ளன என்பதும், மேலும் கடிய வெயிலும் எறித்தது என்பதும், இவை யொன்றானும் தயங்காது நாயனார் மேற்சென்றனர் என்பதும் கூறப்பட்டன. திண்மை மெய்த்தவர் - அவ்வாறு வேனிலிற் கடுஞ்சுரஞ் சென்றதற்குத் திண்ணிய மெய்த்தவமே காரணமாம் என்று குறிக்க, உடம்பொடு புணர்த்தி யோதினார். தவத்தின் இயல்புகளுள் உடற்சுகந் தேற்றாது வேனிலிற் கனலிடை நின்று செய்யப்படும் தன்மையும் ஒன்று என்க. "உற்ற நோய் நோன்றல்...தவத்திற் குரு" (குறள்). |