உயிர்கொண்டு உகைக்கும் - அவ்விடத்தில் உயிரால் உகைக்கின்ற; உடம்பு அடங்கவும் ஊன்கெட - உடம்பு முழுதும் உள்ள தசைகள் கெடும்படியாக; சேர்வரும்....செம்மையோர் - சேர்தற்கரிய அக்காட்டினில் புரண்டு புரண்டு சென்றனர் செம்மை நெறி நிற்பாராகிய திருநாவுக்கரசர்; 359 1625. (இ-ள்.) அப்புறம் புரள்கின்ற நீளிடை - அதற்கு மேல் புரண்டு செல்கின்ற நீண்ட வழியின் இடையில்; அங்கம் எங்கும் அரைந்திட - உடல் முழுவதும் தேய்ந்து போகவே; செப்பரும்...ஆதலால் - சொல்லுதற்கரிய கயிலாய மலையினிடத்தில் திரு உள்ளம் சென்று சேருமாதலால்; மெய்ப்புறத்தில்....தப்புற - திருமேனியினது புறத்துறுப்புக்ள் அழிந்த பின்னர் மெல்ல உந்திச் செல்கின்ற முயற்சியும் நீங்க; செயலின்றி - வேறு செயலில்லாதவராய்; செயலின்றி - வேறு செயலில்லாதவராய்; அந்நெறி - அந்த நெறியினிடை; தமிழ் ஆளியார் தங்கினார் - தமிழ் வல்லவராகிய நாயனார் தங்கிக் கிடந்தனர். 360 இந்த நான்கு பாடல்களும் பொருட்டொடர்பு பெற்று ஒரு முடிபு கொண்டு உரைக்க நின்றன. 1622. (வி-ரை.) இங்ஙனம் - முன் 1619 - 1620 - 1621 பாட்டுக்களிலும் கூறியபடி. இரவும் பகற்பொழுதும் - இரவை முன் வைத்துக் கூறியதுபற்றி முன் 1620-ல் உரைக்கப்பட்டது,. பங்கயம் புரை தாள் - அத்திருத்தாள்கள் அடைந்தோரை உய்விக்க வல்லன வாதலின் அவை தேய்ந்து வருந்தினமை கூறலாற்றாது ஆசிரியர் போற்றியருளும் திறம் காண்க. திருவரத்துறை நோக்கி நடந்து சென்ற ஆளுடைய பிள்ளையாரது திருப்பாதங்கள் சிறிது நொந்த செய்தி கூறுமிடத்துப், "பாத தாமரை நொந்தன பைப்பைய" (திருஞான - புரா - 187) என்பதும் இங்குக் கருதத் தக்கது. மங்கை பங்கர்....மறப்பரோ - பரட்டளவும் தாள்கள் தசை தேயவும் மேலும் கைகளால் தாவியும், மார்பினா லுந்தியும், உடலாற் புரண்டு மெல்ல உந்தியும் செல்ல முயல்வதற்குரிய காரணங் கூறத்தொடங்கிக், கைகளால் தாவிச்செல்வதற்கு மனந் தூண்டியதனை இங்கு அறிவிக்கின்றார். மேல் "மெய்கலந்தெழு...பொங்கிட" (1623) எனவும், "நேர் வருங்குறி...ஆர்வம்" (1624) எனவும், "செப்பரும்....ஆதலால்" (1625) எனவும் மேன்மேல் நிகழும் அவ்வச்செயல்களைத் தூண்டிய காரணங்களை அங்கங்கும் உரைத்துச் செல்லுதல் காண்க. காலினாற் செல்லுதல் கூடாதபோது கைகளால் தாவிச் செல்வதற்குச் சிந்தை மறவாமையே போதியதாயிற்று (1622); பின்னர்க் கைகள் கரைந்து சிதைந்தபின் மார்பினால் உந்திச் செல்வதற்கு சிந்தை அன்பும் விருப்பும் மீமிசை பொங்கிட வருவதாய் அதனினும் வலிய மனவெழுச்சியின் தூண்டுதல் வேண்டப்பட்டது (1623); அதன்பின் மார்பு தசை கரைந்து வரிந்த என்பு முரிந்திட, உடல் முழுதாலும் புரண்டு புரண்டு செல்வதற்கு, மேற்சொன்ன இரண்டினும் வலியதாய்க் குறித்து நின்ற சிந்தையின் நேசமும் நீடார்வமும், உயிரைப்பற்றச் சிந்தை முயற்சியேயன்றி அந்த உயிர் முயற்சியால் உடல் அடங்கவும் பற்றி அரைக்கத்தக்க மிக்க வலிய தூண்டுதல்வேண்டுவதாயிற்று (1624); அதன்பின் உடல் எங்கும் அரைந்திடப் புறத்துறுப்பு எல்லாம் அழிந்தமையின் சிந்தை கயிலைச் சிலம்படி சென்றுற, மெல்ல உந்து முயற்சியும் தப்ப, உடல் அந்நெறி தங்கியது என்றிவ்வாறு படிப்படியாய் வைத்துக் கண்டுகொள்க. மறப்பரோ - ஒகார வினா மறவார் என எதிர்மறை குறித்தது, ஆதலின் ஏகுவாராக எனக் காரணக் குறிப்புத் தந்து நின்றது. |