தாவி - கைகளைக் கீழ் ஊன்றிப் பெயர்த்து வைத்தலின் தாவி என்றார். இரண்டுமே - தாள்களின் உதவியின்றி என ஏகாரம் பிரிநிலை. மங்கைபாகர் - மறிப்பரோ? - மறைப்பரோ? - என்பனவும் பாடங்கள். 357 1623. (வி-ரை.) மணிபந்து - மணிக்கட்டு. அசைந்து - கட்டு விட்டு. மெய்கலந்து எழுசிந்தை அன்பு - சிந்தையொரு வழியும் உடல்முயற்சி பிறிதொரு வழியுமன்றி உடம்பின் முயற்சியினை ஏவி அதனுடன் கலந்து எழுகின்ற அன்பு என்றுரைத்தலுமாம். அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட - முன்பாட்டில் மறவாது வைத்த சிந்தை என்று அன்பின் முதிர்ச்சி மட்டில் அமைந்த நிலை கூறப்பட்டது. இங்கு அந்த அன்பு பெரு விருப்பமாகி, அதுவே மேலும் மேலும் அதிகரிக்க, அது பின்னும் உள்ளூறி மேல் வழிய முதிர்ந்த நிலையும் அதனால் ஏவப்பட்ட மேல் முதிர்ந்த செயலும் கூறப்பட்டன. கனல்வெம் பரற்புகை மூளும் - பரல் - பருக்கைக் கற்கள். பரல்கள் கனல் போலப் புகை உமிழ்ந்தன. வினை பற்றிய உவமம். கனலாகிய பரல் என்று கொண்டு உருவமகமாக உரைப்பினு மமையும். புகை மூளும் - கொடிய வெப்பம் குறித்தது. அத்தம் - அருநெறி; பாலைநில வழி; மலைமேல் செல்லும் பாதை. முயங்குதல் - முயற்றுதல். மார்பினால் உந்துதலினால் அந்த வழியினை உடல் தழுவுதல் போன்றது என்றதும் குறிப்பு. வருந்தி - முயன்று என்ற பொருளில் வந்தது. 358 1624. (வி-ரை.) வரிந்த என்பு - மார்பின் இருபுறமும் உள்ள பழு எலும்புகள் ஒன்றேடொன்று தசை நாரினால் வரிந்து கட்டப்பட்டவை போலப் பிணைக்கப்பட்டிருத்தலின் வரிந்த என்றார். நேர்வரும் குறி - அடைதற்கரிய நேரே செல்லும் குறிக்கோள்; குறிப்பு; குறியாவது - ஈசனை நேடு நீர் ஆர்வம் எனப்பட்டது. "பெருகுநிலைக் குறியாளர்" (தாண்). குறை நின்ற என்பது பாடமாயின், நேர்தல் இயலாமையா லாகிய குறைபாடு நின்ற சிந்தை என்று உரைத்துக்கொள்க. உயிர் கொண்டு உகைக்கும் - இங்குச் சிந்தையின் தூண்டுதல் மட்டில் அமைதலின்றி, உயிரின் பெருமுயற்சி முழுதும் உடலை உகைத்தது என்பது. கொண்டு - மூன்றாம் வேற்றுமையில் வரும் சொல்லுருபு. ஆர்வம் உயிர் கொள்ளுதலாவது ஆர்வமிகுதிப்பாட்டினால் உடம்பின் சிறுமுயற்சி உள்ளபோதே உயிர் தனக்குறுதி தேடிக் கொள்ளுதல் வேண்டுமென்று உடல் வலிமை முழுதினாலும் பெருமுயற்சி செய்தல். உடம்பு அடங்கவும் என்ற முற்றும்மையின் கருத்துமிது. ஊன்கெட - மேற்புறமுள்ள தசை முற்றும் அசைந்து தேய. பழுவம் - மலைக்காட்டில். எலும்பாகிய பழுக்கள் என்றுரைப்பாருமுண்டு. புரண்டு புரண்டு - அடுக்குப் பல முறையும் எனப் பன்மையுணர்த்தியதுடன் புரண்டு வழிபடும் புண்ணியப் பேறுபற்றி மனவெழுச்சியுடன் செய்ய நிகழ்ந்தமையும் குறித்தது. "திருவீதி புரண்டுவலங்கொண்டு" (1444) என்றதும் இங்குக் கருதுக. செம்மையோர் - செம்மையோராதலின் சென்றனர்; ஏனை எவர்க்கும் இது அரிதாம் என்றபடி. செம்மையோர் - சிவமாகி நிற்பவர். "திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரசு" என்று இத்தன்மைபற்றியே திருத்தொண்டத் தொகை நாயனாரைத் தேற்றேகாரம் தந்து போற்றுதல் இங்குச் சிந்திக்கற்பாலது. நேரு நீடார்வம் - அடங்கவு முன்கொடச் - என்பனவும் பாடங்கள். 359 |