பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்601

 

1625. (வி-ரை.) அப்புறம் - ஊன்கெடும்வரை புரண்டதன் அப்புறம்.

புரள்கின்ற நீள் இடை - புரள முயலும் நீண்ட அவ்வேளை - அவ்விடத்து.

அரைந்திட - உறுப்பு அழிந்தபின் - என்று கூட்டுக. அரைந்திடலால் என்க.

சிந்தை சென்று உறும் ஆதலால் - மெல்ல உந்தும் - என்று கூட்டுக. அரைந்த நிலையினும் முயல்வதற்குக் காரணம் கூறியபடி.

உறுப்பு அழிந்த பின் - முயற்சியும் தப்புற என்று கூட்டுக. முயற்சியும் செய்ய மாட்டாது நின்றுவிடுதற்குப் புற உறுப்பு எல்லாம் அழிந்தமை காரணம்.

முயற்சியும் - உம்மை சிறப்பு.

புறத்து உறுப்பழிந்தபின் - புற உறுப்பு அழியினும் அக உறுப்பாகிய மனமழியாது கயிலைச்சிலம்படி சென்றுறும் என்பது குறிப்பு.

செயலின்றி - புற உடற்செயல் செய்யும் நிலையின்றி.

நெறி தங்கினார் - நெறியில் தங்கிக் கிடந்தனர். நெறி - கயிலை செல்லும் கற்சுர வழி என்றும், உடல் தங்கினும் சிந்தை சென்றுறுதலின் சிவநெறி தங்கினார் என்றும் உரைக்க நின்றது.

தமிழ் ஆளியார் - உடல் சோர்வுபெற்று முயற்சியின்றிக் கிடப்பினும் மனத்திற்கொண்ட தமிழ்ப் பொலிவு சோராது நின்றமை, மேல், முனிவராம்படியால் வரும் இறைவருடன் பேசுந் திறத்தானும் போற்றுந் திறத்தானும் உணரப்படும் குறிப்பு. மேல் வரும் பாட்டின் குறிப்பு. மேல் வரும் பாட்டின் குறிப்பும் காண்க.

360

வேறு

1626.

அன்ன தன்மையார் கயிலையை யணைவதற் கருளார்
மன்னு தீந்தமிழ் புவியின்மேற் பின்னையும் வழுத்த
நன்னெ டும்புனற் றடமுமொன் றுடன்கொடு நடந்தார்
பன்ன கம்புனை பரமரோர் முனிவராம் படியால்;

361

1627.

 வந்து மற்றவர் மருங்குற வணைந்து, நேர் நின்று,
 நொந்து நோக்கி,மற் றவரெதிர் நோக்கிட, நுவல்வார்,
"சிந்தி யிவ்வுறுப் பழிந்திட வருந்திய திறத்தால்
 இந்த வெங்கடத் தெய்திய தென்?"னென விசைத்தார்.

362

1626. (இ-ள்.) அன்னதன்மையர் - அத்தன்மையனராகிய நாயனார்; மன்னு...வழுத்த - நிலைபெற்ற இனிய தமிழ்ப் பாசுரங்களால் உலகில் மேலும் துதிக்கும் பொருட்டு; கயிலையை...அருளார் - கயிலையைச் சென்று அணைவதற்கு அருள் செய்யதவராகி; நன்னெடும்....உடன்கொடு - நல்ல நீண்ட புனல் நிறைந்த ஒரு தடாகத்தினையும் தம் உடனே கொண்டு;ஒர் முனிவராம்படியால் - ஒரு முனிவராகிய திருவுருவத்துடன்; பன்னகம்புனை பரமர் - நாகத்தை அணிந்து பரமனார்; நடந்தார் - நடந்து வந்தனராகி;

361

1627. (இ-ள்.) வந்து...நோக்கி - வந்து அவரது பக்கத்திற் பொருந்த அணைந்து நேரே நின்று வருந்தி, அவரை நோக்கி; மற்று அவர் எதிர்நோக்கிட - அவரும் தம்மை எதிர் நோக்க; நுவல்வார் - நுவல்வாராகி; "சிந்தி...என்" என - உமது உறுப்புக்கள் எல்லாம் சிந்தி அழிந்திடும்படி வருந்திய திறத்தினால் இந்த வெவ்விய பாலையில் வந்தது என்ன கருதி?" என்று; இசைந்தார் - வினாவினார்.

362

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.