1626. (வி-ரை.) பின்னையுந் தீந்தமிழ் புவியின்மேல் வழுத்த அணைவதற்கு அருளார் - முனிவராம்படியால் - புனல் தடமும் ஒன்று உடன் கொடு - பரமர் - நடந்தாராய் - (1626) - வந்து - அணைந்து - நேர்நின்று நோக்கி - நுவல்வார் - என - இசைத்தார் - என்று இந்த இரண்டு பாட்டுக்களையும் தொடர்புபடுத்தி முடிக்க. அன்ன தன்மையார் - மேல் 1618 முதல் 1625 வரை சொல்லியபடி உணவும் உறக்கமுமின்றிக் கயிலைகாணும் ஒரே நினைவுடன் சேர்ந்து உடற் செயலின்றி நெறியில் தங்கிக்கிடக்கும் அத்தன்மையினர் என்க. வழுந்த - அருளார் என்று கூட்டுக. வழுத்த - வழுத்தும் பொருட்டு. புவியில் தமிழ்வழுத்தக் கயிலை அணைவதற்கு அருளார். அருளார் - அருளாதவராகி. வினையெச்சம். அருளார் - நடந்தார் - என்று முடிக்க. மன்னு தீந்தமிழ் புவியின்மேல் பின்னையும் வழுத்த - இத்தொடரின் சொற்கள் ஒவ்வொன்றும் பொருட் செறிவாகிய காரணக் குறியுடன் நிற்குந் திறம் காண்க. மன்னுதல் - அடியார் மனத்தினுள் எக்காலமும் நீங்காதிருக்கும் தன்மை. தீந்தமிழ் - பொருளினிமையுந் அதற்கேற்ற சொல்லெளிமையும் குறித்தது. இவை அருவத்திருமேனியிற் கண்ட கயிலைப்போற்றித் திருத்தாண்டகங்கள், உருவ வெளிப்பாட்டிற் கயிலைக்காட்சி கண்ட திருவையாற்றுத் திருப்பதிகங்கள், திருமடங் கட்டித் தவஞ்செய்து தங்கிய திருப்பூந்துருத்தித் திருப்பதிகங்கள், பல வகைத் - தனி - அடைவு - நின்ற - முதலிய பொதுத் திருத்தாண்டகங்கள், முதலாக, 1679 - 1680-ல் சிறப்பாய் எடுத்தோதப்பட்ட திருப்பதிகங்கள், திருவங்கமாலை, தமது சிவபூசையின் ஆன்மார்த்தநாயகராகிய திருவாலவாயுடையாரைக் கண்டு கும்பிட்ட பதிகங்கள், இறைவர் நேர் தோன்றக்கண்ட வண்ணங்களைத் துதித்த திருப்பூவணத் திருத்தாண்டகம் "மாயையினுட் புலம்பும் இருவினைகளுக்கு யானல்லேன்" என்ற திருவாரூர்த்தாண்டகம், இறைவரைச் சரண்புகும திருவிருத்தம், திருவடியமர்ந்த திருத்தாண்டகம், இறைவரைச் சரண்புகும் திருவிருத்தம், திருவடியமர்ந்த திருத்தாண்டகம் முதலாயின. புவியின்மேல் - திருக்கயிலை கண்டு சேரப்பெற்று அங்கு அமர்ந்தாலும் தீந்தமிழால் வழுத்தலாமாயினும், புவியின் மேல் வழுத்த வைப்பது ஏனை ஆன்மாக்களின் பொருட்டு இறைவர் வைத்த பெருங்கருணை. தமிழ் வழுத்த - தமிழால் நாயனார் வழுத்தக் கேட்க என்றும், புவியின் மேல்பின் வரும் உயிர்கள் தமிழ்களைத் துணைகொண்டு வழுத்த என்றும் உரைக்க நின்றது. மேல் - மேல்வரும் நிலையுள்ளார் என்ற குறிப்பும் தந்து நின்றது. பின்னையும் - முன் வழுத்தியவை போல என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. "தித்திக்கு மணிவார்த்தை யின்னுஞ் சின்னாட் டிருச்செவியிலருத்திடவும்" (திருவிளை - புரா - பார்க்க.) என்ற திருவாதவூரர் சரிதவரலாறும் இங்கு நினைவு கூர்தற்பாலது. நன்னெடும் புனல் தடமும் ஒன்று உடன்கொடு - நன்மையாவது - தோய்ந்தார்க்குக் கயிலைகண்டு உய்யும் வழிகாட்டுதல். நெடும் புனல் - அளவால் நீளுதலும் வடபாற் கயிலைமலைச் சாரலினின்றும் தென்பால் திருவையாற்று ஓர் வாவியி (1636 - 1637) னளவும் நீளுதலும், பெருமையால் நீளுதலும் கருதி யிவ்வாறு கூறினார். தடம் - இத்தடம் கயிலை மலைச்சாரலில் 15000 அடி அளவு உயரத்தில் இப்போது காணும் மானச்சரோவரம் என்னும் பெரிய ஏரியாயுள்ளதென்பர். தடமும் - தாம் வந்ததேயன்றித் தடமும் என உம்மை இறந்தது தழுவிற்று. தடமும் ஒன்று உடன் கொடு - நாயனார் திருப்பைஞ்ஞீலிக்கு வரும் வழியில் காவுங் குளமும் முன் சமைத்துக்காட்டி (1570), இறைவர் எழுந்தருளியிருந் |