| கொடியவெலா மொன்றாகு மெனக்குடரி னகங்குடையப் படருழந்து நடுங்கியமண் பாழியறை யிடைவிழுந்தார். |
50 (இ-ள்.) வெளிப்படை. சேர்வு இல்லாத சமண சமயத்தை விரும்பி அந்நெறியில் ஒழுகிய தருமசேனருடைய வயிற்றிற் புகுந்த அந்தச் சூலைநோய் வட வைத்தீயும், கொடிய நஞ்சும், வயிரமும், இவைபோன்ற கொடுமை செய்யும் பிறவும் எல்லாம் ஒன்று கூடி வந்ததோ என்னும்படி குடரின் உள்ளே குடையவே, துன்பப்பட்டு நடுங்கி அமணர்களுடைய பாழியில் உள்ள அறையில் விழுந்தனர். (வி-ரை.) அடைவு - அடைதலால் - சேர்தலால் - நலம்பெறும் இடத்தை உணர்த்தி நின்றது. உபசாரம். அடைவு திருத்தாண்டகம் என்றது காண்க. அடைவு இல் - அவ்வாறு அடைந்தின்புறுதற்கு இடமாகாத. அடைவு - ஒழுக்கம் என்பாருமுண்டு. அடைவு இல் - பொருத்தமில்லாத சமணர் கூறும் பொருளியல்பும் குறித்தது. அமண்புரி - சமண சமயத்தை விரும்பி அந்நெறி நின்ற. வடவனல் - வடவா என்ற பேருடன் குதிரை முகமுடைய ஒரு தீ கடலின் அகட்டில் அவியாது ஒடுங்கி உறைவதென்றும், அதுவே ஊழியில் மிக்குப்பெருகிக் கடலைச் சுவறச் செய்து உலகை அழிப்பதென்றும் கூறுவது மரபு. வடவாமுகாக்கினி என்பவர் வடவர். கடலிடை நின்று பெருகுவதால் வயிற்றினிடை நின்று பெருகிக் குடையும் சூலைக்கு உவமானமாயிற்று. வச்சிரம் - வயிரம். மணிகளுள் ஒன்று. தற்கொலை செய்துகொள்வோர் வயிரத்தைப் பொடியாக்கி உண்பர் என்ற வழக்கும் காண்க. வயிரம் வயிற்றினுள்ளே சென்று வயிற்றின் தசைகளையெல்லாம் அறுத்துக் கொன்றுவிடும் என்ப. பிறவும்ஆம் கொடிய எலாம் ஒன்றாகும் என - முன் கூறியவற்றுள் ஒவ்வொன்றே சாவுதரப் போதியனவாகவே இவை எல்லாம் ஒன்று கூடினால் செய்யும் துன்பத்தைக் கருதவைத்த நயம் காண்க. தொழில் பற்றி எழுந்த உவமம். குடைதல் - வயிற்றை மிகவும் உளையச்செய்தல். படர் - துன்பம். "தோற்றா தென் வயிற்றி னகம்படியே குடரோடு தொடக்கி முடக்கியிட ஆற்றேன்", "வயிற்றோடு தொடக்கி முடக்கியிட", "சுடுகின்றது சூலை", "உடலுள்ளுறுசூலை", என்வயிற்றி னகம்படியே பறித்துப் புரட்டியறுத் தீர்த்திடநான் அயர்ந்தேன்", "சலித்தே யென்வயிற்றி னகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன அலுத்தேன்", "வேர்த்தும் புரண்டும் விழுந்தும் மெழுந்தாலென் வேதனையான" என்ற நாயனார் திருவாக்குக்கள் அச்சூலையின் முடுகிய நிலையினை விளக்கும் அகச் சான்றுகளாவன. அமண்பாழி - சமண குருமார் தங்குமிடம். அறை - குருமார் தங்கும் தனியிடம். விழுந்தார் - உடலைத்தாங்கி இருக்கலாற்றாது வசமிழந்து கீழ் விழுந்தனர். வயிற்றிடையும் - இடருழந்து - என்பனவும் பாடங்கள். 50 1316. | அச்சமயத் திடைத்தாமுன் னதிகரித்து வாய்த்துவரும் விச்சைகளாற் றடுத்திடவு மேன்மேலு மிகமுடுகி யுச்சமுற வேதனைநோ யோங்கியெழ வாங்கவர்தாம் நச்சரவின் விடந்தலைக்கொண் டெனமயங்கி நவையுற்றார். |
51 (இ-ள்.) வெளிப்படை. அந்தச் சமணசமயத்தினிடத்துத் தாம் முன்பு பழகிக் கைவந்துள்ள மந்திர முதலிய வித்தைகளாலே தடுக்கவும், மேன்மேலும் அதிகப் பட்டு மிக வளர்ந்து பெருகி வேதனை தரும்படி அந்த நோயானது மேலெழுந்ததனாலே. |