1650. (இ-ள்.) வெளிப்படை. (இவ்வாறாகக்) கண்டும், தொழுதும், வணங்கியும், நுதலிற் கண்ணுடைய சிவபெருமானைப் போற்றியும், கொண்ட திருத்தாண்டகங்களும், குறுந்தொகையும் திருநேரிசையும், அன்பு நிறைந்த திருவிருத்தங்களும் முதலிய பதிகங்களைப் பாடியும், வணங்கித் திருத்தொண்டுகள் செய்து கொண்டபடியே, திருநாவுக்கரசு நாயனார், தேவர்கள் பெருமானாகிய சிவபெருமானுடைய திருவையாற்றில் எழுந்தருளியிருந்தனர். 385 இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண் டுரைக்க நின்றன. 1648. (வி-ரை.) ஐயர் - சிவபெருமான்; வேடம் - திருக்கயிலையி லிருந்த கோலம். திருவையாற்றிற் கோயிலின் கண்ணே இருந்தபடி அக்கோலம் மேற்கொள்ளப்பட்டமையின் வேடம் என்றார். அங்கு அளித்து - ஐயாற்றில் அவர்முன்பு கொடுத்து. அடித் தொண்டர் - "தொண்டனார்" (1645); "தொண்டனார்" (1647); என்றமை காண்க. கயிலையில் தலைவன் கோலங்காணத் தொண்டர் செல்லவும், தலைவர் தாமே தொண்டர் இடத்து வந்து கோலங்காட்டிய கருணைத் திறத்தினை எண்ணிய குறிப்பு. "கண்டே னவர்திருப் பாதம்" என்று திருவடியினையே கண்டு துதிப்பதனால் இங்கு "அடித் தொண்டர்" என்றார். மையல் கொண்டு - மயங்கி. கண்டு மகிழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்த பெருங் கோலம் சேயதாக்கினமையால் காணாது மயங்கி. உளம் மகிழ்ந்திட வருந்தி - முன்னர் மகிந்தவாறே, பின்னும் மனமகிழ்ச்சி பெற்றிருக்கும பொருட்டு வருந்த. மகிழ்ந்திட - மகிழும் பொருட்டு - மகிழ்ந்திடற்காக. "யான்மிக வருந்து கின்றே னேயர்கோ னார்தா முற்ற, ஊனவெஞ் சூலைநீக்கி யுடனிருப்பதனுக்கு" (ஏயர்கோ - புரா - 401) "வருத்தமுறங் காதல்" (1056) என்பன காண்க. இதற்கு இவ்வாறன்றி, "மனமகிழ்வடைதலால் பரவசப்பட்டு வருந்தி" என்பர் சுப்பராய நாயகர். அடித்தொண்டர் உளம் மகிழ்ந்திட ஐயர் கோலம் அளித்து என்று கூட்டியும், மையல் கொண்டு வருந்தி என்று சேர்த்தும் உரைப்பர் இராமநாதச் செட்டியார். அருள் இங்கு மற்று இதுவோ? - என்க. இதுவோ? - இதுமட்டோ. இது என்றது காட்டியதும் அவ்வளவில் சேயதாக்கியதும் இக்குறுகிய கால அளவு என்றபடி. ஐயர் கோலங்காட்டி நின்ற காலம் எத்துணைப் பெரிதாயினும் அதன் ஆராமையால் சிறு கணமாகவே நாயனாருக்குத் தோன்றியது. "மிகுபுலவிப் புணர்ச்சிக்கண், ஊழியா மொருகணந்தா னவ்வூழியொரு கணமாம்" (ஏயர்கோ - புரா. 268) என்றோதியது பேரின்ப அனுபவத்துக்கும் ஒக்குமாதலின் இறைவர் கயிலைக்காட்சி காட்டிநின்றது நெடுநேரமாயினும் அது நாயனாருக்கு ஒரு கணமாகப் புலப்பட, அருள் இதுவோ? (இம்மட்டோ?) என்றமைந்து கொண்டனர் என்க. தெளிந்து - மையல் கொண்டநிலையினின்றும் தேறி. இவ்வாறு தெளிந்தமையால் தாம் அவ்வளவில் மகிழ்ந்து பாடுவாராயினர் என்க. வையம் உய்ந்திடக் கண்டமை என்றும், வையமுய்ந்திடப் பாடுவார் என்றும் கூட்டியுரைக்க நின்றது. வையம் உய்ந்திடக் கண்டமையாவது நாயனார் கண்டதனால் அவரது அத்திருவாக்கைப் பயின்று உலகமும் உய்தியை யடைதல். கண்டமை - கயிலைக்காட்சியின் முன்னும் பின்னும் கண்ட கோலங்கள். முன்கண்ட கோலம் "மாதர்ப்பிறை" என்ற பதிகத்தானும், பின்கண்ட கோலம் திருத்தாண்டக முதலிய பதிகங்களாலும் பெறப்படுவன. ஐயாற்றிற் கயிலை கண்ட காட்சி திருக்கயிலாயப் போற்றித் திருத்தாண்டகப் பதிகங்களாலறியப் |