ஆங்கு அத்தருமசேனரும் நஞ்சுடைய பாம்பினது விடவேகம் தலைக் கொண்டாற் போல மயங்கி மூர்ச்சையடைந்தார். (வி-ரை.) அச்சமயத்திடை.........விச்சைகளால் - சமணர்கள் பல விஞ்சைகளில் வல்லவர்களா யிருந்தார்கள் என்பதறியப்படும். "அமண்சமயச் சாதகத்தால் இது செய்து பிழைத்திருந்தான்" (1367), "நஞ்சமயத் தினில்விடந்தீர், தஞ்சமுடை மந்திரத்தாற் சாதியா வகைதடுத்தான்" (1372), "மந்திரசா தக நாங்க ளொழித்திட" (1373), "நங்கள் சமயத்தி னின்றே நாடிய முட்டி நிலையால்" (1386), "வெந்தழற்பட விஞ்சைமந் திரத்தொழில் விளைத்தால்" (திருஞான - புரா - 688), "தங்கள் மந்திரத்தாற் செந்தீ, சிவநெறி விளக்க வந்தார் திருமடம் சேரச் செய்தார்" (மேற்படி 697), "வெப்பை யொருபுடை வாம பாக, முன்ன மந்திரித்துத் தெய்வ முயற்சியாற் றீர்த்து மென்றார்" (மேற்படி - 762) முதலியவை சமணர்கைவந்த மந்திரமுயற்சிகளையும் அவற்றை விடுக்கவும் தடுக்கவும் அவர்கள் வல்லவராயினமையும் விளக்குகின்றன. அச்சமயத்தில் - அப்பொழுது என்றுரைப்பாரு முண்டு. அதிகரித்தல் - பயின்று பழகுதல். வாய்த்தல் - கை வருதல். விச்சைகள் - வித்தைகள். மணி மந்திரம், மருந்து முதலியன. தடுத்திடவும்.........எழு - நோயை மேலெழாமற் றடுத்து ஒழிக்கச்செய்த விச்சைகள் அது செய்யாது அதிகரிக்கச் செய்தன. நோய்மூல நாடாது செய்யும் மாற்றுக்கள் நோயை அதிகப்படுத்துவன என்பது உண்மை. தாம் - தடுத்திடவும் என்று கூட்டுக. இது தருமசேனர் தமக்குத் தாமே செய்து முயன்றுகொண்ட - முயன்ற - நோய்த் தீர்வுமுறை. 1318-ல் கூறுவது சமண குருமார் முயன்ற தீர்வு. தாம் - அசையென றொதுக்குவாருமுளர். மிக முடுகி உச்சம் உற - மிக ஒதுங்கித் தனது முதிர்ந்தநிலை - மேனிலை - யடைய. இதற்குமேல் செல்லாது என்னும் நிலை. சோதிடத்தில் கிரக உச்சம் என்ற வழக்கும், உச்சி என்ற சொல்வழக்கும் இக்கருத்துப்பற்றியன. வேதனை நோய் - வேதனை செய்கின்ற நோய். வேதனை - நிலையை வேதிக்க - திரிபு செய்ய - உள்ளகாரணம். ஆங்கு இருந்த அந்த நிலையில். நச்சரவின் விடம் தலைக் கொண்டென - விடந் தலைக்கொண்டு என்பது ஒரு சொல் நீர்மைத்தாய் விடவேகம் மேற்போந்து மயக்கம் செய்யும் நிலை குறித்தது. "தலைக்கொண்ட ஏழாம் வேகம்"......."விரியுரை குழறி யாவி விடக்கொண்டு மயங்கி வீழ்வான்" (அப்பூதி - புரா - 27) என்பது காண்க. நச்சரவு - (கொல்லும்) நஞ்சினையுடைய அரவு. கொல்லும் அரவு. நஞ்சில்லாத நீர்ப்பாம்பு போல்வனவு முளவாதலின் நச்சு என்பது பிறதினியைபு நீக்கிய விசேடணம். நச்சு - நஞ்சு; மென்றொடர் வன்றொடராயது. கொண்டால் என என்பது கொண்டென எனத் திரிந்து நின்றது. தொழில்பற்றி வந்த உவமம். நவை - இங்கு மூர்ச்சையாதலாகிய பெருந்துன்பம் குறித்தது. வாய்த்தவரும் - அனல்முடுகி - என்பனவும் பாடங்கள்.51 1317. | அவர்நிலைமை கண்டதற்பி னமண்கையர் பலரீண்டிக் "கவர்கின்ற விடம்போன்முன் கண்டறியாக் கொடுஞ்சூலை யிவர்தமக்கு வந்த; தினி யாதுசெய?" லென்றழிந்தார் தவமென்று வினைபெருக்கிச் சார்பல்லா நெறிசார்வார். |
52 (இ-ள்.) தவமென்று..........சார்வார் - தவமென்று சொல்லித் தீவினையையே பெருக்கி நற்சார்பில்லாத நெறியினைச் சார்வாராகிய; அமண் கையர் - சமண் |