கையர்கள்; அவர் நிலைமை கண்டதன்பின் - அவரது நிலைமையினைக் கண்டதன் பின்; பலர் ஈண்டி........அழிந்தார் - பலரும் கூடி "உயிரைக் கவர்கின்ற விடத்தினைப் போல, முன் எங்கும் எவரும் கண்டறியாத இந்தக் கொடிய சூலை இவர் தமக்கு வந்ததே! இனி என்ன செய்வோம்?" என்று மனமழிந்தனர். (வி-ரை.) கையர் - கீழ்மக்கள். கவர்கின்ற - உயிரைப் பற்றிக் கவர்ந்து கொண்டு போகின்ற. தன் வசமாக்குகின்ற - அதிகமாகப் பற்றும் என்றலுமாம். முன் கண்டறியா - முன் என்றும் யாராலும் என்க. காணா என்னாது கண்டறியா என்றது காண்டல் மட்டுமேயன்றிக் கேட்டும் அறியா என்ற குறிப்பினையும் உள் அடக்கி நின்றது. "நாட்டிற் கிலாத குடர்நோய்" என்றார் சிவப்பிரகாசர். இவர் தமக்கு - தமது சமயஞானம் வல்லவராய்த் தலைவராய் உள்ள இவர்க்கு என அவரது உயர்வு தோன்றும் குறிப்புப்பட அண்மைச் சுட்டினாலும், தம் என்ற சொல்லாலும் கூறினாா யாதுசெயல் - மேல் என்ன செய்வோம்? மேற்செயலாவது யாது? அழிதல் - மனமுடைதல். தவமென்று வினைபெருக்கி - தவம் என்ற பெயராற் செய்யும் செயல்களாலே அவமாகிய தீவினையையே பெருகச்செய்து. "பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்" என்ற திருவாசகக் கருத்துக் காண்க. சார்பல்லா நெறிசார்வார் - சார்பு - நற்சார்பு. சாரத்தக்கது. உபசாரம் - "சார்புணர்ந்து" என்பது குறள். "தவஞ்செய்தார்....." என்றும், "தவஞ்செய்த நற்சார்பில் வந்துதித்து......."என்றும் (8. சூத்.) வரும் சிவஞானபோத உதாரண வெண்பாக் கருத்துக்கள் இங்குக் கருதத் தக்கன. சார்பல்லா நெறி - தீநெறி. மங்கலவழக்கு. சார்வார் அமண் கையர் - பலர் - ஈண்டி - என்று - அழிந்தார் - என்று கூட்டி முடித்துக் கொள்க. சார்வலா - சார்வல்லார் - நெறிச்சார்வார் - என்பனவும் பாடங்கள். 52 1318. | புண்டலைவன் முருட்டமணர் புலர்ந்துசெய லறியாது குண்டிகைநீர் மந்திரித்துக் குடிப்பித்துந் தணியாமை கண்டுமிகப் பீலிகொடு காலளவுந் தடவிடவும் பண்டையினு நோவுமிகப் பரிபவத்தா லிடருழந்தார். |
53 (இ-ள்.) வெளிப்படை. புண்ணுடைய தலையினையும் வலிய முருட்டுத் தன்மையினையும் உடைய அமணர் மனமழிந்து, செய்தவறியாது, தமது குண்டி கையிலிருந்த நீரை மந்திரித்துக் குடிக்கச்செய்தும், நோய் தணியாமை கண்டு, மேலும் மயிற்பீலிகொண்டு உடல் முழுதும் தடவியிடவும், முன்னையினும் நோவு அதிகப்படவே மனவேதனையால் வருந்தினார்கள். (வி-ரை.) புண் தலை - மயிர் பறித்தலால் புண்ணுடைய தலை. வன்முருடு - வலிய முருட்டுத்தனம். "கலகமிடு மமண் முருட்டுக் கையர்." குண்டிகை - பீலி - குண்டிகையையும், மயிற்பீலியையும் தாங்கித் திரிவது சமணக் குருமார்களது மரபு. 1325 பார்க்க. "தங்கள் கைத்தூங்கு குண்டிகை நீர் தெளித்து" (திருஞான - புரா - 716), "தழையும் பீலியும் தாழவந்து" (1346), "பீலிதடவிக் காணாது பெயர்வார்" (தண்டி - புரா - 23) முதலியவை காண்க. வழியிற் செல்லும்போது எறும்பு முதலிய சிறு பிராணிகள் சிக்குண்டு படாவண்ணம் விலக்கவும், நோய் முதலியவை தாக்குங் காலத்துத் தடவி மந்தி |