பிறந்து பரசமயம் புக்குழல்வேனாதலின் பின்னிற்கத் தக்க தீயவன் என்பதும் குறிப்பு. என்முன் பிறந்த - நான் பிறப்பதற்கு முன் காலத்தில் பிறந்த. உய்யும்படி கேட்டு - உய்யும்படியினை - வழியினைக் கேட்டு. அல் ஆகும் பொழுது இங்கு ஆணைவாய் என்க. அல் - இரவு. இராத்திரிப் போதில் இங்கு அணைவாய் என்றது சமணர் பிறர் அறியாதிருத்தற் பொருட்டு. சமயச் சோர்வுபடுவதனின் உயிர் துறப்பித்தல் தகுதி யென்ற கோணற் கோட்பாடு, பற்றிக், கொல்லாமை மேற்கொண்ட சமண் கையர் கொலையும், புரியத், துணிவோராதலின் இவ்வாறு கூறினார். ஊட்டுவான் சென்றதும் இரவேயாம் என்பது மேலுணர்த்தப்பட்டது. பின்னர் நாயனார் "காணாமே யிரவின்கண்" (1326) பாடலிபுத்திரத்தை விட்டுத் திருவதிகை சேர்ந்ததும் இக்கருத்தே பற்றியது. பின்னர் நாயனாரைப் பலவாறும் அலைத்துக் கொலைபுரியும்படி மன்னவனை அச்சமண்கையார் தூண்டியதும் கருதுக. ஆயின் இப்பொழுது "காணாமே யிரவின்கண்" அவ்வாறு கரந்துசென்ற அவர், பின்னர், அச்சமணர் செய்த தீயமிறைகளுக் கெல்லாம் "ஈண்டுவருந் துயருளவோ வீசனடியார்க்கு என்று மூண்ட மன நேர்நோக்கி முதல்வனையே தொழுதிருந்த" (1362) திண்மை சிவனை அடைந்த அன்பின் உறைப்பினாலாகியது என்க. அது பற்றியே "வீரமென்னால் விளம்புந் தகையதோ?" என்று அடியார்கள் புகழப்பட்டனர். ‘கொல்லாது.......அணைவாய்" என்றது தருமசேனர் தமக்கையார்க்கு அறிவிக்கும்படி ஏவின குறிப்பு. இங்கு அல் ஆகும் பொழுது என்றது "ஒளியுடைய வித்தகராய்" (1305)த் தருமசேனர் அமர்ந்த அதுவரை அங்கு ஒளிநின்றது; இனி, அல் - இருள் - ஆகி அமண்பாழிகள் இடிபட்டுப் பாழ்படப் போகின்றன என்ற குறிப்புப்பட நிற்கும் தொனிப்பொருளும் காண்க. கொல்லாத - தீராமல் - தீராமே - அல்லாரும் - என்பனவும் பாடங்கள். 57 1323. | என்றவன்முன் கூறுதலும், "யரனங்குன் னுடன்போந்து நன்றறியா ரமண்பள்ளி நண்ணுலகிலே னெனுமாற்றஞ் சென்றவனுக் குரையென்று திலகவதி யார்மொழிய அன்றவனு மீண்டுபோய்ப் புகுந்தபடி யவர்க்குரைத்தான். |
58 (இ-ள்.) வெளிப்படை. என்று முன் அவன் சொல்லுதலும், "நான் அங்கு உடன் சென்று, நன்மைநெறி யறியாத அமணர் பாழியினை நண்ணமாட்டேன் என்னும் மாற்றத்தினைப்போய் அவனிடம் உரைப்பாயாக!" என்று திலகவதியார் சொல்ல, அன்று அவனும் திரும்பிப்போய்ப் புகுந்தபடியினை அவ்வாறே அவருக்கு அறிவித்தான். (வி-ரை.) நன்று அறியார் அமண்பள்ளி நண்ணுகிலேன் - நான் அங்குச் சேர்கிலேன் என்றமையால் அவனை இங்குச் சாரும்படி சொல்க என்பது குறிப்பு. அதனைச் சொல்லாமற் சொல்லிய திறமும், அக்குறிப்பினைத் திருவருளால் உணர்ந்த அவரும் அவ்வாறே வந்து சார்ந்ததும் காண்க. அருநோய் கொண்டவராய்ச் சொல்லப்பட்ட தம்பியாரைக் காண்பது பொருட்டேயாயினும் தீயோர் வாழும் இடம் செல்வது தகாது என்று திலகவதியார் கொண்ட துணிபு யாவரும் கண்டு பின்பற்றத்தக்க ஒழுக்கமாம். நன்றறியார் - நன்மையை அறியமாட்டார். எனவே தீமையினையே அறிந்து புரிபவர் என்பதாம். மங்கல வழக்கு. |