வாராது இறைவர் தந்த அருளின் வண்ணம் காண்க. இராவணவதம் இராமனால் அரசன் என்ற நிலையிற் செய்யப்படாமையும் கருதுக. இனிச், சிவதருமங்களின் பொருட்டும், சிவதருமங்களுக்கு வரும் இடையூறுகளை நீக்கும் பொருட்டும் செய்யப்படும் கொலைகள் பாதகச் செயல்களாக; அவை செய்தாருக்குப் பழி சாராதது மட்டுமேயன்றிச், சிவபுண்ணியப் பெரு வாழ்வும் வரும் என்பது எறிபத்த நாயனார் வரலாற்றாலும், அதுபோல வரும் எண்ணிறந்த வரலாறுகளாலும் துணியப்படும். "பிரானுக் கானபணி, ஆகி லாநல் லறமாவ தறியே வருமோவுமக்கென்றார்" (தண்டி - புரா - 7) முதலியவை காண்க. இராவணன்றன்....தீர்த்த பிஞ்ஞகன் - இதனால் இராமேச்சுரத்தின் வரலாறு கூறப்பட்டது. இத்தலத் திருநேரிசைப் பதிக முழுமையினும் இவ்வரலாறு பற்றியே நாயனார் போற்றியிருத்தல் குறிக்க இவ்வாற்றால் எடுத்துக் காட்டினார். ஆளுடைய பிள்ளையார் தேவாரமும் காண்க. பதிகக் குறிப்புப் பார்க்க. நினைந்துபோய் - திருப்பூவணத்தை வணங்கிய பின் கிழக்கில் அடுத்துச் செல்ல நினைவுருக்குவரும் தலம் இராமேச்சுரம் என்பதாம். போய் - இராமேச்சுரத்திற் சேர்ந்து. நினையாமலே சென்று வந்த வந்த தலங்களை வணங்கிச்செல்லு மதுபோ லன்றி, இராமேச்சுரம் செல்வதனையே குறித்து நினைந்து சென்று சேர்ந்தனர் என்பதாம். எழுந்தார் - எழுந்தாராகிய. முற்றெச்சம் எழுந்தார் (1673) - பாடித் - தொண்டு செய்தமர்ந்தார் - (1674) என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டிமுடிக்க. வினைமுற்றாகக் கொள்ளினு மிழுக்கில்லை. இப்பாட்டில் சொல்லரசர் என்று இறுதியில் வைத்ததனையே தொடர்ந்துகொண்டு நாவரசர் - அமர்ந்தார் - என மேல் வரும் பாட்டில் முடிக்கும் குறிப்புக்கொண்டு எச்சமாக்கி உரைக்கப்பட்டது. 408 1674.(வி-ரை.) தேவர் தொழும் தனி முதல் - தேவருட் பெருந் தேவராகிய திருமாலினாற் றாபிக்கப்பட்டு வழிபட்டமையும், அதனால் அவருள்ளிட்ட ஏனைத் தேவர்களும் வந்து வணங்கி நலம் பெறும் நிலையும் பற்றித் தேவர் தொழும் என்றார். இராமேச்சுரம் - இராமனாற் றாபிக்கப்பட்டுப் பூசிக்கப்பட்டமையால் இப்பெயர் எய்தியது; "திருப்பனந்தாள் தாடகையீச்சரம்" என்பதுபோல. "தக்க வாசமிக் கலர்கள் கொண்டு மதியினான் மால்செய் கோயில்" என்பது முதலிய பதிகப் பாட்டுக்கள் பார்க்க. சங்கரன் - இராமனுக்கு வரும் பெரும்பாதகம் தீர்த்து இன்பம் செய்தாராதலானும், இன்றும் வணங்குவார் எல்லார்க்கும் நலம் செய்கின்றாராதலானும் இங்குச் சங்கரன் என்ற யெயராற் கூறினார். "இன்பஞ் செய்தலிற் சங்கரன்" (காஞ்சிப் புரா). விருப்புறு மொழி - அன்புப் பெருக்கினால் தாமே வரும் மொழிகள். முதலான தமிழ் - இவற்றுள் திருநேரிசைப் பதிகம் ஒன்றே கிடைத்துள்ளது! நலம் பெருக - உலகம் உண்மைநெறி யிதுதானென்று கண்டு பின்பற்றிப் பெரு நன்மையடைய. ஆளுடைய பிள்ளையாரும் "நளிர்வேலைக் கரையினயந்திருந்தார்" (மேற்படி - புரா - 889) என்பது காண்க. அமர்ந்தார் - விருப்புடன் எழுந்தருளி யிருந்தார். 409 திருவிராமேச்சுரம் திருச்சிற்றம்பலம் | திருநேரிசை |
| பாசமுங் கழிக்க கில்லா வாக்கரைப் படுத்துத் தக்க வாசமிக் கலர்கள் கொண்டு மதியினான் மால்செய் கோயில்
|
|