கொணர்ந்த அனுமலிங்கம், இராமநாதரின் கோயிலை அடுத்துத் தாபிக்கப் பட்டுள்ளது. அனுமனுடைய அன்பின் சிறப்புக்காக அதற்கு முதலில் பூசை நிகழும்படி இராமன் பணித்தனன் என்றும், அதன்படியே இன்றும் நிகழ்வது என்றும் வரலாறுகள் கேட்கப்படுகின்றன. பன்னிரண்டு சோதிலிங்கங்களுள் ஒன்று. தம்மைப்பிரிந்து போந்து குணநிதி பாண்டியனிடம் வளர்ந்த இலக்குமியை வேதியனுருவங் கொண்டுவந்து மணந்து, சேதுமாதவர் என்னும் பெயருடன் விட்டுணு வீற்றிருக்கின்றனர். அவரை வணங்காதவர் இராமநாதரை வழிபட்ட பலனை அடையார் என்பது சேதுபுராணம். இங்கு அனேகம் சிறந்த தீர்த்தங்கள் உண்டு. அவற்றின் வரலாறும் சிறப்பும் சேதுபுராணத்துட் பேசப்படும். இத்தீர்த்தங்களுட் குளித்தல் சேது தீர்த்த யாத்திரை எனப்பட்டுச் சிறந்த பலன்களைத் தரும் என்ப. இலங்கையுட் சென்று இராவணனை வெல்லும் பொருட்டு இராமன் அணைகட்டியதனால் சேது என்று பெயர் பெறும். சே - சரை. இராமனது தனுவின் முனையாற்கீறி உண்டாக்கப் பட்டமையின் தனுக்கோடி எனப்படும். தலத்தில் வடக்கில் உள்ளது கந்தமாதனமலை. அதன் மீது இராமன் பாதம் பொறிக்கப் பட்டுள்ளது. எவ்வித பாவங்களும் தீரும் பொருட்டும் இன்றும், எண்ணிறந்த அன்பர்கள் சென்று தரிசிக்கவுள்ளது இராமேசுரம். காசி - இராமேசுரம் என்று முத்தித் தலமாகிய காசியுடன் இணைத்துப் பேச உள்ளதும், நாடோறும் கங்கையின் தூய நீர் மிகுதியாய்த் திருமஞ்சன மாட்ட வுள்ளதும் ஆகிய பெருஞ் சிறப்புக்கள் இன்றும் காண உள்ளன. தை - ஆடி - அமாவாசைகள் சிறப்பு. சுவாமி - இராமநாதர் - அனுமேசர்; அம்மையார் - மலைவளர் காதலி; (பார்வதவர்த்தினி என்பவர் வடவர்); விசாலாட்சி. தீர்த்தம் - அக்கினி தீர்த்தம் - இராம தீர்த்தம் - இலக்குமண தீர்த்தம் - தனுக்கோடி - முதலிய பல. இராமேசுவரம் என்ற புகைவண்டி நிலையம் ஊரினுள்ளே உள்ளது. 1675. | அங்குறைந்து கண்ணுதலா ரருள்சூடி யகன்றுபொய்ப் பொங்குதமிழ்த் திருநாட்டுப் புறம்பணைசூழ் நெல்வேலி செங்கண்விடை யார்மன்னுந் திருக்கானப் பேர்முதலா வெங்குநிகழ் தானங்க ளெல்லாம்புக் கிறைஞ்சுவார்; |
410 1676. | தொழுதுபல வகையாலுஞ் சொற்றொடைவண் டமிழ்பாடி வழுவிறிருப் பணிசெய்து மனங்கசிவுற் றெப்பொழுதும் ஒழுகியகண் பொழிபுனலு மோவாது சிவன்றாள்கள் தழுவியசிந் தையிலுணர்வுந் தங்கியநீர் மையிற்சரித்தார். |
411 1675. (இ-ள்.) வெளிப்படை. அத்திருத்தலத்தில் (திரு இராமேச்சுரத்தில்) பலநாள்கள் தங்கியிருந்து, சிவபெருமானுடைய திருவருள் விடைபெற்று, அத்தலத்தினின்றும் நீங்கிச்சென்று, பொங்கும் தமிழ்த் தருநாட்டில் புறம்பணையினாற் சூழப்பட்ட திருநெல்வேலியும், சிவந்த கண்ணையுடைய இடபத்தையுடைய பெருமானார் நிலைபெற்று எழுந்தருளியுள்ள திருக்கானப்பேரும் முதலாக, அந்நாட்டில் எங்கும் பொருந்திய தலங்கள் எல்லாவற்றிலும் சென்று வணங்குவாராகி, 1676. (இ-ள்.) தொழு - பல தலங்களிலும் சென்று வணங்கி; பல ... பாடி பலவகைகளாலும் அமைந்த சொற்றொடைகளாகிய வளப்பமுடைய தமிழ்ப் பதிகங்களைப்பாடி; வழுவில் திருப்பணி செய்து - குற்றமில்லாத திருப்பணிகளைச் செய்து; மனம் கசிவுற்று - மனம் மிக உருகி; எப்பொழுதும் பொழி புனல் ஒழுகிய கண்ணும் - எக்காலத்திலும் பொழிகின்ற நீர் ஒழுகும் கண்களையும்; ஓவாது சிவன் தாள்கள் உணர்வு தழுவிய சிந்தையும் - நீங்காமல் சிவபெருமானுடைய திருவடி |