ஒழுகிய கண் பொழிபுனல் என்றது முன்பே ஒழுகிக்கொண்டிருந்த கண்; அது மேலும் பொழியும் புனல் என்க. தாள்கள் உணர்வில் தழுவிய சிந்தை என்று கூட்டி உரைத்துக் கொள்க. சிந்தை - உயிர். "சிந்தை நாடி" (9 - சூத்.). தழுவுதல் - பிறிவறக் கலத்தல். நீர்மை - ஒழுக்கம். சரித்தல் - நிகழ்தல்; ஒழுகுதல். "தூய வெண்ணீறு" (1405); "மார்பாரப் பொழிகண்ணீர்" (1490) என்ற திருப்பாட்டுக்களையும், ஆண்டுரைத்தவற்றையும் இங்கு நினைவு கூர்க. ஆனால் இத்திருப்பாட்டிற் குறித்தது திருவடி சாரும் பருவத்தைத் தீவிரமாய் நோக்கி நின்று அன்புள்ளுருகிய மனநிலையின் குறிப்பும், மேல்வரும் பாட்டிற் சரித நிகழ்ச்சியைக் கூறும் விரைவும், "பூம்புகலூர் வந்தடைந்தார் பொய்ப் பாசம் போக்குவார்" என்ற குறிப்பும் காண்க. 411 1677. | தேம்பொழியுஞ் செந்தமிழ்நாட் டினிலெங்குஞ் சென்றிறைஞ்சிப் பாம்பணிவார் தமைப்பணிவார் பொன்னிநா டதுவணைந்து வாம்புனல்சூழ் வளநகர்கள் பின்னும்போய் வணங்கியே பூம்புகலூர் வந்தணைந்தார் பொய்ப்பாசம் போக்குவார். |
412 (இ-ள்.) தேம்பொழியும் - நாடு என்றும், தேம்பொழியும் - தமிழ் என்றும் கூட்டி உரைக்க நின்றது. தமிழுடன் கூட்டும்போது தேம் என்றது சொல்லின்பமும், செம்(மை) என்றது பொருளினிமையும் குறிப்பன என்க. தேம்பொழில் சூழ் என்பது பாடமாயின் நாட்டின் சிறப்பாக உரைத்துக் கொள்க. இப்பொருளில் பொழில் சூழ்தல் பொருநை முதலிய ஆறுகளின் வளத்தாலாவ தென்க. பொதிகை - குற்றாலம் முதலியவற்றின் பொழில் வளச் சிறப்புக்களை இங்கு நினைவுகூர்க. இப்பகுதி பாண்டி நாட்டின் தென்புறப் பகுதியாமென்பது குறிக்க முன் "தமிழ்த் திருநாட்டுப் புறம்பணைசூழ் நெல்வேலி" (1675) என்றதும் காண்க. செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று - இவை பாண்டிநாட்டின் ஏனைத் தலங்கள். இவற்றின் பதிகங்கள் கிடைத்தில. பாம்பணிவார் - தமைப் பணிவார் - சொல்லணி. பணிவார் - வணங்கியே - வந்தடைந்தார் - என்று முடிக்க. பணிவார் - பணிவாராகி. இறைஞ்சி - வணங்கி - என்பன சிவநெறிச் சாதனங்களும், வந்தடைந்தார் - என்பது அவற்றாற் பெற்ற குறிப்புமாம் என்பது. புகலூர் - பிறவிப் புகலாக அடையும் இடம் என்பது பொருள். புகலூர் - அடைந்தார் - என்றது நாயனாரது பிற்சரித விளைவு குறிப்பது. பொய்ப்பாசம் போக்குவார் - அடைந்தார் - என்க. போக்குவார் - போக்க. பொய்ப்பாசம் - உலகநிலைத் தொடர்ச்சி. அடைதல் - புகலாகச் சார்தல். வளநகர்கள் பின்னும் போய் - வரும் வழியில் முன் அணைந்த சோழநாட்டுத் திருத்தலங்களை மீண்டும் சென்று வணங்கி. இவை நாயனார் திரும்பும் வழியில் உள்ளனவாதலின், முறைப்படி அவற்றைப் பின்னும் வணங்கிச் சென்றார் என்பதாம். முன் சென்ற தலக்குறிப்புக்கள் பார்க்க. சேர்ந்திறைஞ்சி - போக்குதற்கு - என்பனவும் பாடங்கள். 412 1678. | பொய்கைசூழ் பூம்புகலூர்ப் புனிதர்மலர்த் தாள்வணங்கி நையுமனப் பிரிவினொடு நாடோறுந் திருமுன்றிற் கைகலந்த திருத்தொண்டு செய்துபெருங் காதலுடன் வைகுநா ளெண்ணிறந்த வண்டமிழ்மா லைகண்மொழிவார்; |
413 |