பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்699

 

எண்ணிறந்த - காட்டப்பட்ட இவையும் இவைபோல்வன கிடைத்துள்ளன பிறவும், கிடைக்காத பலவும். எண் - எண்ணம் - சிந்தை எனக்கொண்டு, எண்ணத்தில் அடங்காத என்றலுமாம். மொழிவார் (1678) - தொடுத் தமைத்தாராகிப் (1679) - பாடினார் (1680) என்று இம்மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக் கொள்க.

413

1679.(வி-ரை.) நின்ற - இறைவர் எப்பொருள்களுமாய் நின்ற.

நீடு - உண்மைப் பொருட்டுணிபுகளால் நீடும்.

தனித்தாண்டகம் - இப்பெயரால் இரண்டு பதிகங்கள் கிடைத்துள்ளன.

மன்று உறைவார் - சிவபெருமான். மன்று - ஐந்தொழிலாகிய அருட்கூத்து நிகழும் இடம்.

பதிகள் வழுத்து திருத்தாண்டகம் - சிவபெருமானது திருத்தலங்களைத் தொகுத்துப் போற்றும் பதிகம். இது க்ஷேத்திரக் கோவை என வழங்கப்படும்.

மன்று உறைவார் வாழ்பதிகள் வழுத்து - இன்னின்ன தலங்களிலும், இன்னும் எத்தானங்களிலும், கயிலாய நாதனையே காணலாமே என்ற கருத்துட்கொண்ட மகுடம் புனைந்திருத்தலின் பதிகள் வழுத்தும் என்றார்.

குறைந்தடைந்த நேரிசை - வேறு புகலின்றி வருந்தும் உயிர், குறைந்து வந்து, இறைவரை அடைந்த கருத்துப்பட, "என் செய்வான் தோன்றினேன் ஏழை யேனே" என்ற கருத்துடன் விளங்குவது. இப்பெயருடன் இரண்டு பதிகங்கள் கிடைத்துள்ளன. துன்று - உண்மைப் பொருள்கள் பலவும் விரவிச் செறிதல் குறிப்பு.

தனித் திருநேரிசை - இத்தலைப்பில் மூன்று பதிகங்கள் கிடைத்துள்ளன.

முதலான - மேல்வரும் பாட்டில் விரிக்கப்படுவன.

தொடுத்து அமைத்தார் - தமிழ் மாலைகள்" (1678) என்றதற்கேற்ப இவ்வாறு கூறினார்.

குறைந்த திரு - என்பதும் பாடம்.

414

1680.(வி-ரை.) ஆருயிரின் திருவிருத்தம். இஃது ஆருயிர்த் திருவிருத்தம் எனவழங்கும் பதிகம். "அடிநிழற் கீழதன்றே என்ற னாருயிரே" என்ற மகுடத்துடன் விளங்குதலின் இப்பெயர் பெற்றது.

தசபுராணத்து அடைவு - சிவ மகா புராணங்கள் பத்தின் ஒவ்வொரு புராணக் கருத்து ஒவ்வொரு பாட்டின் கருத்தாகச் செறித்து விளக்குதலின் இப்பெயர் பெற்றது.

பார் பரவும் பாவநாசப் பதிகம் - "என்னெம்மான் என்பார் பாவநாசமே" என்று முடித்தருளிய, இப்பதிகப் பயன் பெறும்பொருட்டு, உலகம் பயிலத்தக்க பதிகம் என்பது கருத்து.

நேர்பட நின்று பன்முறையும் அறை கூவும் திருப்பதிகம் - இது "சரக்கறைத் திருவிருத்தம்" என வழங்கும் பதிகம் என்பர். என் விண்ணப்பம்! - என் தனி நெஞ்சம் சரக்கறையோ? என்று பாட்டுத்தோறும் -கூலியதாக வருவதால் அறைகூவும் என்றார். பன்முறையும் - பதினொரு பாட்டுக்களிலும் வருதல் குறித்தது. நேர்பட நின்று - விடைப் பெரும்பாகா!, வெற்பா!, ஏந்தீ!, உரியாய்!, தாராய்!, விகிர்தா! என்பனவாகப் பாட்டுத்தோறும் இறைவரை முன்னிலைப் படுத்திக் கூவுதலால் இவ்வாறு கூறினார்.

முதற் பிறவும் - இவை "சிவனெனு மோசை"ப் பதிகம் (பியந்தைக் காந்தாரம்), "நினைந்த" திருநேரிசை, தனித் திருவிருத்தப் பதிகங்களிரண்டு, பசுபதித் திருவிருத்தம், வினாவிடைத் திருத்தாண்டகம் முதலாயின என்று கருதப்படும்.