பேரருளின் கடல் அளிக்கும் பெருமான் - அணிமையில் தமது திருவடிக்கீழ் அமரவைக்கும் பேரருள் குறிப்பு. 415 "நின்ற" திருத்தாண்டகம் I திருச்சிற்றம்பலம் | தாண்டகம் |
| இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி யியமான னாயெறியுங் காற்று மாகி யருநிலைய திங்களாய் ஞாயி றாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி நெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்ற வாறே. |
1 | மண்ணாகி விண்ணாகி மலையு மாகி வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக் கணணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக் கலையாகிக் கலைஞானந் தானே யாகிப் பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப் பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி யெண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி யெழுஞ்சுடரா யெம்மடிக ணின்ற வாறே. |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- உயிர்ப்பொருள் உயிரில் பொருள் என்ற பகுப்பின்றிச் சிவன் எல்லாவற்றிலும் எக்காலத்தும் நீங்காது நிற்கும் நிலை குறித்தது. அருமறைப் பயனாகிய திருவுருத்திரத்தின் கருத்தாய் அமைந்தது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) நிலன் - தீ - நீர் - இயமானன் - காற்று - திங்கள் - ஞாயிறு - ஆகாயம் என்ற எட்டும் சிவனது எட்டுத் திருமேனிகள். அட்ட மூர்த்தங்கள் எனப்படும். "நிலனீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன், புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்" (திருவா - தோணோக் - 5); இயமானன் - ஆன்மா. "இருசுட ரோடிய மானனைம் பூதமென்று" (மணிமே. 27, 89). நலமும் குற்றமும் - நன்மையும் தீமையும். நெருநல் - நேற்று. நெருதல், இன்று, நாளை - இறப்ப - நிகழ்வு - எதிர்வு என்ற மூன்று காலங்கள் - (2) கண் - மணி - கருவியும் காட்டுபவனும் என்பது குறிப்பு. கலை - கலைஞானம் - கலைகளும் அவற்றால் அறியப்படும் அறிவும். எண் - எழுத்து. "எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும்." கலை ஞானங்களுட் சிறந்தவை. - (3) களறு - புல்லும் முளைக்காத களற்று நிலம். கால் - நீர்க்கால்; வாய்க்கால். பொருள் - சொல்லாற் குறிக்கப்படுவது. சுலா - காற்று. - (4) களிறு - கூற்றுதைத்தவர்; சிவன். உருவகம். - (5) பழமாகி....நுகர்வானும் தானே - "செய்வானும் செய்வினையும்" (சாக்கியர் - புரா); நீ - நான் - முன்னிலை - தன்மை. - (6) அங்கம் - வேதத்தின் ஆறு அங்கம். அருமறை - வேதாந்தம் - உபநிடதம். - (7) யாதானுமென நினைத்தார் - போதாய மலர்கொண்டு போற்றி நில்லாவிடினும் நினைந்தார் என்பது குறிப்பு. (8) அழல் - வேள்வித்தீ. - (9) விசும்பினுச்சி - விசும்பிற்கும் அப்பாற் பட்டது. - (10) அருக்கம் - சுருங்கிய நிலை. பூலோகம் புவலோகம் சுவலோகம் பூமியும் அதன்மேல் உள்ள ஏழுலகங்களும்; காயத்திரியிற் குறிக்கப்படுவன. ஏலாதன - இயலாதவை - பொருந்த மாட்டாதவை. குறிப்பு :- இத்திருப்பதிகம் அருமறைப் பயனாகிய திருவுருத்திரத்தின் கருத்தா யமைந்தது. "மெய்யுணர் வுடையார்க்குப் பகுப்பின்றி எங்கணும் பரமேசுரனெனக் காண்டலே பொருத்த முடைமையானும், நின்ற திருத்தாண்டக முதலியவற்றுள் அவ்வாறோதுதலானும், திருவுருத்திரத்துட் பகுப்பின்றி உயிர்ப் பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றையும் தனித்தனி யெடுத்தோதி வழிபாடு கூறுதலானும்" என்றுவரும் சிவஞானபோதச் சிற்றுரை (12-ம்-சூத்) ஈண்டுச் சிந்திக்கற்பாலது. |