பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்71

 

எதிரே தோன்றும் திருவதிகையினில் திலகவதியார் இருந்த திருமடத்தினைச் சென்று அணைந்தனர்.

62

இந்நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1324. (வி-ரை.) கேட்டலுமே அயர்வு எய்தி - துணைசெய்ய வருவாரென்று எண்ணப்பட்ட அவர் வர மறுத்தமையால் மனம் உடைந்தது; அதனால் அயர்வு வந்தது.

இதற்கு இனி யான் எவ்வாறு செய்வன் - இதற்கு - இந்நிலையினை நீக்குதற்கு. நான்கனுருபு பகைப்பொருளில் வந்தது. நோய்க்கு மருந்து என்பதுபோல. என - என்று எண்ணமிட. எவ்வாறு செய்வன் - மேல் என்ன செய்வேன்?

ஈசர் அருள் கூடுதலால் - என - உய்ய - கருத்து - மனம் - எழுதலால் - என்று மேல்வரும் பாட்டுடன் தொடர்ந்து முடிக்க.

அருள் கூடுதலால் - இங்கு. "உருவருள் குணங்களோடு முணர்வரு ளுருவிற் றோன்றுங் கருமமு மருள்......அருளுரு உயிருக்கென்றே ஆக்கினன்" (சித்தியார் - 1. 47) என்று கூறுகையால் உயிர்களுக்கு அருள் கூடாத காலமு முண்டோ? எனின், அற்றன்று; முன்னர்ச் சமண்சமயம் புக்கதும் அருளே; ஆயின், அது முன்னைத் தவத்தினிடை நேர்ந்த வழுவைக் களையும் வகையால் தீயூழை அனுபவிப்பித்துக் களையும் வழியிலே திரோதானம் என்னும் மறைப்புச் சத்தி என்ற உருவத்திற் போந்த அருளாகும். இப்போது, அது அருட்சத்தியாக மாறிக் கூடியதனால் அருள் கூடுதலால் என்றார் என்க. "மாயை மாமாயை............மருளெனி லிருளாய் நிற்கும்;.......அருளெனில் ஒளியாய் நிற்கும்......" (சிவப்பிரகாசம் - 70) என்றது காண்க. முன்னர் "நம்பர் அருளாமையினால்" (1302) என்றதும் இக்கருத்துப்பற்றியது.

ஒவ்வா இப் புன்சமயம் - "அத்துறையின் மீக்கூரு மமைதியினால்.........ஒளியுடைய வித்தகராய்" (1305) விளங்கிய அந்நிலையில் மிகவும் ஒவ்வுதல் உடையதாய்க் காணப்பட்டுப் போந்த சமயம், உண்மையில் ஒவ்வாத புன்சமய மாயினமை இப்போது புலப்பட, அதனை விட்டுத் தாள் சேர்வன் என்னும் துணிபு பிறந்தது. அதற்குச் சூலைநோய் காரணம்போல வெளித்தோற்றப்படினும் அது காரணமன்று; அதனை ஏவிய திருவருள் காரணமாம். இத்துணிவு திருவருள் காட்டக் கண்ட வண்மை. சூலை திருவருள் நிகழ்ச்சிக்குக் கருவியாய் நின்றமட்டில் அமந்ததென்பதாம். அவ்வாறல்லாக்கால் "இலக்க முடம்பிடும்பைக்கு" என்றபடி உடலின் கன்ம அளவினால் வரும் நோய்கள் வந்தபோதெல்லாம் மாறும் சமய உணர்ச்சி அறிவுடைமைக் கேலாததாய் முடியும் என்க. அருள் கூடக் - கருத்து எழுந்தது; கருத்து எழவே - முயற்சி அடுத்தது; அஃது அடுக்கவே அயர்வு ஒதுங்கிற்று; ஒதுங்கவே, போவதற்குத் துணிபு பிறந்தது; மனத்தில் துணிபு பிறக்க உடல் எழுந்தது என்று தொடர்ந்து திருவருட்டுணையை நிகழ்ச்சியில் வைத்துக் கண்டுகொள்க.

புன்சமயத்து ஒழியா இத்துயர் - "அச்சமயத் திடைத்தாமுன் னதிகரித்து வாய்த்துவரும் விச்சை"களும் (1316), பிற குருமார் செய்த மந்திர முதலியனவும் (1318) பயன்படா தொழிந்ததனால் அவற்றுக்கு மேலானதொரு சத்தியால் இயக்கப்படுவ துலகம் என்று தெளிந்தனர் என்க.

செவ்வாறு - செந்நெறி. ஒவ்வா இப்புன்சமய நெறிபோலன்றி, அது செம்மை நெறியாயினமையும், அம்மையார் அதனிற் பிறழாது ஒழுகி வாழ்வடைந்து நிற்றலையும் திருவருள் கூடுதலால் உள்ளத்துக் கண்டனர். "திருவனைய" (1282 - 1296) என்றபடி, திருவுடையாராகிய திலகவதியார் (தம்போற் பிறழாது) நின்ற செம்மை நெறியினையே தாமும் அடைந்து பேறுபெறும் செந்நெறி - செவ்வாறு -