பக்கம் எண் :


72திருத்தொண்டர் புராணம்

 

எனக் கொண்ட என்னும் "திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட", (முதனூல்) குறிப்பைக் கொள்ளவைத்ததும் காண்டுகொள்க.

செம்மை - சிவத்தன்மை. ஆறு - நெறி - அதனைச் சேரும் வழி.

திலகவதியார் தாள் சேர்வன் - தாம் செய்த பிழையை நீக்கிச் சிவனை அடைவிக்க வல்ல குருவைச் சேர்தல் கருதினாராதலின், "சிவன்றாள் சேர்வன்" என்னாது, அம்மையாரைக் குருவாகக்கொண்டு அவர்தாள் சேர்வன் என்று துணிந்தார். "உய்யும்படி கேட்டு" (1322) என்றதும், "இனி மயங்கா துய்ந்து கரையேறு நெறி உரைத்தருளும்" (1328) என்றதும், அதுகேட்ட அம்மையார், "பற்றறுப்பார் தமைப் பணிந்து பணிசெய்வீர்" (1330) என்று பணித்து, "திருநீற்றை யஞ்செழுத்தோதிக் கொடுத்து"க் (1331) கோயிலினுள் கொடுபுக்கு விடுத்ததும், வழிப்படுத்தியதும் (1333) ஆகிய நிகழ்ச்சிகளும் காண்க. "அவனை வழிபட்டங் காமாறு காட்டுங், குருவை வழிபடிற் கூடலு மாமே" (7. தந் - 416) என்ற திருமந்திரமும் காண்க.

என எடுத்த - என்று மேல் வரும்பாட்டுடன் தொடர்ந்து கொள்க.

59

1325. (வி-ரை.) எடுத்த - பரசமயக் குழியினின்றும் தம்மை எடுத்த. "தாள் சேர்வன" என்று அருள்வழிப் போந்த கருத்து அவரை மேலே எடுத்தது என்க. "எடுத்தாள வேண்டும் என" (1311) என்று வேண்டியபடி எடுத்த.

உய்ய - தாம் உய்யும்படி. உலக முய்யும்படி என்ற குறிப்புமாம்.

எழும் முயற்சி - எழும் - விழுந்து (1315), மயங்கி நவையுற்றுக் (1316) கிடந்த அந்நிலையினின்றும் எழுகின்ற,

முயற்சி அடுத்தல் - முயற்சி கூடுதல். அயர்வு ஒதுங்க - முன்னைய இளைப்பு ஒருபுறம் ஒதுங்க. முற்றும் நீங்காது நின்றதாயினும் மிகவருத்தஞ் செய்யாத நிலையில் ஒதுங்க. அது நின்ற நிலையினைச் "சூலைநோ யுடன்றொடர" (1327) என்பதிற் காண்க. சூலை மறப்பிணி தான் அந்நின்ற நிலைக்க ணகன்றிடலும்" (1336) எனப் பின்னர்க் கூறும் அவ்வளவில் நோய் முற்றும் தீரும்வரை நோயும் அயர்வும் ஓரளவு நிற்பதாயின நிலையையும் குறிக்க ஒதுங்க என்றார்.

திருவதிகை அணைவதனுக்குப் - பாய் - ஒழியக் - குண்டிகை ஒழியப் - பீலியும் ஒழியப் போக்குவதற்குத் துணிந்து என்று கூட்டுக.

திருவதிகை சென்று சேர்வதற்கு இந்தச் சமண வேடங்கள் தடையாவன; அவ்வேடந்தாங்கி அங்குச் செல்லுதல் தகாது; ஆதலின் ஒழிய என்றார். ஒழித்து என்னாது ஒழிய என்றமையால் முயற்சியின்றித் தாமாகவே கழன்றுவிட என்பது குறிக்கப்பட்டது. நாயனார் திருவதிகை சேர்ந்தமையால் அப் பொய்வேடங்கள் அவர்பால் மட்டுமேயன்றி ஏனையோர்பாலும் உலகில் ஒழிய நின்றன என்பதும் குறிப்பு.

அணைவதனுக்கு - திருவதிகை சேர்வதற்குத் தகுதியுடையராய்த் தம்மை ஆக்கிக்கொள்ளும் பொருட்டு முன் தாங்கிய அந்த அவ்வேடங்களை விட்டு, வெண்புடைவை மெய் சூழ்ந்து உரியபடி சென்றனர் என்க. இந்நாளில் தவம் செய்வதற்குரிய தவக்கோலந் தாங்காது பலப்பல அவ்வேடங்களுடன் திருத்தலங்களுக்குச் செல்வோர் இவ்வுண்மையை உணர்ந்து அதற்குத் தக்கவாறு ஒழுகுவாராயின் நலம் பெறுவர் என்பது துணிபு.

மெய்சூழ்ந்து - நோயின் கடுமையால் உரியபடி உடுக்க இயலாது மேனியிற் சூழக்கொண்டனர் என்பது குறிப்பு.

துணிந்து எழுந்தார் - கருத்தும் அதற்கேற்ற முயற்சியும் வர, அதனால் அயர்வும் நீங்கத், துணிவுபெற்றனர்; துணிவு பெறவே எழுந்தனர். மெய்வருத்தமும் பாராது எழுந்து சென்றது மனத்துணிபு பற்றியாம் என்க.