பொன்னினொடு நவமணிகள் - பொன் பூண்ட வழியே மணிகள் கோவையாகிப் பயன் பெறவேண்டிய சிறப்பு நோக்கி ஓடு உருபைப் பொன்னினுடன் சேர்த்து ஓதினார். ஓடுவுருபு மணிகளினின்றும் பொன்னை வேறு பிரித்தது என்றலுமாம் பொன் மண்ணுடன் கலந்து பொற்சன்னமாக நிற்பதும், மணிகள், அவ்வாறன்றி மண்ணின் வேறாய் நிற்றலும் ஆகிய இயல்பும் குறிப்பு. நவமணிகளையும் ஒன்றாக்கிக் கூறியதும் காண்க. பொலிந்து இலங்க - பொலிதல் - ஒளி வீசுதலும், இலங்குதல் - வேறு பிரித்துக் காணப்படுதலும் குறித்து நின்றன. ஒருபொருட் பன்மொழி சிறப்புக் குறித்தது என்றலுமாம். பொன் - பொலிந்து என்றும், மணிகள் - இலங்க என்றும் பிரித்துக் கூட்டியுரைத்தலுமாம். இப்பொருளில் பொலிந்து - பொலிய எனச் செய்து என்பது செய என்ற வினையெச்சமாக வந்ததென்க. காட்டுவார் - காட்டுவாராகி. எதிர்கால முற்றெச்சம். காட்டுவார் - அருள்செய்தார் என்று கூட்டுக. அந்நிலைமையினில் - என்பதும் பாடம். 416 1682. | செம்பொன்னு நவமணியுஞ் சேண்விளங்க வாங்கெவையு மும்பர்பிரான் றிருமுன்றி லுருள்பருக்கை யுடனொக்க வெம்பெருமான் வாகீச ருழவாரத் தினிலேந்தி வம்பலர்மென் பூங்கமல வாவியினிற் புகவெறிந்தார். |
417 (இ-ள்.) வெளிப்படை. செம்பொன்னும் நவமணிகளும் நெடுந்தூரத்திலும் ஒளி வீச, எமது பெருமானாகிய திருநாவுக்கரசு நாயனார், தேவர் நாயகராகிய சிவபெருமானது திருமுன்றிலினுள் உருள்கின்ற ஏனைப் பருக்கைக் கற்களோடு ஒத்தலால் அவ்விடத்தில் விளங்கிய அவை யெல்லாவற்றையும் திருவுழவாரத்தினில் ஏந்திச்சென்று, மணம் விச அலரும் பூக்களாகிய தாமரைகள் மலர்கின்ற வாவியினிற் புகும்படி வீசி எறிந்தருளினர். (வி-ரை.) செம்பொன்னும் நவமணியும் - மேல் பொன்னினொடு நவமணிகள் என்றது காண்க. சேண் விளங்க - சேணிடத்திலும் ஒளிவீச. ஒளி நெடுந்தூரம் வீச. சேணில் என ஏழனுருபு விரிக்க. ஆங்கு - அவ்விடத்தில்; திருமுன்றிலினுள். எவையும் - ஆங்குப் - பருக்கையுடன் ஒக்க - ஏந்தி - எறிந்தார் என்று கூட்டி முடிக்க. எவையும் - பொன்னும் மணிகளும். உம்மை முற்றும்மை. இவையேயன்றி வேறு எவையாயினும் அவையும் என்றதும் குறிப்பு. பருக்கை - பருக்கைக் கற்கள். பருக்கையுடன் ஒக்க ஏந்தி - ஒக்க - ஒத்தலால் என்று காரணப் பொருட்டாய் வந்த வினையெச்சம். பருக்கையுடன் - பொன்னையும் மணிகளையும் ஏந்தி எறிதற்குக் காரணங் கூறியவாறு. ஒத்தலாவது ஏனைப் பருக்கைகள் போலவே இவையும் வலம் வந்து வணங்கும் அடியார் திருவடிகளை ஊறுபடுத்துவதன்கண் ஒத்த தன்மையுடைமை. பருக்கைகளுடன் இவற்றையும் ஒக்க - ஒன்று போலவே - ஏந்தி என்றலுமாம். இங்கு "ஓட்டில் தமனியத்திற் சமபுத்தி பண்ணி" (சித்தி) என்ற மனநிலை குறிப்பிப்பதாகக் கொண்டு, அந்நிலையினால் உழவாரத்தில் ஒக்க ஏந்தினார் என்று விசேடவுரை காண்பாருமுண்டு. அந்நிலை வேறு. அங்கு ஓடும் பொன்னும் பிரித்துணரப்படாது இரண்டும் மாயை காரியம் என்ற ஒருநிலைப் பற்றி உணரப்படும். "ஓடும் செம்பொனு மொக்கவே நோக்குவார்" (143) காண்க. ஈண்டு, இவை, பொன்னென்றும், மணி யென்றும், பருக்கை என்றும் |