பக்கம் எண் :


726திருத்தொண்டர் புராணம்

 

பிரித்துணரப்பட்டனவாயினும் திருமுன்றிலிற் கிடக்கத்தகாமையும், அடியார்க்கிடையூறு செய்வதும் ஆகிய தன்மையில் ஒக்க எண்ணப்பட்டன என்க.

பூங்கமல வாவி - இது திருக்கோயிலைச்சுற்றி உள்ளது. "பொய்கை சூழும் பூம்புகலூர்" (1017).

வாவியிற் புக - அடியார் அடிகளிற் படாமை கருதி நீரினுள் எறிந்தார். உலகிற் கலாம் விளையக் காரணமாகும் தன்மை கருதியும், உலக நன்மையின் பொருட்டு, நீரினுள் மறைந்து கிடக்க எறிந்தார் என்பதும் குறிப்பு.

எறிந்தார் - தீமை தரும் பண்டமாதலின் தீண்டாது எவையும் எறியப்பட்டன என்பதும் குறிப்பு.

பருக்கையுடன் - ஒக்க - ஏந்தி - எறிந்தார் - "நவமின் சுடர்மணி.......மணிபோ காட்டி" - (1428) என்றவிடத்தும் மணிகளைத் திருவலகிட்டு மாற்றுதல் கூறப்பட்டது. ஆயின், அவை, தேவர் முடிகளினின்றும் வீழ்ந்த சிறுமணிகள். அடியார் அடிகளை ஊறுபடுத்தாவாயினும் குப்பை என மாற்றப்பட்டன. "அந்தியும் பகலும் தொண்ட ரலகிடுங் குப்பை யாக்கும்" என்ற திருவிளையாடற் புராணம் காண்க. அவை சிலர் முடித்து வீழ்த்த தூய்மையற்ற பொருள்களாய் நாயனார் வரும் வழியில் கிடக்கத் தகாதன வாதலும் காணப்படும். ஆனால் இங்கு நாயனார் ஏந்தி எறிந்தவை, உலகர் மிக விலை பெறக் கொள்ளும் புதிய மணிகளாய், ஏனையோர்க்குப் பயன்படத் தக்கவையாதல் காண்க. உலகப் பொருளில் அறவே பற்றுவிட்டோரே இவற்றை ஒதுக்குவர் என்பதறிக.

ஆங்கவையும் - என்பதும் பாடம்.

417

1683.

புல்லோடுங் கல்லோடும் பொன்னோடு மணியோடுஞ்
சொல்லோடும் வேறுபா டிலாநிலைமை துணிந்திருந்த
நல்லோர்முன் றிருப்புகலூர் நாயகனார் திருவருளால்
வில்லோடு நுதன்மடவார் விசும்பூடு வந்திழிந்தார்.

418

(இ-ள்.) வெளிப்படை. புல்லுடனும், கல்லுடனும், பொன்னுடனும், மணிகளுடனும் சொல் ஓடும் வேறுபாடு இல்லை என்னும் நிலையைத் துணிந்து மனம் சிறிதும் மாறுதலின்றி இருந்த நல்லோராகிய நாயனாரது முன்பு, திருப்புகலூர் இறைவரது திருவருளினாலே வில்லைத் தோற்கடிக்கும் புருவங்கள் வளைந்தசைதற்கிடமாகிய நெற்றியையுடைய பெண்கள் விண்ணுலகத்தினின்றும் ஆகாய வழியாக வந்து இழிந்தனர்.

(வி-ரை.) புல் - கல் - திருமுன்றிலில் இருந்தவை; இவை என்றும் களைந்து பணி செய்தற்குரியன; பொன் மணி - இவை அன்று வந்து தோன்றியவை. ஓடும் என்ற உருபை புல் - கல் - பொன் - மணி என்பவற்றுடன் தனித்தனி புணர்த்தியது, அவற்றினியல்பை தனித்தனி கண்டு வேறுபாடில்லாத தன்மை கண்ட குறிப்பாம்.

சொல் ஓடும் வேறுபாடு இலா நிலைமை சொல்லாற் செல்கின்ற வேறுபாடு உண்மையில் இல்லாத தன்மை. ஓடும் - சொல்கின்ற; பெயரெச்சம். ஓடும் என்றவை முன்னைய நான்கும் மூன்றனுருபுகள். உம்மைகள் நான்கும் எண்ணும்மைகள். சொல்லோடும் - என்றதனையும் சொல்லுடனும் என்றும், பொருளால் வேறுபாடிலாமையன்றி என்றும் உரைப்பாருமுண்டு. இது ஆசிரியரது சுவைபடும் சொற்பின் வருநிலை என்ற சொல்லணிகளுள் ஒன்று. 65-ம் ஆண்டுரைத்தவையும் பார்க்க. புல் - கல் - பொன் - மணி என்ற இப்பெயர் வேறுபாடு சொல்லால் வருவன. உண்மை நிலையில் இப்பொருள்கள் யாவையும் மாயையின் காரியங்கள் என்று காணும் தன்மைகொண்டு முன்னையவை போலவே