பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்729

 

இசைபாடுவார் - இப்பாட்டினால் அரம்பையாரது பாடலின் இயல்பு கூறப்பட்டது. ஆடலின் தன்மை மேல்வரும் பாட்டிற் கூறுவார்.

கானவழ திசைபரக்கும் - என்பதும் பாடம்.

419

1685. (வி-ரை.) கற்பகப்பூந் தளிர் அடி - பூந்தளிர் - மெல்லிய தளிர். அழகிய தளிர் என்றலுமாம். தெய்வ அரம்பையராதலின் கற்பகத் தளிரிற் பழகிய அடிகள் என்ற குறிப்புமாம்.

போம் - செல்கின்ற. நூலிற்குறித்த அளவுக்கொத்தபடி பெயர்த்து வைக்கப்படுகின்ற. முன் பயின்ற - பழகிய - என்றுரைத்தனர் முன் உரைகாரர்கள்.

சாரிகை - ஆடல் வகையுள் ஒன்று. இது புறக்கூத்திற் குரியது. வட்டமாய்த் திரிந்து வருதல் என்பர். சாரிகை செய்தல் என்பது மரபு. சாரிகை திரிதல் என்றும் கூறுப.

உற்பல மென் மகிழ்விரல் - உற்பலம் - இங்குச் செங்காந்தள் குறித்தது. மென்மகிழ் - மெல்லிய அரும்பு. முகிழ் விரல் - முகிழ்போலும் விரல். தளிர் அடி என்றும், முகில் விரல் என்றும், கூறியதற்கேற்பக் கயற்கண் என்றதும் காண்க. பண்புபற்றி வந்த உவம உருவுகள் தொக்கன. பூந்தளிர் என்றும், மென்முகிழ் என்றும், பொருகயல் என்றும் மூன்றிடத்தும் உவமைப் பொருள்களுக்கு ஏற்ற அடைமொழிகள் புணர்த்தி ஓதினமை அவ்வுவமைகளின் பொதுத்தன்மையை விளக்குவன.

விரல் வட்டணையோடும் - கை - பெயர - விரல்களாற் காட்டப்படும் வட்டணை என்ற அவிநயத்துடனே கை பெயர. பெயர்தல் - அசைதல். வட்டணை - வர்த்தனை என்ப. இதனைப் "பிண்டியும் பிணையலும் எழிற்கையுந் தொழிற்கையும்" என்பதாதியாகச் சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதையில் (12 - 25) விரித்துரைத்தவாற்றாலறிந்து கொள்க. விரல் வட்டணை - விரல்களின் சேர்க்கை. குவித்தல் - விரித்தல் - சுழற்றுதல் முதலியவாற்றால் குறித்த பொருளை எடுத்துக் காட்டுதல். இவ்வாறு கையாற் செய்வது எனப்படும்.

பொற்பு உறும் அக்கையின் வழி - கையினாற் காட்டும் அந்த அவிநயத்தின் வழியே ஒத்து அமைந்து. பொற்பு - இங்குப் பொருளமைதி குறித்தது. அதாவது அவிநயம்.

கண் புடை பெயர்தலாவது சுழலுதல் - விழித்தல் - இமைத்தல் முதலியவாற்றால் உட்கோள் புலப்பட அசைதல். காமப்போரில் முந்து நின்று தொழில் செய்வன கண்களே யாதலின் பொருகயல் என்று உவமை கூறினார். "செரு எழுந் தனு" (திருஞான - புரா - 1097) என்பது காண்க.

அடி - சாரிகை செய்ய - கை வட்டணையோடும் பெயர - கண் - கையின் வழி பெயர - என்று இம்மூன்றானும் ஆடலின் இயல்பெல்லாம் வடித்து எடுத்துக் காட்டியவாறு கண்டுகொள்க. கால் - கை - கண் என்றிம்மூன்றானும் ஒன்றித்த அகப்பொருளைக் காட்டுவதே ஆடலின் நுட்பமு மமைதியுமாம். மிடற்றுப் பாடலின் இயல்பை 221-ம் பாட்டிலும், கருவிப்பாடலுட் சிறந்த குழலின் இயல்பை ஆனாநாயனார் புராணத்துள்ளும் (947 - 953), பாடலுடன் இயைந்த ஆடல் இயல்பை இங்கும் வைத்துக் காட்டியது ஆசிரியரது கவிமாண்பு.

அற்புதப் பொற்கொடி - பொற்கொடி ஆடாது; ஆனாற் பொற்கொடி போன்ற இவர்கள் ஆடுதலின் அற்புதம் என்றார். ஆடுவபோல் - இல்பொருளுவமை. நுடங்குதல் - துவளுதல்.