எழுந்தாார் - எழுந்தாராகி. முற்றெச்சம். எழுந்தார் - கழிந்து - சூழ்ந்து - ஊன்றிக் - காணாமே - சென்று - அடைவார் - என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி வினை முடிபு செய்துகொள்க. எழுந்தார் - என்றதனை வினைமுற்றாகவே கொண்டு இந்த இரண்டு பாட்டுக்களையும் ஒன்றாகக் கூட்டி முடிப்பாருமுண்டு. பொருளும் சொல்லும் தொடர்ந்து செல்லும் நிலைநோக்கி வினையெச்சமாகக் கொண்டு உரைக்கப்பட்டது. 60 1326. (வி-ரை.) பொய்தரும் மால் உள்ளம் - பொய்யினையே பயனாகத்தரும் மயக்க உணர்ச்சி பொருந்திய உள்ளம். சமணர் இடம் - சமணர் பள்ளி. கழிந்து - நீங்கி. மெய் தருவான் நெறி - சிவனது நெறி. மெய் - சிவசத்தாகிய தனது நிலை. தருவான் - அதனை உயிர்கள் பெறும்படி கொடுப்பவன். மெய்தருவான் - சிவபெருமான். தருவான் - வினையாலணையும் பெயர். தரு - என்பதனை வினைத்தொகையாக்கி வான்நெறி - என்று பிரித்து, மெய்யைத்தரும் வானத்தை அடையும் நெறி என்று உரைப்பாருமுண்டு. இப்பொருட்கு வான் - முத்திதரும் மேலுலகம் என்க. "வெருளின் மெய்ம்மொழி வானிழல்" (பாயிரம்). வெண் புடைவை மெய்சூழ்ந்து - வெண்மை - தூய்மைக்கும்புகழுக்கும் உரிய நிறம். வெண்புடைவை - சிவந்த கல்லாடை புனையும் துறவிகளன்றி, ஏனைய சைவர்க்குரிய உடை. ஏனைய நிறம்பற்றிய உடைகளை உடுத்தலாகாது என்பது விதி. புடைவை - புடவை எனவும் வழங்கும். இது இந்நாளில் வழக்கில் பெரும்பான்மை பெண்களணியும் உடைக்கு வழங்குவதாயிற்று. உடம்பின் புடைசூழ்வதனால் புடைவை எனப்படும். கைதருவார் தமை ஊன்றி - கை தருவார் - கைகொடுத்துத் தாங்கி வழிச் செல்ல வுதவுவோர். ஊன்றுதல் - அவர்களது கைத்தாங்கிய பலத்தின் உதவிகொண்டு ஊன்றிச் செல்லுதல். சூலைநோயுட் பட்டதனால் தாமே நடந்துசெல்ல இயலாத பலக்குறைவாகிய நிலை குறித்தது. அந்நிலையினும் மனத்துணிவும் முயற்சியும் எழுதலால் பிறருதவியினால் நடந்தனர் என்பது. தமையன்றி - என்பது பாடமாயின் வேறொருவரும் துணையின்றி என்றுரைக்க. காணாமே - பிறர் காணாதவாறு. இதன் காரணம் "அல்லாகும் பொழுதணைவாய்" (1322) என்றவிடத் துரைக்கப்பட்டது. இரவின்கண் - அடைவார் - சென்று - அணைந்தார் என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. அடைவார் - அடைவாராகி. எதிர்காலத் தெரிநிலைவினை முற்றெச்சம். அடைவார் - அணைந்தார் என்க. செய்தவ மாதவர் - செய்தவம் - பெரியோர் செய்யும் தவம். செய்யத்தக்க தவம் என்றலுமாம். மாதவர் - பெரிய தவத்தை உடையோர். "தவமும் தவமுடையார்க்காகும்" (குறள்) என்றபடி தவம்செய்யும் முன்னைத் தவமுடைய பெரியோர். மாதவர் என்பது திருவதிகையில் வாழும் தவமுனிவர் எல்லாரையும் பொதுவாயும், திலகவதியம்மையாரைச் சிறப்பாயும் குறித்து நின்றது. மாது அவர் என்று பிரித்து அம்மையாருக்கே சிறப்பாக ஆக்கி உரைத்தலுமொன்று. முன்னைத் தவமுடைய பெரியோர்களே திருவதிகையில் வாழப்பெறுவர் என்பதும் தொனிப்பொருள். சீவன்முத்தரே யாயினும் பிராரத்தவாதனை தாக் |