பக்கம் எண் :


74திருத்தொண்டர் புராணம்

 

காமைப் பொருடடும், நடந்து காட்டிப் பிறரை வழிப்படுத்தற் பொருட்டும் தலங்களி லுறைந்து வழிபடுபவர் என்பது உண்மைநூற் றுணிபு.

இடங்கழித்து - என்பதும் பாடம்.

61

1327. (வி-ரை.) சுலவுதல் - சுழலுதல். சுருட்டிப் பிடிப்பதுபோல உளைவித்தல். பிறவினைப் பொருளில் வந்தது.

சூலைநோய் உடன் தொடர - தாம் மேற்கொண்டிருந்த பசுபாசச் செயல்களான் வந்த பாய் - குண்டிகை - பீலி முதலிய கேடுகள் சமண்பள்ளியில் ஒழியவும், தம் வசமல்லாது அருள் உருவாய் இறைவன் தந்த சூலைமட்டும் தம்முடனே தொடரவும் என்க. உடன் - "உடனானானிடம் வீழிம்மிழலையே" (ஆளுடைய பிள்ளையார் தேவாரம்) என்றபடி உயிர்களினின்றும் நீங்காது உடன்நின்று தொடர்ந்து ஈடேற்றுவது அருளுருநிலை என்பது ஞானசாத்திர முடிபு. "அகத்துறு நோய்க் குள்ளினரன்றி யதனைச், சகத்தவருங் காண்பரோ தான்" என்ற (திருவருட்பயன் - 42) கருத்து ஈண்டு உணரத்தக்கது.

மேவி எழும் பெருவிருப்புக் கொண்டு அணைய - நோய் நடந்து செல்லமாட்டாமையை விளைப்பினும், மனத்துள் எழுந்த பெருவிருப்பம் பற்றி வலித்து ஈர்த்துக் கொண்டு அணைவிக்க. கொண்டு - பற்றிக்கொண்டு - பிடித்துக்கொண்டு. குலவுதல் - விளங்குதல். "குலாவுபாதம்", "குலாத்தில்லை" காண்க.

எழும் பெருவிருப்பு - அடங்காது மேன்மேலெழும் பெரிய விருப்பம் - காதல். வீழ்ந்த நிலையினின்றும் எழும் என்ற குறிப்பும் காண்க.

நோய் உடன் தொடர - என்றதனால் சூலை அவர்க்குப் பின்னரும், விருப்புக் கொண்டு அணைய - என்றதனால் ஆசை அவர்க்கு முன்னரும், ஆக இருபுறமும் அவரை ஈர்த்தும் உந்தியும் சென்றன என்க. "நாணனு மன்பு முன்பு நளிர் வரை யேற" (752), "வன்றொண்டர் மனமுந் தொடர" (ஏயர்கோன் - 335) முதலியவை காண்க.

குலவரை.......எதிர்கொள் - குலவரை - எண்திக்கின் மாமலை. வரைபோன்றிலகு மதில் என்றது மெய்பற்றிவந்த உவமம். மதில் மணிச்சோதி - என்க. மதிலில் அழுத்திய மணிகளின் சோதி.

மதிற்சோதி எதிர்கொள் - மதிலின் ஒளி அவர்க்குமுன் எதிர்கொள்வது போன்று தோன்ற, நகரத்தை அணுகுவோர் முதலிற் காண்பது உயர்ச்சியுள்ள அதன் மதிலேயாதலின் மதிற்சோதி என்றார். எதிர்கொள் - கண்ணிந்திரியம் தானின்ற இடத்தினின்றும் நெடுந்தூரம் சென்றும் பொருளையறியுமாதலின் பெருவிருப்புடன் வரும் அவர்க்கு உயர்ந்த மதிலின் சோதி முதலிற் கட்புலனாயிற்று. அவ்வாறு புலனாகியது மதிலின் ஒளியே யாதலின் சோதி எதிர்கொள் என்றார். எதிர்கொள் என்றது தற்குறிப்பேற்றவணி. இருளின் நீங்கி வருவாரை ஒளி எதிர்கொள என்றது பின்வரும் நன்னிகழ்ச்சியினைக் காட்டும் முற்குறிப்புமாம். இரவில் திசைநோக்கி வருவார்க்குச் சோதியும் துணைசெய்து ஈர்த்தது என்பதும் குறிப்பு. இதுவரை இருட்குழாத்துள் இருந்தவர், இனி, ஒளி நெறியினுள் வருகின்றார் என்ற பொருளும் காண்க. எதிர்கொள்கின்ற சோதியினையுடைய என்றுரைத்தலுமாம்.

திலவதியார் இருந்த திருமடம் - சிவன் பணியாகிய தவம் செய்யும் தாபதியாராயும், நாயனாரை வழிப்படுத்திய ஆசாரியராயும் இருந்தவர் இருந்த இடமாதலின் திருமடம் எனப்பட்டது. இது திருக்கோயிலின் கீழ்புறம் இருந்ததென்ப. அதன் நினைவுக்குரிய அடையாளங்கள் இப்போதும் அங்கு உள்ளன.