மூளும் அருந்துயர் உழந்தீர் - மூளுதல் - வந்துமுடுகிப் பெருகுதல். தமது விண்ணப்பத்திற் கிரங்கிப் பெருமானருளியபடி வந்துமூளுங் என்பது குறிப்பு. உழத்தல் - மிக வருந்துதல். உழந்தீர் - வருந்தினீர் என இரக்கப் பொருளில் வந்த வினைமுற்றாகவும், வருந்தியவரே! என விளிவேற்றுமையில் வந்த வினைப்பெயராகவும் உரைக்க நின்றது. எழுந்திரீர்! - எழுவீராக! - சூலையினின்றும் நீங்கி எனவும், மயக்கத்துட் பட்டு வீழ்ந்த நிலையினின்றும் நீங்கி எனவும் உரைக்க நின்றது. எழுந்து இரீர் என்று பிரித்து, மேல் எழுவதுடன் திருவடிச்சார்பில் என்றும் நிலைபெற்று இருப்பீராக என்று பொருள் செய்யத்தக்க குறிப்பும் காண்க. "திருவடிக்கீழ் நாமிருப்பதே" என்ற திருக்குறள் தொகையின்படி வந்த ஆனந்த விளைவு இந்த ஆசியின் ஒரு பயனாக விளைந்தது என்று வைத்தும் சிந்திக்கற்பாலது. 67 1330. | மற்றவுரை கேட்டலுமே மருணீக்கி யார்தாமும் உற்றபிணி யுடனடுக்கி யெழுந்துதொழ வுயர்தவத்தோர் "கற்றைவே ணியரருளே காணுமிது; கழலடைந்தோர் பற்றறுப்பார் தமைப்பணிந்து பணிசெய்வீ" ரெனப்பணிந்தார். |
(இ-ள்.) வெளிப்படை. மற்று அவ்வுரையினைக் கேட்டதும் மருணீக்கியார் தாமும் பொருந்திய நோயுடனே நிலத்தில் விழுந்த நிலையினின்றும் எழுந்து தொழவே, உயர் தவத்தோராகிய திலகவதியார், "இது கற்றையாகிய சடையினை யுடையாரது திருவருளே காணும்; தமது திருவடிச் சார்பினை அடைந்தோரது பற்றுக்களை அறுப்பவராகிய அவரைப் பணிந்து பணிசெய்வீராக என்று பணித்தருளினர். (வி-ரை.) அவ்வுரை - எழுந்திரீர் என்ற ஆசியுரை. மற்று என்பது சூலையினால் வருந்தும் நிலையை மாற்றும் குறிப்புடன் எழுந்த வினைமாற்றுப் பொருளில் வந்தது. மாற்று என்பது மற்று என வந்ததாகக் கொண்டுரைத்தலுமாம். கேட்டலுமே - எழுந்து - தொழ என்க. கேட்டலுமே - கேட்டவுடன் என்று ஏகாரம் விரைவுக் குறிப்புக்கொண்ட அசைநிலைப் பொருளில் வந்தது. தாமும் - சிறப்புமை. எழுந்திரீர் என்றதனால் அக்கட்டளையின்படி பிணியுடன் நடுங்கி எழுந்தனர். தொழ - அம்மையார் ஆசியுரைத்ததற்கும், "உய்ந்து கரையேறு நெறி உரை"த்ததற்கும் நன்றி செய்யும் வகையால் தொழுதனர் என்க. கற்றை வேணியர் அருளே காணும் இது என்றது. "உடற்சூலைக் கிடைந்தடைந்தேன்" என்று தம்பியார் விண்ணப்பித்தமையால், "அது தீய நோயன்று - திருவருளின் செயலேயாம் எனக் காண்க" என்று உண்மையைத் தெருட்டியபடி. கழலடைந்தோர்........பணி செய்வீர் என்றது "இனி மயங்காதுய்ந்து கரையேறும் நெறியுரைத் தருளும்" என்று அவர் விண்ணப்பித்ததற்கு விடுத்த விடையாகும். பணி செய்வர் என்றது ஆற்றுப்படுத்திய வகை. பணித்தல் - கட்டளையிட்டருளுதல். எழுந்திரீர் என்றதும், பணி செய்வீர் என்றதும் ஆகிய இவை வாசகதீக்கையின்பாற்படும். கழல் - திருவருள் நிறைவு. திருக்குறளினுட் கடவுள் வாழ்த்தில் தாள் - அடி - என்று இதனையே குறித்து வாழ்த்திய கருத்துக்களையும், "முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே" (பிள்ளையார்), "என்கடன் பணி செய்து கிடப்பதே" (அப்பர்) என்ற திருவாக்குக்களையும் கருதுக. 65 |