1331. | என்றபொழு தவரருளை யெதிரேற்றுக் கொண்டிறைஞ்ச, நின்றதபோ தனியாரு நின்மலன்பே ரருணினைந்து சென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக்கயிலைக் குன்றுடையார் திருநீற்றை யஞ்செழுத்தோ திக்கொடுத்தார். |
66 (இ-ள்.) வெளிப்படை. என்று பணித்தபொழுதில் அவருடைய அருளை எதிர் ஏற்றுக்கொண்டு அவர் வணங்க, நின்றதபோதனியாரும், சிவபெருமானது பேரருளினை நினைந்து, அவர் போய்த் திருவீரட்டம் புகுவதற்குத் தகுதியுடையவராக ஆக்குவதற்குத் திருக்கயிலைக் குன்றுடையவராகிய சிவபெருமானது திருவைந்தெழுத்தை ஓதி அவரது திருநீற்றைக் கொடுத்தனர். (வி-ரை.) என்றபொழுது - மேலே கூறியபடி பணித்தபொழுது. எதிர் ஏற்றுக் கொள்ளுதலாவது பணித்த அப்பொருளை அவ்வாறே தாமும் ஏற்றுக்கொள்ளுதல் கைகூடும் என்றதில் கை என்பதுபோல எதிர் என்பது உறுதிகாட்டும் முன்மொழி. இறைஞ்ச - ஏற்றுக்கொண்டதற் கறிகுறியாக வணங்கி. நின்ற தபோதனியார் - நின்ற தம்பியாரது உயர்வை நாடிநின்ற எனவும், செந்நெறியிற் பிறழாது நின்ற எனவும், தமது திருப்பணியிற் செல்ல நின்ற எனவும், பலவாறும் உரைக்க நின்றது. தபோதனியார் - 1313 பார்க்க. நின்மலன் பேரருள் நினைந்து - கொடுத்தார் - என்க. முன்னர் 1329-ல் "அருள் நினைந்து" என்றது குலைதந்து ஆட்கொண்டமை கருதி நினைந்ததுவும், இங்கு நினைந்தமை தீக்கை செய்யும்முன் இறைவன் திருவருளைநாடி வேண்டிக் கொள்ளும் ஆகம விதி பற்றியதுமாம். 1329-உரை பார்க்க. சிவதீக்கை வகையுட் கிரியாவதி தீக்கை செய்யுங்காலத்து தீக்கை மண்டபத்தினுள் மாணாக்கனைப் புகவிடும்போது, சிவனை நினைந்து "பகவானே! இந்த மாணாக்கன் பக்குவமுடையவன்; இவன் என்னிடம்வந்து அருள் புரியும்படி வேண்டுதலினால் நானிவனை உம்முடைய திருவடியை நினைந்து பணிசெய்யத் தகுதியுடையவனாகச் செய்கின்றேன்; அதற்கு நீர் அருள் புரியவேண்டும்" என்று ஆசாரியர் வேண்டிக்கொண்டு தீக்கை செய்யப் புகும் ஆகமவிதிப் பகுதி இங்கு நினைவு கூாந்து கொள்ளத் தக்கது. ஆசாரியன் தானே துய்மை செய்கின்றேன் என எண்ணாது இறைவன் அருளால் செய்கின்றேன் என எண்ணிப் புகுதல் மரபாகும். முன்னர் 1329-ல் அருள் நினைந்து என்ற ஆசிரியர், இங்குப் பேரருள் நினைந்து என்றதும், நின்மலன் என்றதும் கருதுக. நின்மலன் - இயல்பாகவே பாசங்களி னீங்கியவரும், அடைந்தாரது மலங்களைப் போக்குபவரும் ஆகியவர் என்ற கருத்துப்படக் கூறியதும் காண்க. அருள் நினைந்து கொடுத்தமையால் அவனருள் கைகொடுத்து ஈடேற்றும் என்பது உறுதிப்பாடு. திருவீரட்டம் புகுவதற்குக் - கொடுத்தார் - புகுவதற்குத் தக்கவராக ஆக்கத்திரு ஐந்தெழுத்தும் திருநீறும் சாதனங்களாகும் என்பது. இவை சிவசாதனங்கள் எனப்படும். திருநீறும் திருவைந்தெழுத்தும் சார்பு கொள்ளாதோர் திருக்கோயில் புகுவதற்குத் தகுதியற்றவர் என்பது ஆன்றோர் துணிபும் உண்மை நூல் விதியுமாம். திருக்கயிலைக் குன்றுடையார் திருநீறு - அவர்க்கு உரிமையான - அவர் - உகந்த அவர் அணிந்த - அவர் அருளிய எனப் பலவாறும் கொள்ள நின்றது. குன்றுடையார் - என்றதனையும், திரு என்றதனையும் அஞ்செழுத்து என்றதுடனும் கூட்டுக. அஞ்செழுத்தோதி என்றதனால் மந்திரங்கூறும் தீக்கை குறிப்பிடத்தக்கது. |