செப்பருஞ்சீர் - தியாகேசர் தமது திருவாக்கால் அடியும் பொருளும் எடுத்துக்கொடுக்க அத்திருவருட்டுணை கொண்டு அருளிய பதிகத்துள் இவ்வாறு எடுத்துப் போற்றப்படும் சிறப்பும், செய்து வந்த திருத்தொண்டின் சிறப்புமாம். அத்திருத்தொண்டின் சிறப்புப்பற்றியே இவ்வாறு எடுத்துப் போற்றப்பட்டார் என்பார் "திருத்தொண்டின் வழாதவர்" என்று காரணப் பொருள்பட மேல் விரித்தார். வழாதவர் ஆதலின் ஓதிய என்பது குறிப்பு. குலச்சிறை - குலங்காப்பவர் என்பது சொற்பொருள். (தக்கயாகப் பரணியுரை). திண்மை - மனத்திட்பம் - மதித்திட்பம் - செயற்றிட்பம் முதலிய எல்லாம் கொள்ளப்படும். "எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார், திண்ணியராகப் பெறின்" (குறள்) என்ற நிலையில் உயர்ந்த தன்மை. இவரது திண்மையே தென்னவன் உய்வதற்கும் தென்னவனோடும் ஏனை நாடுகளும், திருநீறு சிறத்தற்கும், அமண் இருள் மாய்வதற்கும் காரணமாயினமை குறிப்பு. திண்மை வைப்பு - திண்மைக்கிருப்பிடமாகிய தன்மை. திருத்தொண்டு சிவன் அடியாரிடத்தும் சிவனிடத்தும் முக்கரணங்களாலும் செய்யும் தொண்டு. இவற்றுள் அடியார் தொண்டினை மேல்வரும் ஐந்து பாட்டுக்களாலும், அரன்பால் தொண்டினை 1703 -லும் விரிப்பார். வழாமையாவது எஞ்ஞான்றும் பிறழாதிருத்தல். 2 1697. | கார ணங்கண் ணுதற்கன்ப ரென்னவே வார மாகி மகிழ்ந்தவர் தாண்மிசை யாரு மன்பொடு வீழ்ந்தஞ் சலிமுகிழ்த் தீர நன்மொழி யெய்த விசைத்துளார். |
3 (இ-ள்.) காரணம்...என்னவே - சிவனுக்கன்பர்களே காரணமாவார் என்றே துணிந்ததனால்; வாரமாகி மகிழ்ந்து - அன்பு நிறைந்து மகிழ்ந்து; அவர் தாள் மிசை...இசைத்துளார் அவர்களுடைய திருவடிகளில் மிக்க அன்பொடும்விழுந்து கைகள் கூப்பித் தொழுது அன்புடைய நல்ல மொழிகளைப் பொருந்தச் சொல்லியுள்ளார்; (அக்குலச் சிறையார்). (வி-ரை.) காரணம் - சிவனருள் பெறுதற்கும் - காரணமாவார். அடியார்களிடத்து அன்பு செலுத்திய அளவே சிவனருள் விளைவு உண்டாமாதலால் காரணம் என்றார். சிவனருள் பெறுதற்கு என்பதற்கு என்பது இசையெச்சம். இவ்வாறன்றிக், கண்ணு தற்கன்பரென்னுங் காரணத்தால் வாரமாகி என்று கூட்டியுரைப்பினுமமையும். என்னவே - என்று கொண்ட அதனாலே; வாரமாகி மகிழ்ந்து - என்றதனால் மனத்தின் செய்கையும், வீழ்ந்து - முகிழ்த்து என்றமையால் உடம்பின் செய்கையும், மொழி இசைத்துள்ளார் என்றமையால் வாக்கின் செய்கையும் உடன் கூறினார். ஆண்டவன் வணக்கம் போலவே அடியார் வழிபாடும் இவ்வாறு செய்யத்தகுவது என்று காட்டியபடியுமாம். வீழ்ந்து - அஞ்சலி முகிழ்த்து - அடி வீழ்தல் கும்பிடுதலின் முன் நிகழத்தக்க தென்பது குறிக்க முன் வைத்தார். அஞ்சலி முகிழ்த்தல் - சிரத்தின்மேல் கைகூப்பித் தொழுதல். இருகைகளையும் சிரமேற் குவித்தபோது தாமரை மொட்டுப் போன்றிருத்தலின் முகிழ்ந்து என்றார். முகிழ் - மலரின் மொட்டு. ஆருமன்பொடு என்றதனை வீழ்தல் - முகிழ்த்தல் இசைத்தல் என்ற எல்லா இடத்தும் தனித்தனிக் கூட்டுக. |