பக்கம் எண் :


80திருத்தொண்டர் புராணம்

 

தல் வேண்டும். சிவசந்நிதி - நெருப்பு - குருசந்நிதி - இவற்றுக்கெதிரிலும், நடக்கும் வழியிலும், தூய்மையற்ற இடத்திலும் நீறு இடுதலும், நின்றுகொண்டு அணிதலும் முதலியவை குற்றமாம். இவை முதலிய விதிகளின் விரிவு சிவாகமங்களுள்ளும், உபநிடத முதலிய வேதங்களுள்ளும், வழி நூல்களுள்ளும் கண்டு கொள்க.

திருவாளன் திருநீறு - நீற்றின் பெருமை முன்னர்ப் பலவிடத்தும் உரைக்கப்பட்டது. பின்னர் ஆளுடைய பிள்ளையார் புராணத்தும், பிறாண்டும் வந்த வழிக்கண்டுகொள்க. திருநீற்றுப் பதிகத்தும் காண்க.

உரு ஆர அணிந்து - உரு - திருமேனி. நிறம். என்றலுமாம். உருவுவமம் என்பது காண்க. "ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள்" (திருவாசகம்). "தூய வெண்ணீறு துதைந்தபொன் மேனியும்" (1405) என்பது காண்க. இதனை "நீற்றா னிறைவாகிய மேனியுடன்" (1335) என்பதும் பார்க்க.

அளிப்ப - கருணையுடன் கொடுக்க என்பது குறிப்பு.

பெருவாழ்வு - சூலை தீர்க்கும் இவ்வுலக வாழ்வும், பிறவிநோய் தீர்க்கும் பேரின்ப வாழ்வும் தருதலாற் பெருவாழ்வு எனப்பட்டது.

வந்தது என - இதுநீறுபெற்றபோது நாயனாரின் மனவாக்குக்களின் செய்கை. வந்தது - இறந்தகாலம் விரைவும் உறுதிப்பாடும் குறித்தது. பணிந்து - ஏற்று - அணிந்து என்பன அப்போது அவரது மெய்யின் செய்கை. ஆர்தல் - நிறைதல். பெருவிருப்பம் குறித்தது. "கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும், எண்ணார வெண்ணத்தா லெண்ணியும்" என்ற அற்புதத் திருவந்தாதி காண்க.

உற்றவிடம் - துன்பம் உற்ற - நேர்ந்த - காலம். துன்பம் என்பது சொல்லெச்சம்.

உய்யுநெறி தருவாராய் - "உய்ந்துகரை யேறுநெறி யுரைத்தருளு" மெனத் (1328) தாம் வேண்டியவாறே தருபவராகி. "பத்தருக் கெய்ப்பினில் வைப்பெனவுதவும்" (திருவிடை - மும் - கோ - 7) என்றது காண்க.

தம்முன்பு வந்தார் - முன்பிறந்தவர் - தமக்கையார். முன்பு சென்றனராக என்ற பொருளுந்தர நின்றது.

பின்பு தாம் வந்தார் - அவர் முன்னே செல்லத் தாம் அவரைப் பின்பற்றித் திருவீரட்டானத்துக்கு வந்தனர். தாம் உலகில் அவதரித்த அம்முறையே இறைவரிடம் போந்தனர் என்ற பொருள்படும் நயமும் கண்டுகொள்க.

67

1333.

நீறணிந்தா ரகத்திருளு நிறைகங்குற் புறத்திருளும்
மாறவருந் திருப்பள்ளி யெழுச்சியினில் மாதவஞ்செய்
சீறடியார் திருவலகுந் திருமெழுக்குந் தோண்டியுங்கொண்
டாறணிந்தார் கோயிலினுள் ளடைந்தவரைக் கொடுபுக்கார்.

68

(இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு திருநீற்றினை அணிந்தவருடைய அகத்தில் இருந்த இருளும், புறத்தின் நிறைந்த கங்குலிருளும், மாறும்படி வரும், திருப்பள்ளியெழுச்சிக் காலத்தில் மாதவஞ் செய்யும் திலகவதியம்மையார் திருவலகும், திருமெழுக்கும், தோண்டியும் என்ற இவற்றைக் கையிற்கொண்டு, கங்கை யாற்றினைச் சூடிய திருவீரட்டானேசுவரரது திருக்கோயிலினுள்ளே, அடைந்தவராகிய நாயனாரையும் கொண்டு புகுந்தனர்.

(வி-ரை.) நீறணிந்தார் - அம்மையார் அளித்த திருநீற்றினை மேற்சொல்லியவாறு அணிந்தவருடைய. ஆறனுருபு விரித்துரைத்துக் கொள்க.