படும்; ஆதலால் திருக்குளம் பெருகக் கல்லவேண்டா என்றுரைத்த சமணர்களுக்குப் "பூசு நீறு சாந்தமெனப் புனைந்த பிரானுக் கான்பணி, ஆசி லாநல் லறமாவ தறிய வருமோ வுமக்கென்று" அறிவுறுத்திய வகையால் (தண்டியடிகள் புராணம் - 1) இதன் நுட்பத்தை விளக்கியருளியதும் காண்க. உலகர் கொள்ளு நலத்தினர் - இதனால் "நாடவர் நாடறிகின்ற நலம்" (மேற்படி - ஆலவாய் - 6) என்ற தேவாரத்தை விளக்கியவாறு. உலகர் - நாடவர்; கொள்ளும் - நாடறிகின்ற என்பதாம். இங்கு நாடு என்பது நாடுதலை யுணர்த்தி நின்றது. அலகில் தீமையர் - நாடவர் நாடறிகின்ற நலமில்லாமையே தீமை எனப்பட்டது. "நன்றென்ப சிலவே, தீரென்பசிலவே, யொன்றினும் படாதன சிலவே" (நோயினான் - 32) என்றபடி நன்மை தீமை யிரண்டுமல்லாதவையு முளவாமே! இங்கு "நலமிலராக" என்ற தேவாரத்திற்கு "அலகில் தீமையர்" என்று ஆசிரியர் உரை விரித்தது என்னையோ? எனின், அற்றன்று; நாடவர் நாடறிவகையால் உலகர் கொள்ளும் நலங்கள் எல்லாம் வேதத்தினுள் "தர்மங்களைச் செய் - சத்தியத்தைச் சொல்" (தர்மம் சர;சத்தியம் வத) என்ற இரண்டனுள் அடங்க விதிக்கப்பட்டன. அவ்விரண்டினையும் செய்யாமை தீமையேயாம் என்பது ஆன்றோர் துணிபாதலின் நலமில்லார் தீமையரே யாவர் என்று ஆசிரியர் வற்புறுத்திக் காட்டியவாறாம். சிறப்பின்மைபற்றித் தீமையர் எனப் பின்வைத்தார். நலமிலராயினும் அன்புநெறி பற்றிப் பணியத்தக்கார் என்பதையும், அவ்வொழுக்கத்துள் நின்றமை குலச்சிறையாரது பெருமை என்பதனையும் வலியுறுத்தும்படி தேவாரத்தினுள் "நலமிலராக" என்று முன்வைத்தோதினார். "சீலமிலரேயெனினுந் திருநீறு சேர்ந்தாரை, ஞாலமிகழ்த் தருநகரம் நண்ணாம் லெண்ணுவார்" (நரசிங்கர் புராணம் - 7) என்றவிடத்து இந்நுட்பம் விளக்கப்பட்டது காண்க. அம்புலி இலகு செஞ்சடையார் - தீமைபற்றித் தேய்வுற்ற அம்புலிக்கும் அருளிய பெருமானது அடியார்கள் உலக நலமின்மைபற்றி அன்புடையார்களை இகழாது ஏற்றுக்கொள்வது இயல்பே என்பது குறிப்பு. தலமுற - உடல் நிலம் பொருந்த. இவ்வொழுக்கங் கண்டு உலகம் நன்னெறி பொருந்த என்றும், சிவன் அடித்தலங்களைத் தாம்பொருந்த என்றும் உரைக்க நின்றது. தகைமை - இதுவே தகுதியுடைய நெறி என்றது குறிப்பு. நலத்துளர் - சடையாரடியார் - என்பனவும் பாடங்கள். 5 1700. | பண்பு மிக்கார் பலரா யணையினும், உண்ப வேண்டி யொருவ ரணையினும், எண்பெ ருக்கிய வன்பா லெதிர்கொண்டு நண்பு கூர்ந்தமு தூட்டு நலத்தினார்; |
6 (இ-ள்.) பண்பு....அணையினும் - (அவர்) பண்பினால் மிக்கார்கள் - பெரும் கூட்டத்தாராய் வந்தாலும்; உண்ப...அணையினும் - உண்ணுபவற்றை விரும்ப ஒருவராய் வந்தாலும்; எண்பெருக்கிய....நலத்தினார் - எண்ணுதலில் மிகுதிப்பட்டு அன்பின் திறங்காரணமாக எதிர்கொண்டு அழைத்துக் கொண்டுவந்து நேயம்மிக்குத் திருவமுதூட்டும் நலத்தினை யுடையார்; |