(வி-ரை.) பலராய் அணையினும் - ஒருவர் அணையினும் - "கணங்களாய் வரினும் தமியராய் வரினும்" (மேற்படி ஆலவாய் 4) என்ற தேவாரக் கருத்தை விரித்துரைத்தபடி. பலராய் -"கணங்களாய்; ஓருவர் - "தமியராய்" என்க. உண்பவேண்டி - என்பதனை "உண்ப வேண்டிப் பலராய்" என, முன்னுங் கூட்டியுரைக்க இடையில் வைத்தோதினார். உண்ப - உண்ணப் படுமவற்றை - உணவுகளை உண்ப - உண்ணப்படுவன அகரலீற்றுப் பலவின்பால் வினைப்பெயர். உண்பவேண்டி என்றதனால் அவர்கள் அணைவதன் கருத்துக் கூறப்பட்டது. பண்பு - அன்புப்பண்பு. இது திருநீறு - கண்டிகை - கோவணம் முதலிய சிவசாதனங்களாலறியப்படும் என்பதனை வரும்பாட்டால் விளக்குவார். எண் பெருக்கிய அன்பால் - எண் - எண்ணம்; தியானம். பலகாலும் எண்ணி எண்ணி மனத்தினுட் பெருக்கிய. பேரன்பினால் என்றலுமாம். அமுது ஊட்டும் - ஊட்டுதல் - குழவிகளைத் தாய் ஊட்டுதல்போல அன்பு கொண்டு உண்ணச் செய்தல் என்பது குறிப்பு. நலத்தினால் - நலம் - சைவ நலம். தனினின்றும் வேறு பிரிக்க "உலகர் கொள்ளு நலம்" - என்று பிறிதினியைபு நீக்க முன் பாட்டில் உரைத்தது காண்க. அடியாரை உபசரிப்பவர்களுள்ளும், உலகில் பரவும் புகழ்ச்சிபற்றிச் செய்வோரும், பொருளை அளவுபடுத்திச் செய்வோரும் உள்ளாராதலின் அந்நிலைக்கேற்றவாறு அவர்கள் ஒருவர்வரின் குறைவுபட்டும், பலர்வரின் மிகுதிப்பட்டும், செயல் செய்வர். அல்லது அம்முறை மாறி மிகுதியாயும் குறைவாயும் செய்வர்; இந்நாயனார் அவ்வாறன்றி ஒருவர்வரினும் பலராய்வரினும் ஒன்றுபோலவே நிகழ்ந்தனர் என்பது. பண்பின் - என்பதும் பாடம். 6 1701. | பூதி கோவணஞ் சாதனத் தாற்பொலிந் தாதி தேவர்த மஞ்செழுத் தாமவை யோது நாவணக் கத்தா லுரைப்பவர் பாத நாளும் பரவிய பண்பினார்; |
7 (இ-ள்.) பூதி...பொலிந்து. (அவர்) திருநீறும், கோவணமும், உருத்திராக்கமும் ஆகிய சிவ சின்னங்களாலே பொலிவு பொருந்தி; ஆதி....உரைப்பவர் - ஆதி தேவராகிய சிவபெருமானுடைய திருவைந்தெழுத்தாகிய அவற்றை, ஓதும் நாவின் வணக்கத்தினால் செல்பவருடைய; பாதம் - பாதங்களை; நாளும்...பண்ணினார் - ஒவ்வொருநாளும் துதிக்கும் பண்பினை உடையவர். (வி-ரை.) அன்பர்கள் என்ற அளவால் அவர்களை வணங்குவார் என்று 1697லும், அவர்கள் குலமிலராயினும் குலத்தவராயினும்; அவர்களைப் பணிகுவர் என்று 1698லும், அவர்கள் உலகர் கொள்ளும் நலமிலராயினும் நலத்தினராயினும் அவர்களை அணுகிப் பணிவர் என்று 1699லும், அவர்கள் உண்ணுதற்காகப் பலராய் வரினும் தனியராய்வரினும் அன்புகூர்ந்து அவர்களை அமுதூட்டுவர் என்று 1700லும் கூறினார். ஆனால் அவ்வாறு அணைபவர்கள் அன்பர்கள் என்றதனை எவ்வாறு குலச்சிறையார் அறிந்து அவ்வாறு வழிபட்டார் என்று கேட்பின், அன்பர்களை அவர் அறிந்த சாதனமிவை என்றுணர்த்த எழுந்தது இப்பாட்டு. இவை திருநீறு - கோவணம் - உருத்திராக்கம் - திருவைந்தெழுத்தை ஓதுதல் என்றவை காணப்படுதலேயாம் என்பது. பூதி - திருநீறு. ஐசுவரியம். சிறப்புக் குறிக்கும் வீ என்ற முன்னெழுத்துச் சேர்த்து, வீபூதி - விசேடித்த ஐசுவரியம் என்று தேற்றமாக வழங்கப்படும். அழி |