பக்கம் எண் :


804திருத்தொண்டர் புராணம்

 

உறுதியென உயர்ந்தோரா னெடுக்கப்பட்ட பொருள் நான்கு; அவை அறம் பொருள் இன்பம் வீடென்பன" என்றது திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம்.

உறுதிக்கண் நிற்றல் - அரசர்க்குக் களைகணாய் அறநூல் கூறும் வழி நிற்றல் என்பது ஆறுமுகத் தம்பிரானாருரை.

நின்றுளார் - நிற்றலாவது அரசனது சினம், உலகரது நிந்தை முதலிய எக்காரணத்தாலும் தமது குறிக்கோளாகிய நிலையினின்றும் சிறிதும் விலகாது நிற்றல். உளார் என்ற கருத்துமிது.

ஈறிலர் - என்பதும் பாடம்.

8

1703.

ஆய் செய்கைய ராயவ ராறணி
நாய னார்திருப் பாத நவின்றுளார்;
பாய சீர்புனை பாண்டிமா தேவியார்
மேய தொண்டுக்கு மெய்த்தொணட ராயினார்;

9

(இ-ள்.) அவர்ஆய செய்கையராயஅவர் - அவர் அத்தன்மைத்தாய செய்கையினை யுடையவராகிய அவர்; ஆறு அணி...நவின்றுளார் - ங்கையைச் சூடிய தலைவராகிய சிவபெருமானது திருப்பாதங்களையே இடைவிடாது சொல்லும் இயல்பினையுடையார்; பாய...ஆயினார் - எங்கும் பரப்பிய சிறப்புடைய மங்கையர்க்கரசி யம்மையாருடைய பொருந்திய திருத்தொண்டினுக்கு உண்மைத் தொண்டராயினார்.

(வி-ரை.) ஆய் செய்கையராய் - ஆய - முன் ஏழு திருப்பாட்டுக்களிலும் கூறிய ஒழுக்கத்தினிகழும் செயல்களைச் செய்பவராகிய, முன் ஆறு பாட்டுக்களினும் குணப்பண்பும், ஏழாவது பாட்டில் அதனானிகழும் ஒழுக்கப் பண்பும் கூறி, அதன்படி எல்லாச் செயல்களையும் செய்து நிகழ்பவர் என்பது.

நாயனார் - தலைவர். அடியார்களுக்கு வழங்கும் இப்பெயரும் இப்பொருள் பற்றியது.

பாத நவின்றுளார் - பாதம் - திருவருள். திருவடித் திருத்தாண்டகத்துக்கூறியருளியவை இங்கு நினைவுகூர்தற்பாலன. திருவருளின் பெருமையினையே எப்போதும் சிந்தித்து வந்தித்துக் கொண்டுள்ளார் என்றபடி. இதனால், திண்மை வைப்பினால் அரசனிடத்துக் குலச்சிறையார் செய்யும் திருத்தொண்டின் வழாமை கூறப்பட்டது.

பாய - பரப்பிய. பாய - சீர் - என்றது திருநீற்றினை நாடெங்கும் பரப்பிய சிறப்பு. "தங்கள் பொங்கொளிவெண் டிருநீறு பரப்பி னாரை" என்று பின்னர் அவ்வம்மையார் புராணத்துக் கூறுதல் காண்க. பாய - தன்வினை பிறவினைப் பொருளில் வந்தது.

மேய - மேற்கொண்ட. "மேய தொண்டு அரும்பெறற் தமிழ்நாடுற்ற, திங்கினுக்களவு தேற்றாச் சிந்தையிற் பரிவு கொண்டு" (திருஞான - புரா - 604), மன்னனையும் மன்னுயிர்களையும் தீமை நீங்கித் திருநீற்றுச் செந்நெறியில் நிற்கச் செய்யும் முயற்சியாகிய திருத்தொண்டு

தொண்டுக்கு மெய்த் தொண்டர் - தொண்டினைக் கை கூடும்படி செய்வதற்கு உரிய எல்லாச் சாதனங்களையும் உண்மைத் தன்மையினாற் செய்வோர். இதனை மேல்வரும் பாட்டிற் கூறுவர். இங்குச் சிற்றினங்கொண்ட சில பலர் ஆதரவற்ற புன்மொழிகளால் அம்மையாரைப் பற்றிப் புன்மைப் பொருள் சில புகன்று தமது புன்மையை விளம்பரப்படுத்திக் கொண்டனர். அவ்வெற்றுரைகள் நல்லோரவை முன் சிறிதும் நிலவா என்றொதுக்கப்படுவன.

9