பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்81

 

அகத்து இருள் - "சமயங்க ளானவற்றின் நல்லாறு தெரிந்துணர நம்பரருளாமையினால்" போந்த மயக்கவுணர்ச்சி. "இனி மயங்காது" (1328) என்றது காண்க. இது உயிரின் அறிவை மறைப்பது.

புறத்து இருள் - வெளியே கண்ணொளியை மறைப்பது. இரவு இருளாகிய புற இருள்.

மாறவரும் திருப்பள்ளி எழுச்சி - சிவனருள் வெளிப்பாட்டினால் அகவிருளும், ஞாயிறு வெளிப்படலால் புறவிருளும் மாறும்படி வருகின்ற திருப்பள்ளி எழுச்சியாகிய வழிபாட்டுக்குரிய காலம். "தங்கிருளிரண்டின்" (10) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. "திருப்பள்ளி யெழுச்சிக்கு மலர் தொடுக்கும் தூய பணிப்பொழுதாக" (ஏயர்கோன் புரா - 255) என்றது காண்க.

இது ஞாயிறு உதிக்குமுன் உள்ள கடையாமத்தில் (மூன்றே முக்கால் நாழிகையளவில்) நிகழத்தக்கது. "சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்" (1) எனவும், "அருணனிந் திரன்றிசை யணுகின னிருள்போ யகன்றது வுதயநின் மலர்த்திரு முகத்தின், கருணையின் சூரிய னெழவெழ நயனக் கடிமலர் மலரமற் றண்ணலங் கண்ணாந் திரணிரை யறுபத முரல்வன" (2), எனவும், "கூவின பூங்குயில் கூவின கோழி குருகுக யிளம்பின வியம்பின சங்க, மோவின தாரகை யொளியொளி யுதயத் தொருப்படுகின்றது" (3) எனவும் இதன் தன்மைகளைத் திருவாதவூரடிகள் சுவைபெறத் திருவாசகம் - திருப்பள்ளி யெழுச்சிப் பகுதியில் அருளியவற்றை இங்கு நினைவு கூர்க.

திருப்பள்ளி யெழுச்சியினில் என்றது அந்த வழிபாட்டு நேரத்தைக் குறித்து நின்றது. முன்னை நாள் நாயனார் விடுத்த ஊட்டுவோன், அவர் போலவே பாடலிபுத்திரச் சமண் பள்ளியினின்றும் இரவிற் போந்தனனாயினும், திருப்பள்ளி யெழுச்சி நேரங் கடந்து அம்மையார் பூக்கொய்து நந்தனவனத்தின் புறம்பணையும் பொழுது திருவதிகையிற் சேர்ந்தனன் (1321). ஆனால் அங்ஙனமன்றி, நாயனார் சூலை உடன் தொடரக் கைதருவார் தமையூன்றி நோய்ப்பட்ட நிலையினராகச் சென்றனராயினும் திருப்பள்ளி யெழுச்சிக்கு முன்பே திருமடத்தினை அடைந்தனர். இஃது பெருவிருப்புக் கொண்டணையும் ஆர்வத்தினாலும் திருவருட்டுணையாலும் ஆகியது என்க.

சீறடியார் - திருமுன்பு சிறியராயடைபவர். சிறுத்தொண்ட நாயனார் புராணம் (15) "மிகச் சிறியராயடைந்தார்" என்பது காண்க.

அடைந்தவர் - சூலைக்கிடைந்தடைந்தேன்; கரையேறு நெறி உரைத்து அருளும் (1328) என்றுவந்து அடைந்தவர். அவ்வாறு வேண்டியபடி, நெறி உரைத்தனை 1330-ம் பாட்டானும், அருளும். என்ற பிரார்த்தனையை நிறைவேற்றியதனை 1331- ம் பாட்டானும் இப்பாட்டானும் கூறினார்.

அடைந்து அவரைக் கொடுபுக்கார் - என்று பிரித்து உரைத்தலுமாம். அருள் தீக்கை செய்து மாணவகனைத் தூய்மைசெய்து சிவனருள் பெறத்தக்கவனாக ஆக்கிச் சிவனுடன் சேர்ப்பிக்கும் அளவே ஆசாரியார் செயலாதலின் அம்மையார் அவ்வளவும் செய்தபடி கண்டுகொள்க. இனி, நாயனார் திருவருள் பெற்று உய்ந்தமை கண்டு, தம்மிச்சை நிரம்ப வரம்பெற்று, இதுபோல் யாவர் பெற்றனர்? என்று திளைத்து, இறைவரை இறைஞ்சினர் (1343) என்றதோடு அவர் வரலாற்றை ஆசிரியர் முடித்துக்காட்டுவதும் கண்டுகொள்க.

68

1334.

திரைக்கெடில வீரட்டானத்திருந்த செங்கனக
வரைச்சிலையார் பெருங்கோயில் தொழுதுவலங் கொண்டிறைஞ்சித்
தரைத்தலத்தின் மிசைவீழ்ந்து தம்பிரான் றிருவருளால்
உரைத்தமிழ்மா லைகள்சாத்து முணர்வுபெற வுணர்ந்துரைப்பார்,

69