பக்கம் எண் :


பெருமிழலைக்குறும்ப நாயனார் புராணம்819

 

நலத்தாலே - அணைந்ததற்பின் - பரிசு வாய்ப்பக் கெழுமினார் - நம்பி நாம நவின்ற நலம் முதலில் அணிமாதி சித்திகளை அணைவித்தது; மேலும் காதல் பெருக முதவல்வர் நாமமே எல்லா உறுதியுமாம் என்ற தன்மை வாய்க்கச் செய்தது என்க.

6

1712.

இன்ன வாறே யிவரொழுக வேறு கொடிமே லுயர்த்தவர்தம்
பொன்னின் கழல்கண் மண்ணின்மேற் பொருந்த வந்து வழக்குரைத்து
மன்னு மோலை யவைமுன்பு காட்டி யாண்ட வன்றொண்டர்
சென்னி மதிதோய் மாடமலி கொடுங்கோ ளுரைச்சேர்வுற்றார்.

7

(இ-ள்.) இன்னவாறே இவர் ஒழுக - இவ்வாறாகவே இந்நாயனார் ஒழுகியிருக்க; ஏறு...வன்றொண்டர் - இடப ஏற்றைக் கொடி மேலே பொறித்துத் தூக்கிய சிவபெருமான் தமது பொன் போன்ற இனிய பாதங்கள் மண்ணிற் பொருந்தும்படி நடந்துவந்து வழக்குப் பேசி, நிலைபெற்ற மூலவோலையினைச் சபையின் முன்னே காட்டித் தடுத்தாட்கொண்ட வன்றொண்டர்; சென்னி...சேர்வுற்றார் - உச்சியின்மேல் நிலாத் தோயும்படி உயர்ந்த மாடங்கள் நிறைந்த கொடுங்கோளூரைச் சேர்வுற்றனர்.

(வி-ரை.) இன்ன ஆறே - பிறவாறாய ஒழுக்கங்களைப் பிரித்தமையின் ஏகாரம் பிரிநிலை.

ஒழுக - செயவெனெச்சம் இது நிகழ இது நிகழ்ந்தது என்னும் பொருளில் வந்தது. ஒழுகும் நாளில் என்பது கருத்து. இவர் ஒழுக வன்றொண்டர் சேர்வுற்றார் என்று பிறவினைமுதல் வினைகொண்டு முடிந்தது.

ஏறு கொடிமேல் உயாந்தவர் - இடபக் கொடியையுடையவர் - சிவபெருமான்.

தம்...ஆண்ட வன்றொண்டர் - இச்சரித வரலாறு தடுத்தாட்கொண்ட புராணத்துள் உரைக்கப்பட்டது. (173 - 219). இவ்வரலாற்றுச் சிறப்புப்பற்றி இங்குக் கூறியது அதுபற்றியே அவர் ஆளுடைய நம்பிகள் எனப் பெறுவதும், இது பற்றியே நாயனார் இவர்பாற் பத்தி பண்ணியதும் ஆம் என்ற குறிப்புத்தருதற்கு. "அங்கண ரோலை காட்டி யாண்டவர் தமக்கு நாடு" (147) என்று அவர் புராணந்தொடங்கிக் காட்டியதும் இங்கு நினைவு கூர்க. முதலில் திருவருள் வெளிப்பட நிகழ்ந்த இந்நிகழ்ச்சியே உலகுக்கு நம்பிகளது பெருமையைப் புலப்படுத்தி வழிபடச் செய்ததாம். இக்கருத்தினையே பற்றி ஆளுடைய பிள்ளையார் ஆளுடைய அரசுகளை எதிர்கொண்டபோது "நீண்டவரை வில்லியார் வெஞ்சூலை மடுத்தருளிநேரே முன்னாள், ஆண்டவர செழுந்தருளக் கேட்டு" (1446), என்றதும் "சூலை மடுத்து முன்ணாண்ட தொண்டர்" (1583) என்பதுவும் காண்க.

சென்னி மதிநோய் மாடமலி - மாடங்களின் உயர்வு குறித்தது. உயர்வு நவிற்சி யணி.

வன்றொண்டர் - கொடுங்கோளூரைச் - சேர்வுற்றார் - என்றதனால் நம்பிகள் தாமே தம் தோழராகிய கழறிற்றறிவாரை நினைந்து விருப்பினுடன் மலைநாடணைந்த வரலாறு குறிப்பாலுணர்த்தப்பட்டமை காண்க. இது நம்பிகள் மலைநாட்டுக்கு எழுந்தருளிய இரண்டாவது முறையாம். வெள்ளானைச் சருக்கம். 8, 28, 29 பாட்டுக்கள் பார்க்க.

7

1713.

அஞ்சைக் களத்து நஞ்சுண்ட வமுதைப் பரவி யணைவுறுவார்
செஞ்சொற் றமிழ்மா லைகண்மொழியத் தேவர்பெருமா னருளாலே
மஞ்சிற் றிகழும் வடகயிலைப் பொருப்பி லெய்த வரும்வாழ்வு
நெஞ்சிற் றெளிய விங்குணர்ந்தார் நீடு மிழலைக் குறும்பனார்.

8