வேறு 1335. | நீற்றா னிறைவா கியமே னியுட னிறையன் புறுசிந் தையினே சமிக மாற்றார் புரமாற் றியவே தியரை, மருளும் பிணிமா யையறுத் திடுவான் "கூற்றா யினவா றுவிலக் ககிலீ" ரெனநீ டியகோ திறிருப் பதிகம் போற்றா லுலகே ழின்வருந் தூயரும் போமா றெதிர்நின் றுபுகன் றனரால். |
70 1334.(இ-ள்.) வெளிப்படை. அலைகளையுடைய கெடிலத் திருநதியின் கரையில் உள்ள திருவதிகை வீரட்டானத்தில் இருந்த மேருமலையாகிய வில்லையுடையாரது பெருங்கோயிலினைத் தொழுது, வலமாகவந்து வணங்கி, நிலத்தின் மேல் விழுந்து அட்டாங்கமாக வணக்கம் செய்து, தமது பெருமானது திருவருளால் அவரது புகழைச் சொல்லும் தமிழ்மாலையினைச் சாத்தும் உணர்வு வர உள்ளுணர்ந்து உரைப்பாராகி. 69 1335.(இ-ள்.) வெளிப்படை. திருநீற்றினால் நிறைவாகிய திருமேனியினுடனே, நிறைந்த அன்பு பொருந்திய மனத்தில் நேசம் அதிகரிக்கப், பகைவர்களுடைய புரங்களை எரித்தருளிய வேதியராகிய திரு வீரட்டானேசுவரரை, மருளும் சூலை நோயினையும் மாயையினையும் அறுத்து இடும் பொருட்டுக், "கூற்றாவினவாறு விலக்ககிலீர்" என்று தொடங்.கும், நீடிய கோதில் திருப்பதிகத்தினைப் போற்றுதலினால் உலகில் எழுபிறப்புக்களிலும் வரும் துன்பமும போகும் படி, சந்நிதிக்கு எதிரில் நின்று சொல்லியருளினார். 70 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1334. (வி-ரை.) கெடில வீரட்டானம் - கெடிலத்தின் வடகரையில் உள்ளதலம். யாற்றின் சார்புபற்றியே திருப்பதிகத்துக் கூறப்படுதல் காண்க. செங்கனக வரை - பொன்மலை. மாமேரு வென்ப. "மேருவில் வீரா" திருவிசைப்பா. திரிபுர மெரித்தபோது இறைவர் மேருவை வில்லாகத் தாங்கினார் என்பது வரலாறு. புரமெரித்த வீரம் நிகழ்ந்த இடம் இதுவேயாதலின் இத்தன்மை பொருந்தக் கூறினார். இக்கருத்தினையே தொடர்ந்து மேல்வரும் பாட்டிலும் "மாற்றார் புரமாற்றியவே தியரை" என்பது காண்க. கோயில் தொழுது வலங்கொண்டு இறைஞ்சி - கோயிலைத் தொழுதலும், அதன் பின்னர் அதனை வலங்கொள்ளுதலும், வலஞ்செய்து முடிந்த பின்னருந் தொழுது வணங்குதலும் முறை. தரைத்தலத்தின் மிசை வீழ்ந்து என்றதனால் முன்சொல்லிய தொழுது, இறைஞ்சி என்பன, முன்னர் நின்றபடியே தலைவணங்கிச் செய்யும் வணக்கங்களாம். விழுந்து - எட்டு அங்கமும் ஐந்து அங்கமும் நிலம் பொருந்த வணங்கி. "மண்ணுற வைந்துறுப் பால்வணங்கி" (270) எனவும், "அட்டாங்க பஞ்சாங்கமாக முன்பு முறைமையினால் வணங்கி" (272) எனவும் கூறியவை காண்க. தம்பிரான் - தமக்கும், தம்மை வழிப்படுத்திய தமக்கையாருக்கும் பெருமானாகிய திருவீரட்டானேசுவரருடைய. ஆறனுருபு தொக்கது. திருவருளால் உணர்வுபெற - உணர்ந்து - திருவருள் உண்ணின்று உணர்வினில் உணர்த்த உணர்ந்து. "உரைக்குமா றுரையே" (திருமாளிகை - திருவிசைப்பா - 4) |