நான் பிரிந்து இவ்வுலகில் வாழமாட்டேன் என்று நினைந்து; சிவன் தான்...என்பார் - (அதனால் யோக நெறியின் மூலம்) சிவன் திருவடியை இன்றே சென்று அடைவேன் என்று துணிந்தாராகி, 9 1715. (இ-ள்.) நாலு கரணங்களும் ஒன்றா - மனம் முதலிய கரணங்கள் நான்கும் ஒன்றாக; நல்ல அறிவு மேற்கொண்டு - நல்ல அறிவினை மேற்கொண்டு கருத்துப் பிரமநாடிவழிக் காலும் செலுத்த - உணர்ச்சியானது சுழுமுனை வழியே பிராணவாயுவைச் செலுத்த; கபால நடு...திறப்ப - கபால நடுவினிற் பொருந்தும்படி முன்னே பயின்ற நெறியினால் எடுத்த பிரணவ மந்திரமானது (பிரமரந்திர வாயிலைத்) திறக்க; மூலம் - அவ்வழியின் மூலம்; முதல்வர்...முன் அடைந்தார் - சிவபிரானுடைய திருவடிகளைஅடைவாராகித் திருக்கயிலையை (நம்பிகள் வந்தடைவதற்கு) முன்னே அடைந்தனர். 10 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன. 1714. (வி-ரை.) மண் - இந்நிலவுலகம். திகழ்தலாவது சைவ சமய பரமாசாரியராகிய நம்பிகள் அவதரிக்கப்பெற்ற பேறுடன் பலவும் விளங்குதல். "நாதனுக் கூர்நமக் கூர் நரசிங்க முனையரைய, னாதரித் தீசனுக் காட்செயுமூரணி நாவலூர்" (நம்பி - தேவா). மண்ணில் - வந்த - என்று கூட்டுக. மண்ணில் வருதலாவது திருக்கயிலையினின்றும் "தென்புவி மீது தோன்றி" (37) என்ற ஆணையின்படி அவதரித்தவர். "மண்ணிலே வந்த பிறவியே" (253) என்றதும் கருதுக. "திருநாவலூராளி". (திருவந்தாதி). நண்ணற்கரிய - பிறரால் நேரே சென்று நணுகுதற்கரிய. "ஞானவாரூரரைச் சேரரை யல்லது நாமறியோம், மானவ வாக்கை யொடும்புக் கவரை வனயொளிப் பூண் வானவராலு மருவற் கரிய வடகயிலைக், கோனவன் கோயிற் பெருந்த வத்தோர் தங்கள் கூட்டத்திலே" (திருத்தொண் - திருவந் - 86) என்ற நம்பியாண்டார் நம்பிகள் திருவாக்கும், "கயிலை மால்வரை யாவது காசினி மருங்கு, பயிலு மானுடப் பான்மையோ ரடைவதற் கெளிதோ, வயில்கொள் வேற்படை யமரரு மணுகுதற் கரிதால்" (1630) என்ற திருநாவுக்கரசர் புராணமும், பிறவும் காண்க. நாளை எய்த - என்றதனால் இவ்வுலகை விட்டு, அடுத்த நாளே கயிலை எய்த நெஞ்சிற் றெளிந்தருளினர் என்பதும், அதனை அவர் உள்ள முள்கலந்து அவ்வாறே நாயனார் உணர்ந்து கொண்டார் என்பதும் விளங்கும். "நான் பிரிந்து வாழேன்; இன்றே சென்று யோகத்தாற் சிவன்றாள் அவனவன்" என்பாராகி - என்று கூட்டிக்கொள்க. கண்ணிற் கரிய மணி கழிய வாழ்வார் போல - கழிய - கழிந்த பின்னும்; நாயானர் நம்பிகளைத் தமது கண்ணினுள் மணிபோலக் கருதி வழிபட்டு வந்தன என்பதாம். கண்ணிருந்தும் மணியில்லாதபோது காட்சி நிகழ்தல் கூடாது போலத், தாம் இருந்தும் நம்பிகளில்லாத வழி இறைவனைக் கண்டுகொண்டிருத்தல் இயலாது என்பதும், இறைவனையடைந் தின்புறுதற்குக் குருவருள் இன்றியமையாததென்பதும் குறிப்பு. நம்பியாரூரர் நாமம் நாளும் நவின்ற நலத்தாற் அணிமாதி சித்திகள் அணைந்து, அதன்பின் சிவன் திருவைந்தெழுத்துமே கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு பெற்ற அனுபூதி நிலையினராதலின் நம்பிகள் கூட்டம் இல்லாத உயிர், கருமணியில்லாத கண் போன்றது என்று உணர்ந்தனர் என்க. "கண்ணே கண்ணிற் கருமணியே" (தேவா). வன்றொண்டர் நாளை எய்த - நான் சிவன்தாள் இன்றே சென்று அடைவன் என்றது அவரை எதிர் நோக்கிச்சென்று முன்னின்று அவரருளின் பயனை அடை |