பக்கம் எண் :


824திருத்தொண்டர் புராணம்

 

பூட்டப்பட்ட வாயில் திறத்தல் - கபாலமோட்சம் எனவும், இது, யோகிகள் உயிரினைத் தம் முயற்சியினால் வெளிச் செலுத்தும் முறை எனவும் கூறப. இதன் அடையாளமாக இன்றும் யோகியர்- ஞானியர்- துறவிகள் உயிர்ஒடுங்கிய பின் உடலைச் சமாதி நிலையில் வைக்குமுன் அவர்களது தலையில் தேங்காய்களைச் சிதறச் செய்யும் சடங்கு வழங்கிவருகிறது. தலையோட்டின் உச்சிப்பகுதி முதலில் இருபிளவாகக் கலித்துப், பின்னர்நாட்செல்லப் பற்சக்கரம்போலப் பொருந்தி வலுப்படுதலும் உடைந்தபோது அவ்வாறே இருபிளவாதலும் உடற்கூற்றின் அமைப்பிலும் காணப்படும். இவ்வாயிலை வெளி முயற்சி வகைகளாகிய தாக்குதலின்றி, யோகியர்தாமே திறக்கவல்லவராதல் யோகசாதனைகளுள் ஒன்று என்பது முன் பயின்ற நெறி - திறப்ப என்றதனாற் பெறப்படும். ஏனையோர்க்கு உயிர்பிரிந்து செல்லும் வழிகள் உடலின் ஏனைய பல துவாரங்களுமாம் என்ப.

ஏலவே - பொருந்தவே. பிரமநாடி வழிக் கருத்துச் செலுத்தக் கபால நடு ஏலவே என்க. உயிர்பிரமரந்திர வாயிலைப் பொருந்தச் செய்யவும், அவ்வாயிலைப் பிரணவம் திறக்கவும் அதன் மூலம் அடைந்தார்என்க.

மூலம் அடைந்தார்- திறப்ப - அதன் மூலமாக - வழியாக - அடைந்தார் என்க.

அடைவாராகி அடைந்தார்என்க. அடைவார் முற்றெச்சம்.

முன் வன்றொண்டர்கயிலையை அடைவதற்குமுன் - முன்னாளிலே என்றும், வன்றொண்டர்திருமுன் என்றும் உரைக்க நின்றது.

கபால நடு - மறைமூலம் திறப்ப - தூல சூக்கும காரண முதலிய திருவைந்தெழுத்தே உடலினின்றும் உயிர்பிரிகின்ற காலத்து உடனின்று அத்தொழிலை அவ்வவ்வுயிர்களின் கன்மத்துக்கேற்றவாறு நிகழ்த்துவிப்பன என்பது ஞானநூற்றுணிபு. "துஞ்சும் போதுநின் னாமத் திருவெழுத், தஞ்சுந் தோன்ற வருளுமையாறரே", "சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே", "நாம முரையா வுயிர்போகப் பெறுவே னாகி லுறுநோய்வந் தெத்தனையு முற்றாலென்னே" (தேவா) முதலியனவாக அப்பர்சுவாமிகள் விண்ணப்பித்தவைகள் இக்குறிப்புத் தருவன. "கிரணங்களேழுங் கிளர்ந்தெரி பொங்கிக், காணங்கை விட்டுயிர்தானெழும்போது, மரணங்கை வைத்துயிர்மாற்றிடும் போதும், அரணங்கை கூட்டுவ தஞ்செழுத் தாமே" (9 - 54); "ஞாயிறு திங்க ணவின்றெழு காலத்தி, லாயுறு மந்திர மாரு மறிகிலர், சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும், வாயுற வோதி வழுத்தலு மரமே" (மேற்படி 55); "குருவழி யாய குணங்களினின்று, கருவழி யாய கணக்கை யறுக்க, வரும்வழி மான மறுக்கவல் லார்கட், கருள்வழி காட்டுவ தஞ்செழுத் தாமே" (மேற்படி 57) முதலிய திருமந்திரங்களும் இங்கு சிந்தித்துணர்தற்பாலன.

"கரணநான்குந் தமக்குப் பிரோகமாகலிருக்கும் சுத்தவித்தை ஈசுவரம்சாதாக்கியம் விந்துவென்று பெயர்பெறும் அகர முதலிய நான்கனுள் ஒன்றலு ளொன்றாய் அடங்குங்காற் கரணவியாபார மற்றுச் சித்தவியாபார மாத்திரமாய் நிற்றலின் - நாலு....மேற்கொண்டென்றும், பிரதானநாதம் மும்மண்டல உபாதியால் முச்சுடரின் ஒளி வடிவாயும் தன்னியல்பால் மின்கொடிப் பிழம்பாயு மிருந்தலின் காலும் பிரமநாடி என்றும் கூறினர்;...திறப்ப என்றதனால் அப்பிரணவ கலைகட் கதிட்டானமாயிருக்கும் இதயம் கண்டம தாலு புருவமத்தியம் முதலிய ஸ்தானங்களிலிருக்கும் கமல முடிச்சுக்கள் திறந்தபின் பிரமரந்திரந் திறக்க எனப் பொருள் கொள்க" என்பது இவ்விடத்து ஆறுமுகத்தம்பிரானார் உரை.