1716. | பயிலைச் செறிந்த யோகத்தாற் பரவை கேள்வன் பாதமுறக் கயிலைப் பொருப்ப ரடியடைந்த மிழலைக் குறும்பர்கழல்வணங்கி, மயிலைப் புறங்கொண் மென்சாயன் மகளிர்கிளவி யாழினொடுங் குயிலைப் பொருவுங் காரைக்கா லம்மை பெருமை கூறுவாம். |
11 (இ-ள்.) பயிலை...வணங்கி - பயிலுந் தொழிலை மிகச் செறிவுறச் செய்துவந்த யோக முயற்சியின்றுணையாலே, பரவை யம்மையாரது கேள்வனாராகிய வன்றொண்டப் பெருமானுடைய பாதங்களைப் பிரியாது பொருந்துதற்குக் கயிலை மலைக் கிறைவராகிய சிவபெருமானது திருவடியடைந்த பெருமிழலைக் குறும்ப நாயனாருடைய திருவடிகளை வணங்கி; (அத் துணை கொண்டு) மயிலை....கூறுவாம் - மயிலின் சாயலைப் புறங்கொண்ட வெற்றியுடன் விளங்கும் மெல்லிய சாயலையுடைய மகளிராகிய, யாழினொடு குயிலின் கீதத்தையும் ஒத்துச் சொற்கள் ஒலிக்கும் தன்மை பொருந்திய காரைக்காலம்மையாரது பெருமையை இனிச்சொல்லப் புகுவோம். (வி-ரை.) இப்பாட்டினால் இதுவரை கூறிவந்த புராணத்தை முடித்துக் காட்டி இனிக் கூறப்புகும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார்ஆசிரியர். பயிலைச் செறிந்த - பயில் - பயிற்சி பயிலுந் தொழில். முதனிலைத் தொழிற் பெயர். செறிதல் - மிகுதல், முயற்சியின் செறிவு. யோகம் - ஈண்டு முன் பாட்டிற் கூறிய யோக முயற்சி குறித்தது. "பெருமிழலைக் குறும்பரெனும் பரமயோகி" என்ற பாட்டும் காண்க. யோகத்தார்- என்பது பாடமாயின் யோகியராகிய நாயனார்என்க. பரவை கேள்வராயினும் யோகிகள் வணங்கும் நிலையினர்நம்பிகள். இக்கருத்துப்பற்றியே "துறந்த முனிவர்தொழும் பரவை துணைவர்" என்றனர்சிவப்பிரகாசரும். பாதமுற - அடியடைந்த - பாதங்களைப் பிரிந்து வாழத் தறியாது பொருந்தி வாழும் பொருட்டுத் திருவடியைச் சென்றடைந்த. உற - உறுதல் காரணமாக. உறுதல் காரணமும், அடைதல் காரியமுமாக உரைக்கப்பட்டது கருதுக. அடி அடைதலை உறுதலுக்குச் சாதனமாக வைத்துரைத்தலும் குறிப்பு. "கும்பிட்ட பயன் காண்பார்போல்" (திருஞான - புரா - 1023) என்பதும் கருதத்தக்கது. பாதம் - பத் - பகுதி; நடத்தல் சரித்தல் - "மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத், தீ திலாத்திருத் தொகைதர" வந்து சரித்தனராதவின், அது காரணமாக நாயனார் அவரை வழிபடவந்த குறிப்புத்தரப் பாதம் என்றும், (அடு - பகுதி) குறிக்கொண்டு அடுக்கவேண்டும் இடம் என்ற குறிப்புத் தரப் பொருப்பர் அடி என்றும் கூறினார். "அடியடைவேன்" - திருவந்தாதி. மகளிராகிய அம்மை - என்று கூட்டுக. மகளிர்- சிறப்புப்பன்மை. மயிலைப் புறங்கொள் மென்சாயல் - மயில் - மயிலின் சாயல்; ஆகுபெயர். புறங்கொள்ளுதல் - தோல்வியுறச் செய்தல்; போரிற்றோற்றுப் பின் காட்டி ஓடச் செய்யும் செயல் குறித்தெழுந்த வழக்கு. "தளிரடிமென் னகைமயிலை" (1727) என்றும், "மடநடை மயிலன் னாரை" (1758) என்றும் மேல் இக்கருத்தேபற்றிக் கூறியது காண்க. யாழினொடும் குயிலைப் பொருவும் - கிளவி - அம்மை என்று கூட்டுக. பொருவுதல் - ஒத்திருத்தல். கிளவி - சொல். யாழ் குயில் - அவ்வவற்றின் ஓசைகளைக் குறித்து நின்றன. திருப்பாட்டுக்கள் பாடுதலும் கீதம் பாடுதலும் ஆகிய இயல் இசை என்னும் இரண்டுக்கும் இரண்டுவமை கூறினார். "பேயாரிர்ம் மூவ ரியலிசை வல்லோர்" (திருத்தொண்டர்புராண வரலாறு - 46) என்று உமாபதியார்வகுத்ததனை நினைவு கூர்க. |