மயிலைப் புறங்கொள் சாயல் என்றது அம்மையாரது உலகம்பற்றியநலனையும், கிளவி யாழினொடு குயிலைப் பொருவும் என்றது அவரது சிவம்பற்றிய தெய்வ நலனையும் கூறிய வகையால் சரித முழுமைக்கும் தோற்றுவாய் செய்தபடி கண்டுகொள்க. இவ்வாறு தோற்றுவாய் செய்து காரைக்கால் (அம்மை) என்று தொடங்கிக் கீத முன்பாடும் (அம்மை) (1782) என்று முடித்துக் கூறியதனால் திருவவதாரம் தொடங்கித் திருவடிப்பேறு இறுதியாகக் கூறிய நயமும் கண்டுகொள்ளத் தக்கது. மென்சாயல் - கிளவி - பொருவும் மகளிர்- (வாழ் தற்கிடமாகிய) காரைக்கால் என்று மகளிரின் பொது வியல்பாகக்கொண்டு காரைக்கால் நகரச் சிறப்புப் பற்றி உரை கொண்டனர்முன் உரைகாரர்கள். பெருமை கூறுவாம் - அம்மையாரது பெருமைகளைப் பற்றிச் சிலவற்றைக் கூறுதலல்லது அவர்தம் அற்புதச் சரித முழுமையும் அளவுபடுத்திக் கூறுதல் இயலாது என்பது குறிப்பு. "அடுத்த பெருஞ் சீர்பரவ லாரளவா யினதம்மா" (1781) என்று முடிக்கும் வகையால். அப்பெருமைகளைப் போற்றுதலதானும் யாராலும் அளவுபடுத்தப்படாதது என்று பின்னர்இக்கருத்தே பற்றிக் கூறுதலும் காண்க. பயிலச்செறிந்த - யோகத்தார்- என்பனவும் பாடங்கள். 11 ________ சரிதச் சுருக்கம் :- மிழலை நாட்டில் பெருமிழலை என்பது வளஞ்சிறந்த பழவூர், அது சைவ வொழுக்கத்துள் நிலவும் குடிகள் நிறைந்தது. அதன் அதிபர் குறும்பர் மரபில் வந்தவர். அதனால் பெருமிழலைக் குறும்பனார் என்றறியப் பட்டார். அவர்சிவனடியார்களது குறிப்பறிந்து பணிசெய்தும், அமுதூட்டியும், நிதி நிரம்பக் கொடுத்தும் வந்தார்; சிவபெருமானை மறவாறு மனத்துட்கொண்டு போற்றி வந்தனர். இவ்வாறு நிகழு நாளில் அவர்திருத்தொண்டினது மெய்யாந் தன்மையை உலகுக்கு அறிவுறுத்தித், திருத்தொண்டத் தொகை பாடிய ஆளுடைய நம்பிகளை நித்தம் நியமமாக நினைந்து, மனம் வாக்குக் காயம் என்ற முக்கரணங்களாலும் வழிபடும் கடப்பாட்டில் நின்றனர்; சிவனைச் சேரும் நெறியிதுவே என்று கொண்டு அன்புடன் அந்நெறியினை உய்த்தனர். இப்படியே நாளும் நம்பிகளது திருநாமத்தை நவின்ற நலத்தினாலே அவர் அணிமாவாதி அட்டமா சித்திகளும் கைவரப் பெற்றனர். அதன்பின் அதுவே வழியாகச் சிவன் றிருநாமமாகிய திருவைந் தெழுத்தே தமக்குச் சுற்றமும் பற்றுக்கோடும் உணர்வுமாகும் தன்மை கைவரப் பெற்றனர். இங்ஙனமே அவர்ஒழுகி வருங்காலத்தில் ஆளுடைய நம்பிகள் கொடுங்கோளூரை அடைந்தனர்; ஒருநாள் திருவஞ்சைக்களத் தப்பரைத் துதித்துத் தமிழ் மாலைகள் மொழியச் சிவன்றிருவருளாலே வடகயிலை மலையினைச் சென்றடைய வரும் வாழ்வுபெற நெஞ்சிற்றெளிந்து கொண்டனர். அவ்வாறு நம்பிகளது மனத்துட் போந்த நிகழ்ச்சியினை இங்கு அப்படியே பெருமிழலைக் குறும்பனாரும் உணர்ந்து கொண்டனர்"நம்பிகள் நாளைத் திருக்கயிலை செல்லக், கண்மணியைப் பிரிந்து வாழ்வார்போல் அவரைப் பிரிந்து நான் வாழமாட்டேன்; ஆதலின் இன்றே யோகத்தால் கயிலை சென்று அடைவேன்" என்று துணிந்தனர் குறும்பனார்முன் பயின்ற யோக முயற்சியினாலே பிரம நாடிவழிப் பிராண வாயுவை நல்லறிவு மேற்கொண்டு மதி மண்டலத்துச் செலுத்தப், பிரணவத்தாற் றிறக்கப்பட்ட கபால நடுவாயிலின் மூலம், முதல்வர்திருப்பாதங்களை நம்பிகள் செல்லு முன்பே சென்றடைந்தனர்; நெடுங்காலம் அங்குக் கணநாயகம் பூண்டு நம்பிகளின் உடனமர்ந்து காலாந்தரத்திற் சிவன் திருவடி சேரப் பெற்றனர். |