கற்பனை :- 1. அடியார் வேண்டும் பணிவிடைகள், அவர்உரையாமுன் குறிப்பறிந்து ஏதிரேற்றுச் செய்யத் தக்கன. (1707) 2. அரன் பணியினும் சிறக்க, அடியார்பணியை முன்வைத்துப் போற்றிச் செய்வது சிவன்பாலன்புடைமையை விளக்குவதாம். (1708) 3. அன்பர்கள் பலரும் கூடியணையினும் தொலையாஅமுதூட்டியும், நிதியம் பெருக அளித்தும், அவர்முன்பு குறைந்தடைந்தும் ஒழுகுதல் அடியார்பணிகளுட் சிறப்புடையன. (1708) 4. திருத்தொண்டத்தொகை மெய்யடியார்சித்த நிலரவந் தன்மையுடையது. (1709) 5. ஆளுடைய நம்பிகளது நாமம் நாளும் நவிலும் நலம் காரணமாக ஒருவற்கு அணிமாவாதி அட்டமாசித்திகளும் கைவரப் பெறுதல் எளிது. (1711) 6. அணிமாவாதி அட்டமாசித்திகளும் கைவரப் பெறிதும், பெரியோர்அவற்றுள்ளே மயங்கி நின்றுவிடாது, சிவன் திருவருட்பேற்றையே கருதி முயல்வர். (1711) 7. அணிமாதிசித்தி கைவரப்பெற்றோர்தமது உயிர்அறிவு நிறைதலினாலே ஏனை உயிரிகளினுள்ளே விரவி, உண்ணிகழ்ச்சிகளையும் தாம் இருந்தவிடத் திருந்த வண்ணமே அறிந்துகொள் வல்லவராவர். (1713) 8. நம்பிகளைப் பிரிந்து வாழ்தல் கண்மணி கழிந்தும் வாழ்வதுபோலாம். (1714) 9. யோகப் பயிற்சி பெற்ற பெரியோர்தமது யோக முயற்சியால் தாம் எண்ணியபோது கபால நடுவாயிலைப் பிரணவத்தாற் றிறக்கச் செய்யவும், அவ்வாயிலின் வழியே பிரமநாடி வழியாகப் பிராணவாயுவைச் செலுத்தி மேலேற்றிச் சென்று சிவனடி சேரவும் வல்லவராவர். (1715) 10. சிவனடி யடைதல் அடியாரது கூட்டமடையும் இன்பம் பெறுதற்குக் கருவியுமாகும். (1714) _____தலவிசேடம்:- பெருமிழலை - இது மிழலை நாட்டினைச் சேர்ந்தது. சோழ நாட்டு வீழிமிழலை முதலியவற்றினின்றும் வேறு பிரித்துணரத் தக்கது. "மிழலை நாட்டு மிழலை; வெண்ணிநாட்டு மிழலையே" (நம்பி - நாட்டுத்தொகை - 5). புதுக்கோட்டைச் சீமையில் வெள்ளாற்றுக்குத் தென்கரையில் புதுக்கோட்டைக்கு வடக்கு நான்கு நாழிகையில் உள்ளதென்பர். தில்லை விளாகம் இருப்புப்பாதை நிலையத்தினின்றும் கிழக்கே வழி 1 நாழிகையளவில் அடையத் தக்க தென்றும் கூறுவர். புதுக்கோட்டைச் சீமை திருமெய்யத்துக்கு மேற்கே உள்ள பேரையூரினின்றும மேற்கில் நாழிகையளவில் தேவமலையில் உள்ள குடவறையில் சிவலிங்கத் திருவுவின்முன் யோகநிலையில் அமர்ந்த சடைமுடியுடைய முனிவர்உருவம் குறும்ப நாயனாருடைய திருவுருவம் என்று கருதப்படுகின்றது. (படம் பார்க்க) பெருமிழலைக் குறும்ப நாயனார்புராணம் முற்றும். |