"உனையுரைக்குமா றுணர்த்தே" (திருவா) என்றபடி உரைக்கும் உணர்வைத்தந்து உரைக்க வைத்தார் என்க. "காட்டு வித்தா லாரொருவர் காணாதாரே; காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே" என்பது இக்கருத்துப்பற்றிய நாயனார் திருவாக்கு. எனவே நாயனார் திருவாக்குக்கள் இறைவனே உணர்த்த உணர்ந்து அருளப்பட்ட அருட்டிருவாக்குக்களேயாம் என்பது. உரைப்பார் - உரைப்பாராகி. முற்றெச்சம். உரைப்பார் - புகன்றனர் என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. தொழுது - வலங்கொண்டு - இறைஞ்சி - வீழ்ந்து என்பவை காயத்திலும், உணர்ந்து என்பது மனத்தினிலும், உரைப்பார் - என்பது வாக்கிலும் கூடும் நிழ்ச்சிகள். இவை தேவார அருளிப்பாட்டுக்குமுன் நிகழ்ந்தவை. அதன்பின் நிகழ்பவை மேல்வரும் பாட்டினுள் மேனி - நேசம் - போற்றால் - புகன்றனர் என்பவற்றால் உரைக்கப்படுவன. 69 1335.(வி-ரை.) நீற்றால் நிறைவாகிய மேனி - நீற்றால் - திலகவதியார் அஞ்செழுத்தோதி அளித்த திருநீற்றினால் நிறைவாகிய மேனி. அதனை உருவார அணிந்தாராதலின் (1332) அது மேனிமுழுதும் நிறைவாகியது. முன்னர் நீறின்றிக் குறைவாயிருந்த மேனி இப்போது நீறிட்டமையால் குறைதீர்ந்து நிறைவாகியது என்ற குறிப்பும் காண்க. நிறை அன்பு - நேசம்மிக - குலவியெழும் பெருவிருப்பு (1327) என்றபடி அன்பு நிறைந்திருக்க அது மேன்மேலும் மிக்கது - அதிகரித்தது - என்க. நிறை அன்பு - சாதனம்; நேசம் மிகுதல் - பயன். இதனை வேட்கை என்பர். மாற்றார்புரம் மாற்றிய வேதியர் - திரிபுரமெரித்த வீரட்டானேசுவரர். "முப்புரமாவது மும்மல காரியம்" (திருமூலர் - திருமந்திரம்) என்றபடி பிணியும் மாயையும் அறுக்கவல்லவர் புரமெரித்த அவரே என்பது குறிப்பு. வேதியர் - வேதத்தைச் சொன்னவர் - வேதத்தின் பொருளாவார். வேதத்தில் விளங்குபவர் என்றபடி. வேதித்தல் - வேறு படுத்துதல் என்று கொண்டு உரைத்தலுமாம். அழித்தலாவது வேறுபடுத்தலேயாம். "பொருட்டன்மை அழியாது; உருவம் அழியும்" என்பது உண்மை. மாற்றிய என்ற கருத்தும் காணத்தக்கது. மருளும் பிணி மாயை அறுத்திடுவான் - இங்குப் பிணி - இறைவர் அருளாகிய திரோதான உருவத்தில் நின்றதனை அருட் சத்தியாக மாற்றுதலும், மாயை - முன்னர் இருளாய் நின்றதனை ஒளியாக மாற்றுதலுமே அறுத்தல் எனப்பட்டது என்க. மாயை - பிறவிநோய் என்ற பொருளில் வந்தது. பிணி - இப்பிறவியும், மாயை இனிவரும் பிறவிகளின் மூலமும் என்க. மாயை அப்பொருளில் வந்த தென்பது உலகேழின் வருந்துயரும் போமாறு என்றதனாலும் விளங்கும். அறுத்து இடுவான் - அறுத்து அருள்நிறைவில் இடும்பொருட்டு. இடுதல் - வைத்தல். வானீற்று வினையெச்சம் புகன்றனர் என்ற வினைமுற்றுக் கொண்டது. மருளும் பிணி - மயங்குதற் கேதுவாகிய பிணி. மருளும் என்ற பெயரெச்சம் ஏதுப் பொருள் கொண்டது. "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" - இது நாயனார் அருளிய முதற்றிருப்பதிகத்தின் தொடக்கம். நீடுதல் - அழியாது நிலைத்தல். கோதில் - கோதினை இல்லையாகச் செய்தல். திரு - முத்தித் திரு. நீடிய என்பதனைக் கோது என்பதற்கு அடையாக்கிச் சிறப்பும்மை விரித்து அநாதி தொட்டுச் சகசமாய் உடனிருக்கும் மூலமலத்தின் வலிமையையும் இல்லையார்க்கும் என உரைக்கவும் நின்றது. கோதில் என்றதனால் பாசநீக்கமும், திரு என்றதனால் சிவப்பேறும் குறிக்கப்பட்டன. திருப்பதிகம் - |