பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்831

 

பிற பண்டங்களையுங் கொள்க. "கடலேறித் திரைமோதிக் காவிரியி னுடன் வந்து கங்குல் வைகித், திடலேறிச் சுரிசங்கம் வெண்முத்தங் கீன்றலைக்குந் திருவை யாறே" (மேகரா - பிள் - தேவா) என்ற திருப்பாட்டின் கருத்தை இங்கு வைத்துக் காண்க.

குறிப்பு :-1இதனை அடுத்து, இரண்டாவது பாட்டாகப் "பீடுகெழு" என்று தொடங்கும் ஒரு பாட்டுச் சில பிரதிகளிற் காணப்படுகின்றது. பொருத்த மின்மை, பொருள் சிறவாமை முதலிய பலவாற்றாலும் அது வெளிபாடலென்னும் இடைச்செருகல் என்று கருதப்படும்.

1

1718.

வங்கமலி கடற்காரைக் காலின்கண் வாழ்வணிகர்
தங்கள்குலத் தலைவனார்தனதத்த னார்தவத்தால்
அங்கவர்பாற் றிருமடந்தை யவதரித்தா ளெனவந்து
பொங்கியபே ரழகுமிகப் புனிதவதி யார்பிறந்தார்.

2

(இ-ள்.) வங்கமலி...தவத்தால் - கலங்கள் மலிந்த கடற்கரையில் உள்ள காரைக்கால் நகரில் வாழும் வணிகர்குலத் தலைவராகிய தனதத்தனாரது தவத்தினாலே; அங்கு....என - அவ்விடத்தில் அவரிடத்தில் திருமடந்தை அவதரித்தனள் என்னும்படி; வந்து...பிறந்தார்- பொங்கிய பேரழகு மிகும்படி புனிதவதியார்வந்து.... பிறந்தருளினார்.

(வி-ரை.) வங்கம் - மரக்கலங்கள். கடற்கரை நகரங்கள், கலங்கள் வந்து செல்லும்படி அமைப்புடைய கடலின் புடை விளங்குதலால் அந்நகர்களை வாணிபத்தால் வளஞ் செய்வன. அதிபத்தர்புராணம் (3) பார்க்க. நாகையைப் போலவே காரைக்காலும் துறை முகப் பட்டினமாதல் காண்க. இச்சரித விளைவில் வங்கங்களின் தொடர்பில் பின்னர் 1748 - 1750 பாட்டுக்களின் செய்திபற்றிய முற்குறிப்புமாம்.

தனதத்தன் - தத்தன் என்பது முன்னாளில் வணிகர்க்குப் பெருவழக்காய் வழங்கிய மரபுப் பெயர். பரமதத்தன் எனப் பின்னர்வருவதும் காண்க.

தனதத்தனார் தவத்தால் - அரும்பெரும் தவம் முன்பு செய்த காரணத்தால் தான் இத்தகைய சிவஞ்சிறந்த மகப்பேறு பெறுதல் கூடுமென்பது. "கூத்தனா ரருளாலே - பிழைக்குநெறி தமக்குதவப் பெண்கொடியைப் பெற்றெடுத்தார்" (876) என்ற விடத்துரைத்தவை பார்க்க.

திருமடந்தை அவதரித்தாள் என - திருமடந்தை - முத்தித் திருவின் தெய்வாகிய பராசக்தி. "வாயு மனமுங் கடந்த மனோன்மனி....அரனுக்குத், தாயு மகளுநற் றாரமு மாவளே" (திருமந்திரம் - 4 - 295); "இமவான் மகட்குத் தன்னுடையகேள்வன் மகன் றகப்பன்" (திருவாசகம் - பொற் - 13) என்பனவாதி திருவாக்குக்களின் வண்ணம், சிவபெருமான் "அம்மை" என்றழைக்கும் தகுதிபற்றி அம்மையாருக்குச் சத்தியார்தாம் ஒப்பாவார்என்ற தன்மையால் இவ்வாறு கூறினார். பின்னர்த் "தாமரைத் தவிசின் வைகுந் தனித்திரு வென்ன" (1758)

________

1பீடுகெழு பெருந்தெருவும் புத்தரொடு பீலியமண்
வேட முடை யவர்பொருள்போ லாகாய வெளிமறைக்கும்
ஆடுகொடி யணிநெடுமா ளிகைநிரைக ளலைகமுகின்
காடனைய கடற்படப்பை யெனவிளங்குங் நவின்காட்டும்.

மாளிகைகளின் மேல், வரிசைபெற நெருங்கி விளங்கும் கொடிகள், கமுகுச் சோலைபோல உள்ளன; அவை ஆகாய வெளியை மறைத்தலினால் ஆகாயம் என்ற தொரு பூதம் இல்லை என்று மறுத்துக்கூறும் புத்தர்சமணர்களின் பொருள்போலவும் இருந்தன. தெருவுகள் இவ்வாறு அழகுபெற விளங்கின என்பது கருத்து.