1722. (இ-ள்.) உறுப்பு நூலவர்- உடற்கூற்று நூல் வல்லவர்கள்; நல்ல என உரைக்கும் நலம் நிரம்பி - இவையிவை நல்லன என்று எடுத்துக் கூறும் நலங்கள் எல்லாம் நிரம்பப் பெற்று; மல்கு.....மாட்சியினால் - பொருந்திய பேரழகு மேன்மேல் மிகப் பெருக வருகின்ற மாண்பினாலே; இல் இகவாப் பருவத்தில் - வீட்டினின்றும் வெளியே செல்லலாகாத பருவம் வர; இவர்கள்....தொடங்குவார் - இவர்களது மரபுக்குப் பொருந்தும் பழங்குடியில் வந்த வணிகர்கள் பெண்பேசத் தொடங்குவாராகி; 6 1723. (இ-ள்.) வெளிப்படை. சிறப்பினால் நீடிய கடற்கரைப் பட்டினமாகிய நாகைப்பட்டினத்தில் நிதிபதி என்ற பெயருடன் உலகில் பெருமைபெறும் புகழுடைய வணிகன் பெற்ற குலமகனுக்கு ஒத்த மரபில் தேடவருகின்ற திருக்குலத்தில் வந்த இச் சிறந்த அம்மையாரைப் பெண் பேசும்பொருட்டு, மாடங்கள் நிறைந்த காரைக்கால் என்னும் வளநகரில் அறிவுடைப் பெரியோர்களை வரவிடுத்தனர். 7 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1722. (வி-ரை.) உறுப்பு நூலவர் - உடல் உறுப்புக்களின் இலக்கணங்களை வகுக்கும் நூல் வல்லவர். சாமுத்திரிக இலக்கணம் என்பர்வடவர். நல்ல என உரைக்கும் நலம் இன்னின்னவாறு உள்ள இவை இவை உறுப்புக்களில் நல்ல இலக்கணங்கள் என்று கூறும் நன்மைகள் யாவையும் முற்றும்மை தொக்கது. இல் இகவரப்பருவம் - பெண்மை நலம் நிரம்பப்பெற்ற பருவத்தின்பின் பெண்களை வீட்டைவிட்டு வெளியிற் செல்லவிடாது செறிவித்துப் பாதுகாத்தல் மூதறிவின் நமது முந்தையோர் கைக்கொண்ட நன்முறை இதனை இற்செறிவித்தல் என்று அகப் பொருணூல்கள் பேசும். "உற்று நோக்கியெம் மெல்லியலைப், போய்விளை யாடலென றாளன்னையம்பலத் தான்புரத்திற், றீவிளை யாடநின் றேவிளை யாடி திருமலைக்கே" (திருக்கோவை - 133 இற்செறிவறிவித்து வரைவு கடாதல்). இந் நல்வழக்கு இந்நாளில் நாகரிகம் என்ற பெயரால் நழுவவிடப்பட்டுப் பல் கேடுகளுக் கிடனாகி வருதல் மிக வருந்தத் தக்கது. இவர்கள் மரபினுக் கேற்கும் தொல்குலத்து வணிகர் - மரபும் குலம் குடியும் தொன்மையும் பொருந்துமாறு பற்றியே மகட்பேசி மணம் புரிதல் நமது முன்னோர்வழக்கு. "ஒத்தகுல முதல்வேளாண் குடித்தலைவர்" (1287); "குணம்பேசிக் குலம்பேசி" (1289); "சைவ, அந்தணர்குலத்துத் தங்க ளரும்பெரு மரபுக் கேற்ப வந்ததோர்சிறப்பில்" (153); "குலமுத லறிவின் மிக்கார்கோத்திர முறையுந் தேர்ந்தரர்" (154); "ஓங்குகுல மரபினராய்" (881) "மறையவரில் ஏற்றகுலத் தோடிசைவால்" (திருஞான - புரா - 1161); முதலியவை காண்க. இந்நாளில் மனம் போனவாறெங்கும் வரம்பின்றிச் செல்லும் தத்தம் கூடா வொழுக்கங்களுக் கெல்லாம் இம் மாபுராணத்தினுள் ஆதராந் தேடியலையும் புன்றலைமாக்கள் இங்குக் கூறிய ஒழுக்க முறைகளைக்கண் டமைவுபட் டொழுத முயல்வாராயின் நலம் பெறலாம். மகட் பேசுதல் - மணமகளாகப் பெண்ணைத் தரும்படி உரியனவற்றைப் பேசுதல். மரபு வழக்கு. தொடங்குவார் - முற்றெச்சம். தொடங்குவாராகி வரவிட்டார் - என மேல்வரும் பாட்டுடன் கூட்டுக. மகட் பேசத் தொடங்குவார் - மணமகன் வீட்டார் பக்கமிருந்து பெண் பெற்றார்பால் முதியோர்வந்து மணப்பேச்சுத் தொடங்குதலும் முந்தையோர் மரபு. 6 |