பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்837

 

1723. (வி-ரை.) நிதிபதி என்று உலகின்கண் பாடுபெறு புகழ்வணிகன் - நிதிபதி என்ற பெயரால் உலகில் பெருமையும் புகழும் பெற்றவன். நிதிபதி என்று என்றமையால் அப்பெயர்இடுகுறி யளவானன்றிக் காரணக்குறி பெற்றமைந்தது போன்ற செல்வச் சிறப்புடையான் என்று உலகோர்பாராட்ட என்பது குறிப்பு. பாடு - பெருமை.

பயந்த குலமைந்தன் - பயந்த - பெற்ற. இரட்டுற மொழிதலால் அஞ்சிய என்று, "தணிவரும் பய மேற்கொள்ள வுள்ளமுந் தடுமா றெய்தி" (1747) என்று பின்னர்பயந்த - அஞ்சிய - சரிதத்தின் முற்குறிப்புமாம்.

வரவிட்டார் - வணிகர்மகட் பேசுதற்குத் தொடங்குவார்- மகட் பேசி முடிக்கும் திறமை வாய்ந்த மூதறிவோர்களை வரவிடுத்தனர். "மூதறிவோர்" என்பதை மேல்வரும் பாட்டினின்றும் வருவித்துக் கொள்க. இவ்வாறு அறிவின் முதியோரை அனுப்பி மணங்குறித்து மகட் பேசுவது முந்தையோர்வழக்கு. "குலமுத லறிவின் மிக்கார்" (154) என்றதும், ஆளுடைய பிள்ளையாருக்குமணம் செய்விக்க நம்பாண்டார்நம்பிகளிடம் தாதையாரும் தொண்டர்களும் வேதியரும் உடனேகினர்(திருஞான - புரா - 1163) என்பதும், பிறவும் காண்க.

7

1724.

வந்தமூ தறிவோர்கண் மணங்குறித்த மனைபுகுந்து,
தந்தையாந் தனதத்தன் றனைநேர்ந்து, "நீபயந்த
பைந்தொடியை நிதிபதிமைந் தன்பரம தத்தனுக்கு
முந்தைமர பினுக்கேற்கு முறைமைமணம் புரி" கென்றார்.

8

(இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு வரவிட்ட மூதறிவாளர்கள் மணம் பேசப் பெண் குறித்த மனையிற் புகுந்து, பெண்ணின் தந்தையாகிய தனதத்தனை அடைந்து "நீ பெற்ற பைந்தொடியை நிதிபதியின் மகனுக்கு முந்தையோரின் மரபினுக்குப் பொருந்தும் முறையால் மணம் புரிக" என்று சொன்னார்கள்.

(வி-ரை.) இப்பாட்டால் மூதறிவோர்கள் மகட்பெற்றாரிடம் சேர்ந்து பேசும் மரபு அறிவிக்கப்பட்டது.

வந்த - "வர விட்டார்" என்று முன்பாட்டிற் கூறியபடி வரவிடப்பட்டு வந்த.

மணம் குறித்த - மணச் செய்தி பேசுதல் குறித்த.

நேர்ந்து - மரபின் முறைப்படி நேர்பட்டு நலம் வினவுதல் முதலிய எல்லாம் செய்து முடித்து.

"நீ பயந்த....புரிக" என்றார் - மூதறிவோர்கள் பெண் பெற்றாரிடம் பெண் பேசும் வழக்கு. நீ பயந்த பைந்தொடி - தனதத்தனுக்குப் புனிதவதியார்ஒரே மகளார்ஆனபடியால் இன்னார்என்றறிவிக்க வேண்டியதின்றி "உனது பெண்" என்றமட்டில் கூறியமைந்தார்.

நிதிபதி மைந்தன் பரமதத்தனுக்கு - மணமகனது பெயர்முதலியனவும், அவன் தந்தை பெயர், குலம் முதலியனவும் அறிவிக்க வேண்டியது முறையாகலின் விரித்துக் கூறியபடியாம்.

முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை - தொன்மை - குல ஒப்புமை முதலிய குலமுறை பொருந்தும் தன்மை. "இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி" (முருகு) என்ற கருத்துக் காண்க.

முறைமை - மணம் செய்தற்குரிய குல முறைமை.

புரிக என்றார் என்றதும் புரிகென்றார்என நின்றது. வியங்கோள்; வேண்டிக் கோடல் என்னும் பொருளில் வந்தது.