(இ-ள்.) மகட்கொடையின்.......கொடுத்ததன்பின் - மகளை மணஞ்செய்து கொடுத்த அதனால் மிகவும் மகிழ்ச்சி பெருகுதற்கேதுவாக அளவில்லாத தனங்களையெல்லாம் (தனதத்தன்) கொடுத்ததன் பின்னர்; நிகர்ப்பரிய....குலமகனும் - ஒப்பற்ற பெருஞ்சிறப்பினையுடைய நிதிபதியின் மகனாகிய பரமதத்தனும்; தகைப்பில் பெரும்....மேவினான் - அடங்காத பெருவிருப்பினால் மனையில் தங்கியபடி இல்வாழ்க்கையின் வரும் எல்லா வளங்களையும் தனது மரபுக்கேற்ற முயற்சிகளால் பெருகச்செய்து மிகுதியாக்கும் வாணிபச் செய்கைகளில் மேன்மையடைந்த நிலையைப் பொருந்தினான். (வி-ரை.) தனதத்தன் கொடுத்ததற்பின் - என்று எழுவாய் முன் பாட்டிலிருந்து வருவிக்க. அணிமாடம் மருங்கமைத்ததன்றி மற்றும் தணி வாழ்க்கைக்கு வேண்டிய தனங்களை எல்லாம் அளவில்லாது அளித்தனன். மகட்கொடை - பெண் கொடுத்த நிலை. மகட்கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பில் தனம் - வரம்பில்லாத சீதனப்பொருள்கள் என்க. மகிழ் சிறக்கும் தனம் - மகட்கொடை நேர்ந்தபோது உடன் கொடுக்கும் சீதனத்தின் அளவே பெண்கொண்டாருக்கு உளதாம் மகிழ்ச்சியின் அளவும், அது கண்டு பெண் பெற்றார்மகிழும் அளவுமாம் என்பது உலகியல்பிற் காணப்படும் உண்மையாதல் குறிப்பு. கொடுத்ததற்பின் - இதுவரை மகட்கொடுத்தாரின் செயல் கூறி இனி, மகட்கொண்டார்அதனைப் பயன்படுத்தும் வகையால் கணவன் செயல் மேற்கூறுகின்றார். குலமகன் - குலம் - நன்மை என்ற பொருளில் வந்தது. தகைப்பு - அளவுபடுதல். காதல் - இல்வாழ்க்கையின் விருப்பம் என்ற பொருள் தந்து நின்றது. மணைவளம்...கொள்கை - மனையின்கண் இருந்தபடியே பெரும் இலாபங்கருதிச் செய்யும் வாணிபம். வீட்டைவிட்டு வெளியே சென்று கலம் ஏறியும், வேற்று நாடு புகுந்தும் பொருள் ஈட்டும் வாணிபமும் இவர்க்கு உரித்தாதலின் வேறாய் அறியப்படுதற்கு மனைவளம் பெருக்கி மிகப் புரியும் என்றார். மற்ற வாணிபம் மேல் 1748 - 1751 வரை பாட்டுக்களிற் காண்க. பெருக்கி மிகப் புரியும் பொருகச் செய்து அப்பெருக்கு மேன்மேலும் மிகும்படியும் செய்கின்ற கொள்கை. குறித்த வாணிபம் என்ற பொருளில் வந்தது. 13 1730. | ஆங்கவன்ற னில்வாழ்க்கை யருந்துணையா யமர்கின்ற பூங்குழலா ரவர்தாமும் பொருவிடையார்திருவடிக்கீழ் ஓங்கியவன் புறுகாத லொழிவின்றி மிகப்பெருகப் பாங்கில்வரு மனையறத்தின் பண்புவழா மையிற்பயில்வார்; |
14 1731. | நம்பரடி யாரணைந்தா னல்லதிரு வமுதளித்துஞ் செம்பொன்னு நவமணியுஞ் செழுந்துகிலு முதலான தம்பரிவி னாலவர்க்குத் தகுதியின்வேண வேகொடுத்தும் உம்பர்பிரான் றிருவடிக்கீ ழுணர்வுமிக வொழுகுநாள்; |
15 1732. | பாங்குடைய நெறியின்கட் பயில்பரம தத்தனுக்கு மாங்கனிக ளோரிரண்டு வந்தணைந்தார்சிலர்கொடுப்ப வாங்கவைதான் முன்வாங்கி யவர்வேண்டுங் குறையளித்தே "யீங்கிவற்றை யில்லத்துக் கொடுக்க" வென வியம்பினான். |
16 |