தாமும் "மிகப் பெருக"ப் பயில்வாராயினர். ஆனால் அவன் மிகப் புரிந்தது உலகவளம்; இவர்மிகப் பெருகச் செய்தது திருவடிக்கீழ் ஓங்கிய அன்புறு காதல் என்னும் பொருள், மற்று, அது பொருளல்லாத மனைவளம்; இது பொருளாகிய திருவடிக் காதல் என்றதாம். பாங்கில் வரும் மனையறத்தின் பண்பு - மனையறம் கணவன் கண்ட வழியிற் பிறழாது நின்றே மனைவியால் இயற்றப்படும் தன்மை. வழாமையிற் பயில்வார்- அளித்தும் - கொடுத்தும் - உணர்வு மிக ஒழுகும் என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடித்துக்கொள்க. வழாமையிற் பயில்வார் என்ற தன்மையினை மேல்வரும் பாட்டில் விரிக்கின்றார். மிகப் பெருகப் - பயில்வார் - வாணிபத்தாற் பொருளினைப் பெருக்குதல் வணிகர்க்குரியதாதலின் அக்குறிப்புப்பட மிகப் பெருக என்றார். மேல்வரும் பாட்டில் இதனைத் தொடர்ந்து மிக என்றதும் காண்க. பூங்கொடியார் - வழாமைப்பயில்வார்- என்பனவும் பாடங்கள். 14 1731. (வி-ரை.) நம்பர்அடியார் - நம்பரின் அடியார்என்றும், நம்பரும் அடியாரும் என்றும், நம்பராகிய அடியார்என்றும் உரைக்க நின்றது. மேற்சரித விளைவில் "பரமனார்திருத்தொண்டர்" (1733) என்பதும், அதனைத் தொடர்ந்துஅவ்வாறே "வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த்தொண்டர்" (1734), "விடையவன்றனடியாரே" (1735); "அல்லறீர்ப்பவ ரடியார்" (1736) என்பவையும் கருதுக. அணைந்தால் - கணவன், சிவனடிமைத் திறம் பேணும் குணநலம் பெற்றானல்லனாதலின் அவன் சென்று அடியாரைத் தேடிக்கொண்டு வரு நியதியில்லை; பாங்கில் வரு மனையறத்தின் பண்பு வழாமைப் பயில்வாராதலின் அம்மையார்தாம் மனைப்புறம் போய் அடியார்களை நாடி அழைத்து வரவும் இயைபில்லை; ஆதலின் அடியார்தாமே அணைந்தால் என்றது குறிப்பு. நல்ல திருவமுது - "உண்டி நாலு விதத்திலாறு சுவைத் திறத்தினில்" (443) என்றபடி எல்லா நலங்களையுமுடைய திருவமுது. உண்டோர்க்கே யன்றி இட்டோர்க்கும் நன்மை பயக்கும் திருவமுது என்பதும் குறிப்பு. செம்பொன்னும் நவமணியும் - தகுதியின் வேண்டுவ - நம்பர்அடியார்கள் பொன்னும் மணியும் விரும்பார்; ஓடுஞ் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்; ஆதலின் அவர்க்கு அம்மையார்வேண்டுவ கொடுத்து என்ற தென்னையோ?எனின், அவ்வடியார்தங்கள்பால் வேண்டிய பிறர்க்கு உதவும் பொருட்டு என்க. "நீணிதி வேண்டினார்க் கீவ, தொன்று மற்றிலேன்" (திருஞான - (424) என்று "ஈவதொன்றெமக் கில்லையேல்" என்னும் தேவாரத்தின் பொருளை ஆசிரியர்விளக்கம் செய்தது இங்குக் கருதத்தக்கது. "இருநிதிக் கிழவன் றானே முன்பெரு நிதியமேந்தி மொழிவழி யேவல் கேட்ப" (465) என்ற விடத்துரைத்தவையும், இடங்கழி நாயனார்புராண வரலாறும், பிறவுங் கருதுக. செழுந்துகிலும் முதலான தகுதியின் வேண்டுவ - என்றது அணைந்த அடியார்களின் வயது - திருமேனி நிலை முதலிய நிலைகளின் தகுதி குறித்தது. தமது தகுதியும், பிற தகுதியுமாம். 1735 பார்க்க. வேண்டுவ - குறிப்பாலறிந்துகொண்டு, கொடுக்க அவசியமானவற்றை அடியார்கள் விரும்பி வேண்டுவதியல்பன்றாதலானும், வேண்டியபின் கொடுத்தல் சிறப்பன்றாதலானும் அவர்கள் தம்பாற் கேட்டவற்றை என்றுரைப்பது சிறப்பன்று. "நிலைகண்டு" (1734) என்பது காண்க. |