உதவுதல். கை - பகுதிப்பொருளை உறுதிப்படுத்தும் முன் னொட்டுமொழி. உபசர்க்கம் என்பர் வடவர். அஃதாவது - திருஅமுதுமட்டும் சமைக்கப்பட்டு ஏனைக்கறி வகைகள் ஒன்றும் சமைக்கப்படாத முற்பகல் நேரம் என்பதாம். "பெரும்பகலின்கண்" (1738) எனப் பின் வணிகன் வந்த நேரத்தைக் கூறுவதும் காண்க. வெறிமலர்மேல் திருஅனையார் - வெறிமலர் - உச்சியிலிருக்கும் ஆயிரம் இதழ்த் தாமரை எனப்படும் யோகத்தானம், ஞானாம்பிகை எழுந்தருளியிருக்கும் தாமரை. திரு - முத்தித்திருவின் முதல்வி. "திருமடந்தை" (1718) என்ற விடத்துரைத்தவை காண்க, அடியாரே பெறல் அரிய விருந்தானால் - ஏகாரம் சிவனடியார்கள் விருந்தாகி வந்து உதவும் அருமை தெரிந்து நிற்றலிற் பிரிநிலை. அறிவு - அறிந்துகொண்ட துணிபு என்ற பொருளில் வந்தது. ஆதரித்தல் - அன்புடன் வழிவகை சூழ்ந்து ஏற்றன செய்தல். 19 1736. (வி-ரை.) இல்லாளன் - இல் - வீடு; வீட்டுக்கு உடையவன்; ஆள்பவன். மாங்கனியிரண்டும் தனக்கேயாக்கி மனைவியார்க்கும் பிறர்க்கும் இல்லையாக்கிக்கொண்டவன். அதன்பயனும், அந்த இல்லும் தனக்கில்லாதவனாவன் என்ற குறிப்புப்பட இப்பெயராற் கூறிய நயமும் காண்க. வைக்க என - இது, கனிகள் கொண்டு வந்த ஏவலன் மூலம் கணவன் கூறிவிடுத்த செய்தி. என - இருந்த - என்று கொடுத்ததன் மூலம் தம்மிடம் இருந்த. நல்ல நறுமாங்கனிகள் - இரண்டு அடைமொழிகள், அக்கனிகள் பயன்படுமாற்றைப்பற்றிய தன்மைபற்றி இருவகை குறித்தன. நல்ல கனியொன்று - நறுங் கனியொன்றாக உள்ள கனிகள் என்க. இவற்றுள் முறையே நல்ல கனி முதலில் நல்விருந்தாகிய நம்பரடியார்க்கும், மற்றை நறுங்கனி, "மதுரமிக வாய்ந்து நாவின் "இனிய சுவை" மட்டில் லமைந்ததாய், உடம்பினோடு கழியும் சுற்றமாகிய கணவனுக்கும் பயன்படும் வகையும் கருதுக. ஒன்றை - ஒப்பற்றதை என்ற குறிப்பும்பட நின்றது. அவ்வொன்றே முதலில் அடியார்க்காகி, அதன்மூலம் இறைவனுக்கு ஆகிப், பின்னர்அருள் வெளிப்பாடு பெறக் கணவனுக்குமாகி முடிவில் உண்மை புலப்படுக்கும் சான்றாகவும் பயன்படும் சரித விளைவினால் ஒப்பற்றதேயாம் என்க. வல் விரைந்து அணைந்து படைத்து - நிலைமை கண்டு நாதன்ற னடியாரைபப்சி தீர்ப்பதில் அம்மையார்க்குள்ள ஆர்வத்தின் மிகுதிப்பாடுபற்றிய விரைவு வல்விரைந்து என்ற ஒரு பொருட் பன்மொழி விரைவின் மிகுதி குறித்தது வந்து - அணைந்து - படைத்து என்ற வினையெச்சங்களின் விரைந்த தொடர்பும் அப்பொருளைப் புலப்படுத்துவன. மனமகிழ்ச்சி - நாதன்றனடியார்பசிதீரக் கண்ட மகிழ்ச்சி. அல்லல் தீர்ப்பவர்அடியார்தமை - அல்லல் தீர்ப்பவர்தமை - அடியார்தமை என்று பிரித்துரைக்கவும் நின்றது. அல்லல் தீர்ப்பவர் - "பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து" சிவன் சேவடிக்கடிமை பழகிவரும் பாங்கு பெறக் காதல் ததும்பவரும்மொழி பயின்று, "எஞ்ஞான்று தீர்ப்ப திடர்?" என்று விண்ணப்பித்து நின்ற அம்மையார் வேண்டியவாறே இறைவர், அல்லல் எல்லாம் தீர்க்கப்புகும் இடம் இதுவாதலின் இச் சிறப்பாற் கூறினார். |