பக்கம் எண் :


850திருத்தொண்டர் புராணம்

 

1739.

இன்னடிசில் கறிகளுட னெய்துமுறை யிட்டதற்பின்
மன்னியசீரிக் கணவன்றான் மணையிடைமுன் வைப்பித்த
நன்மதுர மாங்கனியி லிருந்ததனை நறுங்கூந்தல்
அன்னமனை யார்தாமுங் கொடுவந்து கலத்தளித்தார்.

23

1738. (இ-ள்.) மற்று அவர்தாம் போயினபின் - மற்று அத்தொண்டர் போயின பின்; மனைப்பதி...அயில மனையின் உடையவானகிய பரமதத்தன் நண்பகலில் மிகப் பெரியதாகிய அவ்வீட்டில் வந்து சேர்ந்து முன் அழகு பொருந்தக் குளித்து உட்புகுந்து உணவினை விரும்பி உண்ண; கற்புடைய....ஊட்டுவார் - கற்புடைய மனைவியாராகிய அம்மையாரும் தமது மனைக் கடமை முறைப்படி கணவனை உண்பிப்பாராகி,

22

1739. (இ-ள்.) இன் அடிசில்.....இட்டதற்பின் - இனிய திருவமுதினைக் கறி வகைகளுடன் பொருந்தும் முறையில் வைத்ததன் பின்பு; மன்னியசீர்......இருந்ததனை - பொருந்திய சிறப்புடைய கணவன்தான் முன்பு மனையினிடை அனுப்பு வைப்பித்தபடி உள்ள நல்ல சுவை பொருந்திய மாங்கனிகளில் எஞ்சி நின்ற ஒன்றை; நறும் கூந்தல்....அளித்தார்- நறுமணம் பொருந்திய கூந்தலினையுடைய அம்மையாரும் கொண்டுவந்து பரிகலத்தில் அளித்தனர்.

23

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1738. (வி-ரை.) மற்று அவர்தாம் - மற்று - என்பது வினை மாற்றின் கண்ணும், தாம் என்பது சிறப்பின் கண்ணும் வந்தன. அவர்- திருத்தொண்டர் என்று முன்பாட்டிற் கூறிய அவர்என முன்னறி சுட்டு.

மனைப்பதி பதி முதல்வன் - உடையவன். இவனது முதன்மைத் தன்மை - உடைமைத் தன்மை - இவ்வீட்டின் மட்டில் நின்று ஒழிவது என்பதும், முன்போயின அவருடைய (முதன்மை) உடையராந் தன்மை மேலும் செல்வதென்பதும் குறிக்க மனைப்பதி என்றார். அவர் போலன்றி இவன் மனைப்பதி மட்டுமாவன் என்பதாம்.

உற்றபெரும் பகலின்கண்...எய்தி பெரும்பகல் - பகல் பதினைந்து நாழிகையளவில் உள்ள நாட்கூறு. இதுவே முன்னாளில் உணவுண்ண வகுத்த வேளை என்க. அதற்குமுன் ஒருமுறை இருமுறையும் சிற்றுணவு பேருணவு உட்கொள்ளும் இந்நாளின் புது வழக்கு நோய்க் கிடமாவதாம். "ஒருபோது யோகி" இருபோது போகி முப்போது ரோகி" என வழங்கும் முதுமொழியும், "இரண்டு பொழுதும் பறை நிகழ்ச்சிச் சொல்லாற் சாற்றிச் சோறிட்டார்" (1524) என்றதும் காண்க. "Noon Breakfast" என்ற முறையைக் கைக்கொள்ளத் தொடங்கும் நவீனர்வழக்கும் காணத் தக்கது.

ஓங்கிய பேர்இல் எய்தி - அன்று அடியார்"ஒருவர்" திருவமுது செய்தமையால் ஓங்கிய என்றும், அடுத்துத் திருவருள் வெளிப்பாடுபெற உள்ளமையால் பேர்என்றும் சிறப்பித்தார். இல் எய்தி - தொழில் செய்யுமிடத்தினின்றும் என்க. அது இல்லினின்றும் வேறிடத்தமைந்தது என்பது முன்னர்"இல்லத்துக் கொடுக்க" என்பதனாலும் பெறப்பட்டது.

முன் நீராடிப் புகுந்து அடிசில் புரிந்துஅயில - முன் - தொழில் செய்யுமிடத்தினின்றும் வந்தமையாலும் நீராடி நியமமுடித் துண்ணுதல் முறைமையாதலாலும் முன் நீராடி என்றார். புகுந்து - உணவு கொள்ளும் தனியிடம் புகுந்தது. அடிசில் புரிந்து - உணவு விரும்பியிருக்க என்க. "இருக்க" என்றது இசையெச்சம்.

அயில - அயிலும்படி - உட்கொள்ளும்படி. அயில - ஊட்டுவார் (1738) இட்டதற்பின் - கொடுவந்து - அளித்தார்- (1739) என்று வரும்பாட்டுடன் முடிக்க.