பக்கம் எண் :


பேயார் என்கிற காரைக்காலம்மையார் புராணம்851

 

கற்புடைய மனையாரும் - வணிகன் - புரிந்து (இருக்க), மனையாரும் ஊட்டுவார் என்றும் உம்மை இறந்தது தழுவிய எச்ச உம்மை. கற்புடைய மனையார் என்றதனால் இங்கு ஊட்டியது மனைவியார் என்ற நிலையில் மனையறத்தின் வழாது காக்கவேண்டிய கற்பின் கடமைபற்றி என்பது குறிப்பு. கடப்பாட்டின் என்ற கருத்து மிது. முன்னர்"நாதன்ற னடியாரைப் பசிதீர்ப்பேன்" என்று கொண்டு "ஏதந்தீர் நல்விருந்தா வின்னடிசில் ஊட்டுவார்" (1734) என்றது சிவனடிமைத் திறத்தின் வந்த திருத்தொண்டின் உரிமை பற்றி யாதலில் அதனின்றும் பிரித்துணரும்படி இங்குக் "கற்புடைய மனையாரும் கடப்பாட்டின்" என்றார். கடப்பாடு - இப்பிறவியில் வந்த உடற்சுற்றமாகிய கணவனுக்குச் செய்யும் கடமைத்திறம். பின்னர்"மன்னிய கற்பினோடு மனையறம் புரிந்து வைக" (1755) என்று கணவனைச் சிலகாலம் பிரிந்திருந்த நிலையிலும், "இவனுக்காகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்திங்கு" (1765) என்று அவனை முற்றும் பிரியும் நிலையிலும் இக்கருத்தே பற்றிக் கூறுதலும் கருதுக.

மடவாரும் - என்பதும் பாடம்.

22

1739. (வி-ரை.) இன்அடிசில்...கறிகளுடன் இட்டதற்பின் - "சிந்தத் தெளிந்தவர்சேடம் பருகிடின், முந்தியா மென்று மூலன் மொழிந்ததே" (1-164) என்று திருமூலதேவர்எடுத்தோதும் சிறப்பு வாய்ந்து இங்குத் திருத்தொண்டர்அருந்தி மிகுந்திருந்தது இவ்வடிசில் ஆதலின் இன் அடிசில் என்று சிறப்பித்தார்; கறிகள் அங்கு அடியார்க் குதவாதன ஆதலின் சிறப்பு அடைமொழியின்றி வாளா கூறினார்.

எய்துமுறை இட்டதற்பின் - எய்துமுறை - பொருந்தும் முறையாவது பரிகாலத்தில் இடும் வகையும் உண்ணும் வகையும் நோக்கி அவ்வக்காலமும் இடமும் பொருந்துதல். இடுதல் - அவ்வாறு பொருந்த இடுதல் குறித்தது. பின் - கறிகளின் பின் கனி உண்ண உதவு முறையிலும் இடத்திலும்.

வைப்பித்த - வைக்கவென்று சொல்லிப் பிறர்மூலம் அனுப்பினபடி வைக்கச் செய்த. வணிகன் தனக்கொன்று கருதி வைப்பித்தான் என அம்மையார்கருதினார்என்று குறிக்கக் கணவன் தான் வைப்பித்த என்றார்.

நன் மதுர மாங்கனியில் இருந்ததனை - நன்மை கொண்டதும் சுவை கொண்டதுமாகிய கனிகள் இரண்டு. முன்னரும் "நல்லநறு மாங்கனிகள்" (1736) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. இரண்டனுள் நலம் பெற்றது அடியார்க் காயினமையின், சுவை அளவில் நின்றது எஞ்சியிருந்தது; அதனை என்க. சுவை மட்டில் கொண்ட தென்பது மேல், "மதுரமிக வாய்ந்தகனி" (1740) என்பதனாலும் பெறப்படும். இருந்ததணை - எஞ்சியிருந்ததை; எஞ்சி என்பது எஞ்சி நின்றது.

தாமும் - தான் வைப்பித்த கனியைக் கொண்டு அவ்வாறே வைத்த அவர்தாமும் என எச்ச உம்மை.

கலம் - பரிகலம். அளித்தார் - அன்புடனிடுதல் குறித்தது.

23

1740.

 மனைவியார்தாம்படைத்த மதுரமிக வாய்ந்தகனி
 தனைநுகர்ந்த வினியசுவை யாராமைத் தார்வணிகன்
"இணையதொரு பழமின்னு முளததனை யிடுக!"வென,
 வனையதுதாங் கொண்டுவர வணைவார்போ லங்ககன்றார்.

24

(இ-ள்.) மனைவியார்...ஆராமை - மனைவியார்தாம் கொடுவந்து கலத்தில் அளித்த மிக்க மதுரம் வாய்ந்த அந்த மாங்கனியினை நுகர்ந்ததன் சுவையினால்