பக்கம் எண் :


852திருத்தொண்டர் புராணம்

 

ஆசை நிரம்பப் பெறாமையால்; தார்வணிகன் - மாலை யணிந்த வணிகனாகிய பரமதத்தன்; இனையது....என - இதனைப்போன்ற பழம் ஒன்று இன்னும் உள்ளது; அதனையும் இடுக என்று சொல்ல; அனையது......அகன்றார்- அனையதனைத் தாம் கொண்டுவரச் செல்வார்போல அங்கு நின்றும் நீங்கினார்.

(வி-ரை.) மனைவியார்தாம் படைத்த மதுரமிக வாய்ந்த - படைத்ததனால் தன்னியல்பின் மேலும் உறுசுவையினை வாய்க்கப் பெற்ற என்பது. அன்புடன் இடும் உணவு, இயல்பிற் சுவை பெறாவிடினும் சுவை பெறுதென்பதும் அவ்வாறு படைக்கப்படாதது இயல்பிற் சுவையுடைத் தேனும் சுவை பெறாதென்பதும் நீதி இங்கு அதன் மேலும் மனைவியார்தாமே படைத்ததனாற் சுவை மிகப்பெற்ற தென்பதாம். இது உலக அனுபவத்தினின்றும் காணவுள்ள உண்மையாம். இவ்வாறிருப்பவும் ஏவலாளர்களாகிய பரிசனங்கள் படைத்தூட்ட உண்ணும் அன்பு கலவாத முறை இந்நாளிற் பெருகி வருவது மக்கள் கீழ்நிலை யடைந்து வருதலைக்காட்டுவதாகும்.

இனிய சுவை ஆராமை....என - வணிகன் "அதனை இடுக" என்று சொன்னதற்கு நாவின்சுவை நுகர்ச்சியின்பம் ஆராமையே காரணம் என்றவாறு. நாவின் சுவை நுகர்ச்சியாகிய புலனின்பம் ஏனைய நேர்மைகளைக் கீழ்ப்படுத்தி வணிகனை நேர்மை தவறிய நெறியில் ஒழுகச் செய்தது என்பதறிவித்தபடி ஈண்டு உய்த்துணர்ந்து கொள்ளத்தக்கது. நேர்மைகளாவன - அனுப்பியவற்றுள் எஞ்சிய இன்னும் ஒரு பழம் உள்ளதா? அன்றிப் பயன்படுத்தப்பட்டதா? என்று வினவவேண்டிய கடமை; அப்படி அது பயன்படுத்தப்படாமல் எஞ்சியிருப்பினும் இனிய சுவையைத் தான் நுகர்ந்தின்புற்றது போலவே தன் மனைவியாரும் நுகர்தல் வேண்டும் என்று எண்ணவேண்டிய கடமை; பழம் இரண்டினுள் ஒன்று தனக்குப் பயன்பட மற்றொன்று மனைவியாரின் பங்குக்குரிய - தனது நன்மை தீமைகளிலும் உடைமைகளிலும் மனைவியாரும் சரிபங்குக்குடையவர்என்று எண்ணவேண்டிய கடமை; என்றின்னோரன்ன பலவும் உலக நிலையில் ஈண்டுக்கொள்ளத் தக்கன இனி உயர்நிலையினும் யான்பெற்ற இன்பம் பெறுகவிவ் வையகம் (திருமந்திரம்) என்றபடி தானின்புற்றதுபோலப் பிறருமின்புறக் காமுறும் கடமை; தென்புலத்தார்முதலிய நால்வரையும், துறந்தார்முதலிய மூவரையும் தன்னைப் போலவே கண்டு பகிர்ந்துண்ணும் கடமை முதலிய நேர்மைகளும் காணத்தக்கன.

இங்கு இவ்வணிகன் "அழுக்குடைப் புலன்வழி யிழுக்கத்தி னொழுகி, வளைவாய்த் தூண்டிலி னுள்ளிரை விழுங்கும், பன்மீன் போலவும்" (கோயினான்மணி மாலை - 28) என்றபடி நாவின் புலனுக் கடிமைப்பட்டு நன்னெறி யிழந்தான். இனி, நன் மனைவியாராய்த் தன்னை மேனெறி யுய்க்கவல்ல அரும்பெறல் தெய்மாகிய அம்மையாரையும் இழக்க உள்ளவனாயினான். இந்நாள் நாவின் புலனுக் கடிமைப்பட்டுப் பல்வகை விருந்தும், சிற்றுண்டியும், பேருண்டியும் பான வகைகளும் என்றின்னோரன்னவற்றுக் கடிமையாகிய நவீன உலகம் அடையும் கேடுகளும் செய்யும் தீமைகளும் அளக்க வொண்ணாதன! அந்தோ! கொடிது! கொடிது! ஈண்டு இவற்றின் உண்மைத் தன்மை கண்டு உலகம் உய்வதாக.

இனையது ஒரு பழம் இன்னும் உளது - தான் வரவிடுத்த இரண்டனுள் என்பது இசையெச்சம். உளது - எஞ்சி உள்ளது.

அனையது தாம் கொண்டுவர அணைவார்போல் அங்கு அகன்றார் - இங்கு அம்மையார்அப்பழத்தினை அடியார்க்களித்த செய்தியினை அந்நிலையே கூறாது, கொண்டு வருவார்போல அகன்றதென்னையோ? எனின், "வைக்க" என்று கணவன் வரவிடுத்த கனிகளை அவனது சொல்வழியா னன்றித் தாம்