வணங்கி - விடம் வளர்தற் கிடமாகிய கண்டருடைய திருவடிகளை மனத்துட் பொருந்த வணங்கிக் கொண்டு; எய்தவரும்...கணவனுக்கு - சுவை பொருந்தும்படி கொண்டு வந்த அந்தக் கனியினை அளித்தவர்யாவர்? என்று கேட்ட கணவனுக்கு; மொய்....மொழிந்தார்- பூங்குழலினையுடைய அம்மையார்அக்கனி புகுந்த வரலாற்றினை உள்ளவாறே, மறை விடுத்துச் சொன்னார். 28 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1743. (வி-ரை.) இப்பாட்டுக் கணவன் இக்கனி....எங்குப் பெற்றதுஎன்று கேட்டபோது அம்மையாரது திருமனம் அடைந்த நிலையினையும் அதனுள் எழுந்த தம்முள் மாறுபட்ட எண்ணங்களையும் நன்கு எடுத்து விளக்கும் அரிய சிறப்பு வாய்ந்தது. உரை செய்யார் - விளம்பல் விடமாட்டார் - ஒரு காரணத்தால் உரை செய்யவு மாட்டார்; மற்றொரு காரணத்தால் உரை செய்யாது விடவுமாட்டார்என்க. உரை செய்யார் - சொல்லாமைக்குக் காரணம் ஒருவர்தம்பால் நிகழ்ந்த சிவனருட் செயலை வெளியிற் சொல்லத்தகாது என்ற விதி. கணவன் உரை காத்தலாவது கணவன் கேட்டதற்குப் பொய் விடை கூறாமை. விளம்பல் விடமாட்டார் - சொல்லாது விடாமைக்குக் காரணம் கற்புடை நெறியாற் கணவனுரை காவாமை மெய்வழியன்றென்னும் விதி. எனவே இகத்தும் பரத்தும் வரும் கடமைகளின் முரண்பாடு கருத்து. விதிர்ப்புறுவார் - உடல் நடுங்குவாராகி, முற்றெச்சம், முன்னர் மாங்கனியில்லை என்று சொல்லவும் மாட்டாது, உண்டு என்று கொண்டு அளிக்கவும் மாட்டாது மனந்தளர்ந்தபோது "நின்றயர்வார்" (1741) என்றார். இங்கு அதனினும் மேற்பட்ட மனத்தளர்வும் தடுமாற்றமும் நிகழ, அது உள்ளடங்காது உரிய மெய்ப் பாட்டினையும் விளைத்து விட்டதென்பார் விதிர்ப்புறுவார் என்றார். மெய்ப்பாடு கூறவே மனத்தினுள் நிகழ்ந்த மிக்க தடுமாற்றம் தானே போதருமென்பது. 1744. (வி-ரை.) செய்தபடி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தால் - முன்பாட்டிற் கூறிய மனத்தடுமாற்றத்தினை மாற்றி ஒருவழியிற் றுணிந்த வகையைக் கூறியபடி. தமக்குச் சிவனருள் செய்ததனைப் பிறருக்குரைத்தல் குற்றம்; வினவிய கணவனுக்கு உண்மை கூறாது மாறுபடக் கூறுதலும் குற்றம்; என் செய்வதென்று எண்ணமிட்டு நடுங்கிய அம்மையார், "எவ்வாறாயினுமாகுக உண்மை நிகழ்ச்சியைக் கூறுவதே கடமை" என்று துணிந்தனர்என்க. இறைவன் சத் என்னும் சத்திய வுருவனன் ஆதலின் உண்மை கூறுதல் அவனருளுக்கு மாறுபடாது. அதுவே கணவனாருரை காவாமை என்ற குற்றமும் சாராமற் செய்யும் ஆதலின் அவ்வாறு துணிந்தனர். சீலம் - நல்லொழுக்கம். சீலத்தால் - சீலத்துணிபினால். மை தழையும்....வணங்கி - பிறருக்குக் கூறலாகாத அருளை எடுத்துச் சொல்லப் புகுகின்றாராதலின் அதற்குத் தீர்வு தேடிக்கொள்வார்போன்று அடி வணங்கினார்என்பது குறிப்பு. மை - விடம். தழைதல் - விடத்தன்மை மாறி அருட்டன்மை பெற்று நீடியிருந்தல். அது தன்னை நினைத்தோரைத் துன்பநீக்கி இன்பமுற்றிருக்கச் செய்யும் எனத் தழைவித்தல் என்று பிறவினைப் பொருள் கொள்ளுதலுமாம். திருநீலகண்ட நாயானர்சரிதமும், திருநீலகண்டப் பதிகக் கருத்தும் காண்க. மனத்துற - மனம் முழுமையும் பொருந்த. மெய்ம்மறந்து.....மனங்கொண்டு (1741) என்ற நிலையில் மீளவும் நின்று என்பதாம். புகுந்தபடி தனை - கனி தமது கையினில் வந்து புகுந்தபடியினை - வகையினை. படி - விதம்; வழி - புகுந்து படிதனை என்றதனால் கனியினை அடியார்க்கு அளித்தது. |