மண்டுகொள்க. பிறர் குறைகளை எடுத்துச் சொல்லாது உய்த்துணர வைத்தலும், மேம்பாடுகளை எடுத்துச் சொல்லுதலும் பெரியோர்மரபாம். நிதியொன்று கருதியே இவ்வாறாகிய இணைப்பில்லாத மணங்கள் பலவும் நிகழக் காண்பது காலக்கொடுமை. வாச மலர்த்திரு - ஞானமுத்தித் திரு. அருளம்மை. "திருமடந்தை" (1718), "தாமரைத் தவிசின் வைகும் தனித்திரு" (1758) பார்க்க. வாச மலர்- உச்சியில் விளங்கும் ஆயிரம் இதழ்த் தாமரை. திருவருளேல் - திருவருளில் தெளிவுபெறாது அவநம்பிக்கை கொண்டதனால் திருவருளாயின் என்றான்; அதனோடு அதனைத் தெளிவுபடுதற்கு இன்னொரு கனியைச் சான்றாக அழைக்கவும் வேண்டினான்- ஆசீல் - இவ்வாறே குற்றமில்லாது குணமுடைய. மற்றதுதான் - என்பதும் பாடம். 29 1746. | 1பாங்ககன்று மனைவியார் பணியணிவார் தமைப்பரவி, "யீங்கிதளித் தருளீரே லேன்னுரைபோய் யா" மென்ன மாங்கனியொன் றருளால்வந் தெய்துதலு மற்றதனை யாங்கவன்கைக் கொடுத்தலுமே யதிசயித்து வாங்கினான். |
30 (இ-ள்.) பாங்கன்று.....என்ன - அங்கு நின்றும் அம்மையார்நீங்கிச் சென்று, பாம்புகளை அணியும் பெருமானைத் துதித்து, "ஈங்கு இதனை அளித்தருள்செய்யீராயின் என்சொல் பொய்யாகும்" என்று வேண்ட; மாங்கனி...எய்துதலும் - ஒரு மாம்பழம் திருவருளால் அவரது கையில் வந்து பொருந்துதலும், மற்று அதனை..... வாங்கினான்- மற்று அக்கனியை அவ்விடத்தில் அவ்வணிகன் கையிற் கொடுத்தலும் அவன் அதிசயப்பட்டு அதனை வாங்கினான். (வி-ரை.) பாங்கு அகன்று - பாங்கு - இடம்; உணவுண்ட அவ்விடத்தினின்றும். பாங்கின் - என நீக்கப் பொருளில் வரும் ஐந்தனுருபு தொக்கது. பாங்கு - தன்மை என்றுகொண்டு கற்பின் தன்மை என்ற குறிப்புப்பட உரைத்தலுமாம். அகன்று - முன்னர்ச் சென்றுஅருளாற் கனி பெற்ற அவ்விடத்துக்குப் போய். மனைவியார் - மனையாராதலின் கணவன் கேட்ட சொற்கடவாத கற்புநிலையால் அகன்றனர்என்ற குறிப்புப்பட இங்கு மனைவியார் என்றார். "இல்லிறைவன்" என்ற குறிப்புக்கேற்க உரைத்த நயம் காண்க. பணியணிவார் - "பணியணிவார்கழற்கடிமை பழகிவரும் பாங்கு" (1719) என்றவிடத்துரைத்தவை பார்க்க. பணியணியும் தன்மைபற்றி எண்ணிவந்தராதலின் இங்கும் அது பற்றியே பரவினார் என்பதாம். விடமுள்ள தீய பாம்பினை அமுதமயமாக்கி யணிதல்போல மலமுள்ள உயிர்களை மலநீக்கம் செய்து தம்பரலமரச் செய்வார்என்பது குறிப்புப் போலும். தம் குறைகளையே எண்ணி விண்ணப்பித்து அவற்றை நீக்கி ஆட்கொள்ள வேண்டுவது பெரியோர்மரபு. "ஈங்கு.....பொய்யாம்" என்ன - ஈங்கு - இவ்விடத்து இச்சமயத்தில் என்றலுமாம். இது - கணவன் வேண்டிய இது. "இன்னமும் ஒர்கனி" என்ற இது. என் உரை பொய்யாம் - இது அளிப்பினும் அளிக்காவிடினும் உன் அருள் பொய்யாகாது; அது என்றும் உள்ள உண்மையே என்பதனை நான் திண்ணமாய் உணர்வேன். ஆனால் அளித்தருளாவிடின் என் உரைத்தான் பொய்யாகும் இக்கணவனிடத்து என்றபடி. அவ்வாறு என் உரை பொய்யாமாயின் உன் அடிமைத்திறம் பழிப்படும் என்பதன்றி எனக்காவதொன்றில்லை என்பதும் குறிப்பு. "காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி" (தேவா); "உன் அடியானென்றேசப்பட்டேன்" (திருவாசகம்). |