பக்கம் எண் :


860திருத்தொண்டர் புராணம்

 

தார்கள் - நெருங்கிய பல சுற்றத்தாராகிய வடுவில்லாத சிறப்பினையுடைய வணிகமாக்கள் அதன் பொருட்டு மரக்கலத்தைச் செய்வித்தார்கள்.

32

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.

1747. (வி-ரை.) பின்னை - அதிசயித்து வாங்கிய பின்பு. காணான் - காணாதவனாகி. வணிகனும் - காணான் - மேற்கொள்ள - எய்திய - கருதி - துணிவுகொண்டு - ஒழுகுநாளில் (1747) - முயற்சி செய்வான் - என்ன வணிக மாக்கள் - சமைப்பித்தார்கள் (1748) என்று கூட்டிமுடிக்க. வணிகன் - என்ன வணிக மாக்கள் - சமைப்பித்தார்கள் என்று வினையெச்சங்கள் பிறவினைமுதல் வினைகொண்டு முடிந்தன. வணிகன் இங்குத் தன்வயத்தனாலன்றிப் பிறவயத்தனாய் நின்ற சரித இயைபும் குறிப்பு.

பயம் மேற்கொள்ள - பயம் - அச்சம்; மேற்கொள்ளுதல் - பற்றிக் கொள்ளுதல். அச்சமாவது - அவரோடு உடனுறைதல் தனக்குத் தகாது என்ற எண்ணம்.

வேறு ஓர் அணங்கு - மானுட அணங்கு அல்லாது பிறிது தெய்வ வகையுட் பட்டதோர் அணங்கு. அணங்கு - தெய்வப் பெண். "நற்பெருந் தெய்வ மாதல் நானறிந்து" (1763) என்பது காண்க.

நீங்கும் துணிவு - உடனுறையத் தனக்குத் தகுதியின்மையால் தான் அவரை விட்டு நீங்கிவிடுதல் வேண்டுமென்னும் முடிவு. அவரது சார்பில் தான் வாழ்ந்தமையால் அவரை நீக்குதல் இயலாமையின் தான் நீங்கத் துணிந்தான்.

எவர்க்கும் சொல்லான் - இந்நிகழ்ச்சியை வேறெவர்க்கும் சொல்ல அஞ்சினான்; ஆதலின் வெளிச்சொல்லாது மனத்துள்ளடக்கிக் கொண்டு. தொடர்பு - கணவனும் மனைவியாரும் என்ற இல்லறத் தொடர்வு, ஏவல் கொள்ளுதல் முதலியன.

31

1748. (வி-ரை.) விடுவதே - தான் நீங்கிவிடுவதே. எண்ணமாக - கருத்தாக. மனத்துணிவாக. மேவிய - அதனை முடித்தற்குப் பொருந்திய. செய்வான் - செய்வானாகி முற்றெச்சம். வணிகன் என்ற எழுவாய் வருவிக்க. செய்வான் - என்ன என்று கூட்டுக. செய்வான் - வானீற்று வினையெச்சாகக் கொண்டு, செய்யும் பொருட்டு என்றலுமாம்.

படுதிரை.....கொணர்வேன் - இது வணிகன் தன் சுற்றித்தாரிடம் சொல்லியது. "திரைகட லோடியுந் திரவியந் தேடு" என்பது மூதாட்டியின் பழமொழி யாதலின், கடலிற் சென்று பொருளீட்டுதல் மிகப் பழங்கால முதல் தமிழர்களிடையே வழக்கமாயிருந்தது. பட்டினப்பாலையினும், சிலப்பதிகாரத்துட் காவிரிப் பூம்பட்டினச் சிறப்பினும் இவ்வழக்கினை நன்கு காணலாம். மொழி நூல் ஆராய்ச்சியாளர்கள் கண்ட முடிபுகளானும் பல்லாயிரம் ஆண்டுகளின் முன் தமிழர்கடல் கடந்து வாணிபம் செய்த வரலாறுகள் காணப்படுகின்றன. "ஊறுபொருளின்றமி ழியற்கிளவி தேருமட மாதருடனார், வேறுதிசை யாடவர்கள் கூறவிசை தேருமெழில் வேதவனமே" (4-பிள்- சாதாரி) என்ற தேவாரத்தினும் இவ்வாணி பக் குறிப்புக் காணப்படுகின்றதென்பர். அம்மையாரை விட்டு நீங்குதற்கு ஒரு தந்திர நெறியாகக் கடல் வாணிபஞ் செய்யப் புகுவேன் என்ற வாணிபமுறையினை வெளிக்காட்டினன் வணிகன் என்பதாம். "பொருள் வயிற்பிரிவு" என்று அகப்பொருள் நூலிலக்கணத்துள் அறியப்படுகின்றபடி பொருளீட்டச் செல்லும் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லுதலேயன்றி, உடன்கொண்டு செல்லும் வழக்கில்லையாதலின் மனைவியாரைப் பிரிந்து செல்லுதல் பற்றி இங்கு யாவரும் ஐயங்கொள்ளார். அன்றியும் "முந்நீர்வழக்க மகடூஉவொ டில்லை" (தொல்காப்பியம்) என்பது பழந்தமிழ ரிலக்கண மாதலானும் அவன் மனைவியாரை உடன்கொண்டு செல்லாது விட்டுப் பிரிந்து செல்வதும் முறையாகக் காட்டிற்று.